பிரதமர் அலுவலகம்

ஷாஹிப்சாதா அஜித் சிங் நகரில் (மொகாலி) கட்டப்பட்டுள்ள ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை நாட்டிற்கு பிரதமர் அர்ப்பணித்தார்

“இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கு சுகாதார சேவைகளை வளர்ச்சியடையச் செய்வது முக்கியமாகும்”
“கடந்த எட்டு வருடங்களாக நாட்டின் முன்னுரிமை பணிகளில் ஒட்டுமொத்த சுகாதார சேவையும் இடம்பெற்றுள்ளது”
“கடந்த எட்டு வருடங்களில் நாட்டில் 200-க்கும் மேற்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன”
“முற்போக்கு சமூகத்தில் மனநலன் பற்றிய சிந்தனையில் மாற்றத்தையும், வெளிப்படைத் தன்மையையும் கொண்டு வருவதும் கூட நமது பொறுப்பு”
“இந்தியாவின் 5-ஜி சேவை ஊரகப் பகுதிகளில் சுகாதார சேவையில் புரட்சியை ஏற்படுத்தும்”

Posted On: 24 AUG 2022 5:04PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, மொகாலியில் உள்ள ஷாஹிப்சாதா அஜித் சிங் நகரில் கட்டப்பட்டுள்ள ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை இன்று (24.08.2022) நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் பஞ்சாப் ஆளுநர் திரு பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் திரு பகவந்த் மான், மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நாட்டில் சுகாதார வசதிகள் மேம்பட்டுள்ளதை இன்றைய நிகழ்வுகள் பிரதிபலிப்பதாகக் கூறினார்.  இம்மருத்துவமனை பஞ்சாப், ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேச மக்களுக்கு சேவை அளிக்கும் என்று தெரிவித்தார். இல்லந்தோறும் தேசியக் கொடி ஏற்றும் இயக்கத்தில் ஆர்வத்துடன் பங்கேற்ற பஞ்சாப் மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

       இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவது குறித்து செங்கோட்டையில் ஆற்றிய தமது உரையை குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கு சுகாதார சேவையை வளர்ச்சியடையச் செய்வது முக்கியம் என்று தெரிவித்தார். சிகிச்சைக்கான நவீன வசதிகளுடன் நவீன மருத்துவமனைகள் மக்களுக்கு கிடைக்கும் போது அவர்கள் விரைவில் குணமடைந்து சரியான திசையை நோக்கி செல்வார்கள் என்று கூறினார். புற்றுநோய் சிகிச்சைக்கான வசதிகளை ஏற்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். டாடா நினைவு மையம் இப்போது ஆண்டுதோறும் 1.5 லட்சம் புதிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். புதிய மருத்துவமனை மற்றும் பிலாஸ்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையால், சண்டிகரில் உள்ள முதுநிலை மருத்துவக் கல்வி நிலையத்தின் சுமை குறையும் என்றும் நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நிவாரணம் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

     நல்ல சுகாதார கட்டமைப்பு என்பது, நான்கு சுவர்களை கட்டுவது மட்டுமல்ல என்று பிரதமர் குறிப்பிட்டார். ஒவ்வொரு வழியிலும் தீர்வு காண்பது மற்றும் படிப்படியாக ஆதரவு அளிப்பதன் மூலமே எந்தவொரு நாட்டிலும் சுகாதார கட்டமைப்பு வலிமையாகும் என்று கூறினார். கடந்த எட்டு வருடங்களாக நாட்டின் முன்னுரிமை பணிகளில் ஒட்டுமொத்த சுகாதார சேவையும் இடம் பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.

     ஆறு வழிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டதன் மூலம் நாட்டின் சுகாதார வசதிகள் மேம்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். முதலாவதாக நோய்த்தடுப்பு சுகாதார மையத்தை ஏற்படுத்துதல், இரண்டாவதாக கிராமங்களில் சிறிய மற்றும் நவீன மருத்துவமனைகளை திறத்தல், மூன்றாவதாக நகரங்களில் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பெரிய மருத்துவ ஆராய்ச்சி கழகங்களை திறத்தல், நான்காவதாக நாடு முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், ஐந்தாவதாக நோயாளிகளுக்கு விலை குறைந்த மருந்துகள், உபகரணங்கள் மற்றும் ஆறாவதாக தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் நோயாளிகளின் சிரமங்களை குறைத்தல் ஆகிய ஆறு வழிகள் ஒருங்கிணைந்து செயல்படுவதாகக் கூறினார்.   

     நோய்த்தடுப்பு முறை குறித்து பேசிய பிரதமர், நீர்வள இயக்கத்தின் மூலம் நீரினால் ஏற்படும் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.  அதேபோல், தூய்மை, யோகா, உடல் திறன், ஊட்டச்சத்து, சமையல் எரிவாயு உள்ளிட்டவையும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு காரணங்கள் என்று கூறினார்.  இரண்டாவதாக, தரமான சோதனை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  இதில் 1.25 லட்சம் மையங்கள் ஏற்கனவே ஏற்படுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  பஞ்சாபில் மட்டும் 3000 மையங்கள் செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார்.  நாடு முழுவதும் 22 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு புற்றுநோய்க்கான பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் பஞ்சாபில் மட்டும் 60 லட்சம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

     நோய்த்தொற்று இருப்பது குறித்து ஒருமுறை கண்டறியப்பட்டால், சிறந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, முறையாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.  நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு மருத்துவக் கல்லூரி இருக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு, மத்திய அரசு செயல்பட்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.  சுகாதார கட்டமைப்பு இயக்கத்தின்கீழ், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் 64 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மாவட்ட அளவில் நவீன சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். நாட்டில் ஒரு காலத்தில் ஏழு எய்ம்ஸ் மருத்துவமனைகள் இருந்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை 21-ஆக உயர்ந்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். நாடு முழுவதும் 40 சிறப்பு புற்றுநோய் மையங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதில் பல்வேறு மருத்துவமனைகள் ஏற்கனவே சேவையை தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். மருத்துவமனை கட்டுவது முக்கியம் என்றாலும், அதற்கு இணையாக போதுமான மருத்துவர்கள் மற்றும் இதர மருத்துவம் சார்ந்த பணியாளர்களை பணியமர்த்துவதும் முக்கியம் என்று பிரதமர் தெரிவித்தார். இப்பணிகள் நாட்டில் துரிதமாக நடைபெற்று வருவதாக பிரதமர் கூறினார்.  2014 ஆம் ஆண்டிற்கு முன்பு நாட்டில் 400-க்கும் குறைவான மருத்துவக் கல்லூரிகள் இருந்தன என்றும், அதாவது, 70 வருடங்களில் 400-க்கும் குறைவான மருத்துவ கல்லூரிகள் என்று அவர் குறிப்பிட்டார்.  அதேநேரத்தில் கடந்த எட்டு வருடங்களில் நாட்டில் 200-க்கும் மேற்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். அலோபதி மருத்துவர்களைப் போல ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஆயுஷ் மருத்துவர்களுக்கும் அரசு அங்கீகாரம் அளித்துள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், இதன் மூலம் மருத்துவர்-நோயாளி விகிதாச்சாரம் மேம்படும் என்று கூறினார்.  ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்மூலம் ஏழை மக்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான இலவச சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், இதுவரை 3.5 கோடி நோயாளிகள் இதன்மூலம் பயனடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  இதில் பலர் புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் என்றும் அவர் கூறினார்.  ஆயுஷ்மான் பாரத் திட்டத்தினால் நோயாளிகளுக்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சேமிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். புற்றுநோய் சிகிச்சைக்கான 500-க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை 90% வரை குறைந்துள்ளதாகவும், இதனால், ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

     முதன் முறையாக சுகாதாரத்துறையில் நவீன தொழில்நுட்பம் பெரிய அளவில் புகுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.  தமது உரையின் இறுதியில், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சுகாதார இயக்கம், ஒவ்வொரு நோயாளிக்கும் குறித்த நேரத்தில் தரமான சுகாதார வசதிகளை உறுதி செய்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ள 5-ஜி சேவை ஊரகப் பகுதிகளில் சுகாதார சேவையில் புரட்சியை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.  இது கிராமங்களில் உள்ள ஏழை குடும்பங்களைச் சேர்ந்த நோயாளிகள் பெரிய மருத்துவ மனைகளுக்கு மீண்டும் செல்ல வேண்டும் என்ற கட்டாயத்தை குறைக்கும் என்று அவர் தெரிவித்தார்.  புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மற்றும் குடும்பங்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்தும் பிரதமர் வலியுறுத்தினார். முற்போக்கு சமூகத்தில் மனநலன் பற்றிய சிந்தனையில் மாற்றத்தையும், வெளிப்படைத் தன்மையையும் கொண்டு வருவதும் கூட நமது பொறுப்பு என்று அவர் தெரிவித்தார். அப்போதுதான் இப்பிரச்சினைக்கு சரியான தீர்வு காண முடியும் என்று பிரதமர் கூறினார்.     

***************

(Release ID: 1854147)



(Release ID: 1854191) Visitor Counter : 174