வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
பிராண்ட் இந்தியாவின் தூதர்களாக செயல்படுமாறு உலகம் முழுவதும் உள்ள பட்டய கணக்காளர்களுக்கு மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் அழைப்பு
Posted On:
06 SEP 2022 9:36AM by PIB Chennai
உலகம் முழுவதும் உள்ள பட்டய கணக்காளர்கள் பிராண்ட் இந்தியாவின் தூதர்களாக செயல்பட வேண்டும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவில் உள்ள 6 பகுதிகளில் இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தை (ஐ.சி.ஏ.ஐ) இன்று தொடங்கி வைத்த பிறகு சான் ஃபிரான்சிஸ்கோவில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விடுதலையின் அமிர்த பெருவிழா வாழ்த்துகளைத் தெரிவித்த அமைச்சர், இந்தியா தனது வலிமையை மேலும் அதிகரிக்கவும், புவி அரசியல் சூழலில் முக்கிய இடம் வகிக்கவும், அடுத்த 25 ஆண்டுகள் நாட்டிற்கு மிகவும் முக்கியமானது என்று கூறினார். இந்தியாவின் இந்தப் பயணத்தில் இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்கு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
பொருளாதார வளர்ச்சிக்கு உலகம் முழுவதும் உள்ள பட்டய கணக்காளர்கள் அபரிமிதமான பங்களிப்பை வழங்குவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், நேர்மையின் பாதுகாவலர்களாக அவர்கள் விளங்குவதாகத் தெரிவித்தார். ஏற்ற, இறக்கங்கள் நிறைந்த உலகில் இந்தியா ஒரு ஸ்திரத்தன்மை கொண்ட தீவாக இருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர், மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா ஒன்றாக தற்போது திகழ்வதாகக் குறிப்பிட்டார்.
உலகம் முழுவதும் உள்ள இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கு நான்கு கோரிக்கைகளை அமைச்சர் திரு பியூஷ் கோயல் முன்வைத்தார். இந்தியாவில் உள்ள அபரிமிதமான முதலீட்டு வாய்ப்புகள் பற்றி தங்களது சர்வதேச வாடிக்கையாளர்களிடம் உறுப்பினர்கள் எடுத்துரைக்குமாறு அவர் வலியுறுத்தினார். ஐ.சி.ஏ.ஐ-இன் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் பிராண்ட் இந்தியாவின் தூதர்களாக செயல்பட்டு, போட்டி தன்மையுடன் கூடிய விலையில் உயர்தர பொருட்களை இந்தியா வழங்கும் என்ற தகவலை உலக முழுவதும் கொண்டு செல்லுமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை உறுப்பினர்கள் பயன்படுத்துமாறு, குறிப்பாக அன்பளிப்பாக வழங்குமாறு அவர் ஆலோசனை விடுத்தார். இந்திய பட்டய கணக்காளர் நிறுவனங்கள் உலகளாவிய கூட்டுமுயற்சிகளை மேம்படுத்தி, சர்வதேச அளவிலான நிறுவனங்களாக மாற வேண்டும் என்றும் அமைச்சர் திரு கோயல் யோசனை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1856982
**************
(Release ID: 1857030)
Visitor Counter : 184