பிரதமர் அலுவலகம்
திண்டுக்கல் காந்திகிராம் ஊரகக் கல்வி நிறுவனத்தின் 36 ஆவது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Posted On:
11 NOV 2022 6:03PM by PIB Chennai
தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என். ரவி அவர்களே, தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க..ஸ்டாலின் அவர்களே, காந்திகிராம் ஊரக கல்வி நிறுவனத்தின் வேந்தர் டாக்டர் கே.எம்.அண்ணாமலை அவர்களே, துணை வேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங் அவர்களே, ஆசிரியர்களே, ஊழியர்களே, பிரகாசமிக்க மாணவர்களே, அவர்களின் பெருமைமிகு பெற்றோர்களே வணக்கம்
இன்று பட்டம் பெறும் அனைத்து இளம் மனங்களுக்கும் வாழ்த்துக்கள். மாணவர்களின் பெற்றோர்களையும் நான் வாழ்த்துகிறேன். உங்களின் தியாகங்கள் தான் இன்றைய நிகழ்வை உருவாக்கியுள்ளது. கற்பிக்கும் ஆசிரியர்களும் மற்ற ஊழியர்களும் பாராட்டுக்குரியவர்கள்.
நண்பர்களே,
பட்டமளிப்பு விழாவிற்கு இங்கு வந்திருப்பது எனக்கு மிகவும் ஊக்கமளிக்கும் அனுபவமாகும். காந்திகிராம் என்பது மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்டது. இயற்கை அழகு, நிலையான கிராமப்புற வாழ்க்கை, எளிய ஆனால் அறிவார்ந்த சூழல், ஊரக வளர்ச்சியில் மகாத்மா காந்தியின் சிந்தனை உணர்வை இங்கே ஒருவர் காண முடியும். எனது இளம் நண்பர்களே, நீங்கள் மிக முக்கியமான தருணத்தில் பட்டம் பெறுகிறீர்கள். காந்திய மாண்புகள் மிகவும் பொருத்தமானவையாக மாறிவருகின்றன. மோதல் போக்குகளுக்கு முடிவு கட்டுவதாக இருக்கலாம் அல்லது பருவநிலைப் பிரச்சனையாக இருக்கலாம் மகாத்மா காந்தியின் சிந்தனைகள் இன்றைய கொதிநிலை பிரச்சனைகள் பலவற்றுக்கு விடைகளைக் கொண்டிருக்கின்றன. காந்திய வாழ்க்கை முறையைக் கொண்டுள்ள மாணவர்களாகிய நீங்கள் மிகப்பெரும் தாக்கத்தை உருவாக்கும் மகத்தான வாய்ப்பைப் பெற்றிருக்கிறீர்கள்.
நண்பர்களே,
மகாத்மா காந்தியின் இதயத்திற்கு நெருக்கமான சிந்தனைகளுக்காகப் பாடுபடுவது அவருக்கான சிறந்த அஞ்சலியாகும். நீண்ட காலமாக காதி புறக்கணிக்கப்பட்டு மறக்கப்பட்டது. ஆனால் 'தேசத்திற்காக காதி, சிறந்த ஆடை வடிவமைப்புக்கு காதி' என்ற அழைப்பின் மூலம் அது மிகவும் பிரபலமாகி வருகிறது. கடந்த 8 ஆண்டுகளில் காதித் துறையின் விற்பனை 300 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் வருவாய் கடந்த ஆண்டு சாதனை அளவாக ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமாக இருந்தது. இப்போது உலகளாவிய ஆடை வடிவமைப்பு நிறுவனங்கள் கூட காதியைப் பயன்படுத்துகின்றன. ஏனெனில் இந்த ஆடை சுற்றுச்சூழலுக்கு உகந்தது; இந்தப் புவிக்கோளுக்கு உகந்தது. இது பெருமளவிலான உற்பத்தி புரட்சி மட்டுமல்ல, இது பெருந்திரள் மக்களால் உற்பத்தி செய்யப்படுவதன் புரட்சியாகும். கிராமங்களின் தற்சார்புக்கான ஒரு கருவியாக காதியை மகாத்மா காந்தி பார்த்தார். கிராமத்தின் தற்சார்பு என்பதை இந்தியாவின் தற்சார்புக்கான விதைகளாக அவர் பார்த்தார். அவரால் ஊக்கம் பெற்ற நாங்கள் தற்சார்பு இந்தியாவுக்காகப் பாடுபடுகிறோம். சுதேசி இயக்கத்தின் முக்கிய மையமாக தமிழ்நாடு இருந்தது. தற்சார்பு இந்தியாவிலும் அது மீண்டும்
முக்கியமான பங்களிப்பைச் செய்யும்.
நண்பர்களே,
ஊரக வளர்ச்சியில் மகாத்மா காந்தியின் தொலைநோக்குப் பார்வையைப் புரிந்து கொள்வது முக்கியமானதாகும். அவர் கிராமங்களின் முன்னேற்றத்தை விரும்பினார். அதேசமயம் ஊரக வாழ்க்கையின் மாண்புகளைப் பாதுகாக்க அவர் விரும்பினார். அவரிடமிருந்து பெற்ற ஊக்கத்துடன் ஊரக வளர்ச்சிக்கான எங்களின் தொலைநோக்குப் பார்வை உள்ளது. எங்களின் தொலைநோக்கு பார்வை என்பது " கிராமத்தின் ஆன்மா; நகரத்தின் வசதி" என்பதாகும்.
நகரம் மற்றும் ஊரக பகுதிகள் வேறுபாட்டோடு இருப்பது சரிதான். வேறுபாடு என்பது நல்லது. பாகுபாடு என்பது கூடாது. நீண்ட காலமாக நகரம் மற்றும் கிராமப் பகுதிகளுக்கு இடையேயான சமத்துவமின்மை நீடிக்கிறது. ஆனால் இன்று தேசம் இதனை சரி செய்து வருகிறது. முழுமையான ஊரக சுகாதாரம், 6 6 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்குக் குழாய் மூலம் குடிநீர், 2.5 கோடி மின் இணைப்புகள, கூடுதலான ஊரக சாலைகள் என்பவை மக்களின் வீடுகளுக்கே வளர்ச்சியைக் கொண்டுசெல்கின்றன. துப்புரவு என்ற கோட்பாடு மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தமானது. இது தூய்மை இந்தியா மூலம் புரட்சிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. நாங்கள் அடிப்படை வசதிகளை வழங்குவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை. இன்றைய நவீன அறிவியல், தொழில்நுட்பப் பயன்கள் கூட கிராமங்களைச் சென்றடைந்துள்ளன. சுமார் 2 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளை இணைப்பதற்கு 6 லட்சம் கிலோமீட்டர் தொலைவுக்கான கண்ணாடி இழை கேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளன. மிகக் குறைந்த செலவில் இணையதள டேட்டா பயன் ஊரகப் பகுதிகளில் கிடைக்கிறது. நகரப் பகுதிகளை விட ஊரகப் பகுதிகளில் இணையதளப் பயன்பாடு அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது வாய்ப்புகளின் உலகத்தைத் திறக்கிறது.
நண்பர்களே,
ஒன்றுபட்ட, சுதந்திர இந்தியாவுக்காக மகாத்மா காந்தி போராடினார். காந்திகிராம் என்பது இந்தியாவின் ஒற்றுமைக்கான சான்றாகும். காந்தியை தரிசிக்க ஆயிரக்கணக்கான கிராம மக்கள் ரயிலில் வந்தனர். அவர் எங்கிருந்து வந்தார் என்பது முக்கியமில்லை. காந்தியும் கிராமவாசிகளும் இந்தியர்கள் என்பதே நமக்கு முக்கியம். தேசிய உணர்வின் உறைவிடமாகத் தமிழ்நாடு எப்போதும் இருந்து வருகிறது. சுவாமி விவேகானந்தர் மேற்கத்திய நாடுகளிலிருந்து திரும்பியபோது , அவர் இங்கு ஒரு நாயகருக்கான வரவேற்பைப் பெற்றார். கடந்த ஆண்டு கூட நாம் "வீரவணக்கம்" என்ற முழக்கங்களைக் கேட்டோம். ஜென்ரல் பிபின் ராவத்துக்குத் தங்களின் மரியாதையைத் தமிழ் மக்கள் இந்த வகையில் வெளிப்படுத்தினர். அது ஆழமான நெகிழ்வை ஏற்படுத்தியது. இதற்கிடையே, காசியில் வெகு விரைவில் காசி தமிழ் சங்கமம் நடைபெற உள்ளது. காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான உறவை அது கொண்டாடும். தமிழ்நாட்டின் மொழி, கலாச்சாரம், வரலாற்றைக் கொண்டாட காசி மக்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். இது 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்பதன் செயல் வடிவமாகும். ஒருவருக்கு ஒருவர் அன்பும் மரியாதையும் காட்டுவது நமது ஒற்றுமையின் அடிப்படையாகும். ஒற்றுமையை ஊக்கப்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்துமாறு இங்குள்ள இளம் பட்டதாரிகளை நான் கேட்டுக்கொள்கிறேன்.
நண்பர்களே,
மகளிர் சக்தியின் ஆற்றலைக் காண்கின்ற ஒரு பிராந்தியத்தில் இன்று நான் இருக்கிறேன். வெள்ளையரை எதிர்த்த போராட்டத்திற்கான தயாரிப்புகளைச் செய்ய ராணி வேலுநாச்சியார் இங்குதான் தங்கி இருந்தார். இங்குள்ள இளம் பெண் பட்டதாரிகளை மகத்தான மாற்றங்களைச் செய்யவிருப்பவர்களாக நான் காண்கிறேன். ஊரக பெண்களின் வெற்றிக்கு நீங்கள் உதவ வேண்டும். அவர்களின் வெற்றி என்பது தேசத்தின் வெற்றியாகும்.
நண்பர்களே,
இந்த நூற்றாண்டின் மிக மோசமான நெருக்கடியை உலகம் சந்தித்த தருணத்தில் இந்தியா ஒளிரும் இடமாக இருந்துள்ளது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கமாக இருப்பினும், பரம ஏழைகளின் உணவுப் பாதுகாப்பாக இருப்பினும் அல்லது உலகின் வளர்ச்சி என்ஜினாக இருப்பினும் இந்தியா தனது ஆற்றலை வெளிப்படுத்தி இருக்கிறது. செயற்கரிய செயல்களுக்கு இந்தியாவை உலகம் எதிர்பார்க்கிறது. ஏனெனில் 'நம்மால் முடியும்' என்ற இளைய தலைமுறையின் கைகளில் இந்தியாவின் எதிர்காலம் இருக்கிறது.
இளைஞர்கள் சவால்களை ஏற்பவர்களாக மட்டுமல்ல, அவற்றை எதிர்கொண்டு சமாளிப்பதற்கான விருப்பத்தையும் கொண்டவர்கள். இளைஞர்கள் கேள்விகள் கேட்பவர்களாக மட்டுமல்ல, விடைகளை கண்டறிவோராகவும் இருக்கிறார்கள். இளைஞர்கள் அச்சமற்றவர்களாக மட்டுமல்ல, அவர்கள் சோர்வற்றவர்களாகவும் இருக்கிறார்கள். இளைஞர்கள் முன்னேறும் விருப்பம் கொண்டவர்களாக மட்டுமல்ல, சாதிக்கக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். புதிய இந்தியாவைக் கட்டமைப்பவர்கள் நீங்கள். இந்தியாவின் அமிர்த காலமான அடுத்த 25 ஆண்டுகளில், இந்தியாவுக்குத் தலைமை ஏற்கும் பொறுப்பை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் என்பது இன்று பட்டம் பெறும் இளைஞர்களுக்கான எனது செய்தியாகும். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நல்லதே நடக்கட்டும்!
******
MSV/SMB/DL
(Release ID: 1875402)
Visitor Counter : 162
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam