பிரதமர் அலுவலகம்

ஸ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வரின் 150-வது பிறந்தநாள் விழாவில் பிரதமரின் உரை

Posted On: 26 OCT 2022 8:02PM by PIB Chennai

இந்த தருணத்தில், உலகம் முழுவதும் வசிக்கும் ஜெயின் மதம் மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்கும், இந்தியாவின் புகழ் பெற்ற துறவிகளின் கலாச்சாரத்தை நிலை நிறுத்துபவர்களுக்கும் எனது வணக்கங்கள். இந்த நிகழ்ச்சியில் மரியாதைக்குரிய ஏராளமான துறவிகள் கலந்து கொண்டுள்ளீர்கள். உங்கள் அனைவரையும் சந்திப்பதையும், உங்கள் ஆசிகளைப் பெறுவதையும் அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். ஆச்சார்யா ஸ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர் அவர்களின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் துவக்கத்தின்போது அன்னாரது திருவுருவச் சிலையைத் திறந்து வைக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.  தொழில்நுட்பத்தின் உதவியுடன் துறவிகளின் மத்தியில் மீண்டும் ஒருமுறை இன்று நான் கலந்து கொண்டிருக்கிறேன். ஆச்சார்யா ஸ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர் அவர்களின் வாழ்க்கை தத்துவமான ஆன்மீக உணர்வோடு மக்களை இணைக்கும் நோக்கத்துடன் ஆச்சார்யா அவர்களை கௌரவிக்கும் வகையில் நினைவு தபால்தலையும், நாணயமும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

 

 

போர், தீவிரவாதம், தாக்குதல்கள் உள்ளிட்ட நெருக்கடிகளை உலகம் தற்போது சந்தித்து வருகிறது.  இவற்றில் இருந்து விடுபடுவதற்கு ஊக்குவிப்பை எதிர்நோக்குகிறது. இது போன்ற நிலையில், இந்தியாவின் ஆற்றலுடன் இணைந்த பழங்கால பாரம்பரியங்களும், தத்துவங்களும் தான் உலக நாடுகளுக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக மாறி வருகின்றன. ஆச்சார்யா ஸ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர் மகாராஜ் அவர்கள் காட்டிய வழியும், ஜெயின் மதகுருக்களின் போதனைகளும் தான் இது போன்ற சர்வதேச சிக்கல்களுக்கு தீர்வாக அமையும்.

 

நண்பர்களே,

 

“நாட்டின் வளம், பொருளாதார செழிப்பை சார்ந்தது, சுதேசி செயல்பாட்டை  பின்பற்றினால் மட்டுமே இந்தியாவின் கலை, கலாச்சாரம் மற்றும் நாகரீகம் முதலியவற்றை உயிர்ப்பித்திருக்கச் செய்ய முடியும்”, என்று ஆச்சார்யா  கூறினார். சுதேசி மற்றும் தற்சார்பு குறித்த இத்தகைய செய்தி, விடுதலையின் அமிர்த காலத்தில் இன்றளவும் பொருத்தமாக உள்ளது. தற்சார்பு இந்தியாவாக முன்னேறுவதற்கு இதுதான் அடிப்படை தாரக மந்திரம்.

 

ஆச்சார்யாக்களாகிய நீங்கள் கடந்த காலங்களில்  உருவாக்கிய சமூக நலன், மனித சேவை, கல்வி மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு போன்ற வளமான பாரம்பரியம் தொடர்ந்து விரிவுபடுத்தப்பட வேண்டும். விடுதலையின் அமிர்த காலத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதை நோக்கி நாம் முன்னேறுகிறோம். இதற்காக நாடு ஐந்து உறுதி மொழிகளை எடுத்துக் கொண்டிருப்பதோடு அவற்றை நிறைவேற்ற துறவிகள் நம்மை வழி நடத்துகின்றனர். அனைவரின் முன்னேற்றத்திற்கும், ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்கும் கூட்டு முயற்சி தான் சிறந்த பாதை என்பதை ஆச்சார்யா அவர்கள் நமக்கு உணர்த்தியிருக்கிறார். அவரது பாதையை நாம்  பின்பற்றுவோம். மீண்டும் ஒருமுறை துறவிகள் அனைவருக்கும் எனது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி!

 

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

**************

MSV/RB/IDS

 



(Release ID: 1871460) Visitor Counter : 112