அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav g20-india-2023

கர்ப்பப்பைவாய் புற்றுநோயை தடுப்பதற்கான “செர்வாவாக்” தடுப்பூசி இந்தியாவில் முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார்.

Posted On: 01 SEP 2022 3:49PM by PIB Chennai

கர்ப்பப்பைவாய் புற்றுநோயை தடுப்பதற்கான “செர்வாவாக்” தடுப்பூசி இந்தியாவில் முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார்.

அனைவருக்கும் கிடைக்கக் கூடிய, குறைந்த செலவிலான இந்த தடுப்பூசி அறிவிக்கப்படும் நாள் உயிரி தொழில்நுட்பத்துறைக்கும், உயிரி தொழில்நுட்ப தொழில்துறை ஆராய்ச்சி உதவி கவுன்சிலுக்கும்  முக்கியமான நாளாகும். தற்சார்பு இந்தியா என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்குத் திட்டத்திற்கு மிகவும் நெருக்கமாக இந்தியாவை கொண்டுவருவதாகவும் இது உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார். இந்தத் தடுப்பூசிக்கு அறிவியல்பூர்வமான நடைமுறைகள், நிறைவடைந்திருப்பதாக புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு ஆதர் சி. பூனாவாலா மற்றும் பிரமுகர்கள் முன்னிலையில் அமைச்சர் அறிவித்தார்.

கர்ப்பப்பைவாய் புற்றுநோய் இந்தியாவில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்துவதில், இரண்டாவது இடத்தில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டிய டாக்டர் ஜிதேந்திர சிங், இந்த நோய் பெரிதும் தவிர்க்கக் கூடியதாக இருந்தபோதும், இந்த புற்றுநோயால் உலகில் ஏற்படும் மரணங்களில் சுமார் நான்கில் ஒரு பங்கு இந்தியாவில் ஏற்படுவதாக கூறினார். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.25 லட்சம் பெண்களுக்கு கர்ப்பப்பைவாய் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுவதாகவும், இவர்களில், 75,000 பேர் உயிரிழப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மாபெரும் சவால்கள் இந்தியா திட்டத்தில் பங்கேற்றுள்ள சீரம் இந்தியா நிறுவனத்தின் ஆதரவுடன் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மூலம் உயிரி தொழில்நுட்பத்துறையும் உயிரி தொழில்நுட்ப தொழில்துறை ஆராய்ச்சி உதவி கவுன்சிலும் இணைந்ததன் விளைவாக செர்வாவாக் தடுப்பூசி உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

அறிவியல் தொழில்நுட்பத்துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் கோகலே பேசுகையில், மனிதகுலத்தின் நன்மைக்காக அனைத்துத் தடைகளையும் தகர்த்து தடுப்பூசி மற்றும் மருந்து தயாரிப்பில் இந்தியா முன்னிலையில் இருக்கும் என்றார்.

சிஎஸ்ஐஆர் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் என் கலைசெல்வி பேசுகையில், இந்த தடுப்பூசி இந்திய பெண்களுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கும் உதவியாக இருக்கும் என்றார்.

இந்திய சீரம் நிறுவனத்தின்  தலைமை நிர்வாக அதிகாரி திரு ஆதர் சி பூனாவாலா தமது சுருக்கமான உரையில், இந்தியாவில், தடுப்பூசிகளும் மருந்துகளும் தயாரிப்பதில் தனியார் மற்றும் அரசு துறைகளுக்கு இடையே கூடுதல் ஒத்துழைப்பை ஏற்படுத்தும் உயிரி அறிவியல் தொழில்நுட்பத்துறையின் கண்ணோட்டத்தை ஆதரிப்பதாக கூறினார்.

கர்ப்பப்பை புற்று நோயை எதிர்த்து தைரியமுடன் போராடி வெற்றி பெற்ற பிரபல திரைப்பட நடிகை மனிஷா கொய்ராலா, இணையம் வழியாக நிகழ்ச்சியில் இணைந்து, இந்த மைல்கல்லை எட்டியுள்ள அறிவியல் தொழில்நுட்பத் துறைக்கு குறிப்பாக உயிரி தொழில்நுட்ப துறைக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்   https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1856034

***************(Release ID: 1856072) Visitor Counter : 373