இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
சுதந்திர தின அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக புதுதில்லியில் நடைபெற்ற “இந்தியா@2047” என்ற இளைஞர்கள் பங்கேற்ற கலந்துரையாடலில் திரு தர்மேந்திர பிரதான் & திரு அனுராக் தாக்கூர் உரையாற்றினர்
Posted On:
12 AUG 2022 5:18PM by PIB Chennai
சுதந்திர தின அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, புதுதில்லியில் இளைஞர்கள் பங்கேற்ற “இந்தியா@2047” என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் மற்றும் இளைஞர் நலன் & விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் ஆகியோர் உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், நமது ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாற்றில், நாட்டின் தலைவிதியை நிர்ணயிப்பதில் நமது இளைஞர் சக்தி முக்கிய பங்கு வகித்து வருவதாகக் கூறினார். ஷாஹீத் பகத் சிங், ஷாஹீத் பாஜி ரவுத், ராணி கைடின்லியூ மற்றும் இவர்களைப் போன்ற எண்ணற்ற பலர், அவர்களது இளமைப் பருவத்திலேயே நம்மை உற்சாகப்படுத்தி வழி நடத்தியதாகக் கூறினார். இந்தியா மீதான நன்மதிப்பு, சமுதாய நெறிமுறைகள், அறிவாற்றல் மற்றும் பல்வேறு மாதிரிகளை உலகின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பை இளைஞர்கள் ஏற்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு அனுராக் தாக்கூர், இளைஞர்கள் தான் நாட்டை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் இயந்திரமாக திகழ்கின்றனர் என பிரதமர் திரு நரேந்திர மோடி எப்போதும் கூறிவருவதை சுட்டிக்காட்டினார். சுதந்திர தின அமிர்த காலக்கட்டத்தில் நாட்டை வெற்றியின் உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் கடமை இளைஞர்களுக்கு உள்ளதென்றும் அவர் குறிப்பிட்டார்.
இளைஞர்கள், அமிர்த காலத்திற்கான இலக்குகளை நிர்ணயித்து தங்களது கடமைகளை பொறுப்புடன் நிறைவேற்றி இலக்கை அடைய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். தேச நிர்மாணத்தில் இளைஞர்கள் மிகப் பெரும் பங்களிப்பை வழங்குவதோடு, உலகிற்கே வழிகாட்டும் விதமாக நாட்டை விஷ்வ குருவாக மாற்றவும் பாடுபடவேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்த தங்களது கருத்துக்களை இளைஞர்கள் வெளிப்படுத்த ஏதுவாக நாடு முழுவதும் 750 இளைஞர் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளுக்கு மத்திய இளைஞர் நலத்துறை ஏற்பாடு செய்துள்ளதாகவும் திரு அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
இளைஞர் நலன் & விளையாட்டுத்துறை இணை அமைச்சர் திரு நிஷித் பிரமாணிக் மற்றும் நிக்கத் ஸரீன், பிரியங்கா கோஸ்வாமி, திரு பி ஆர் ஸ்ரீஜேஷ், திருமதி அருணிமா சின்ஹா, உள்ளிட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள், பிரபல பேச்சாளர் திருமதி அபா மரியடா பானர்ஜி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை செயலாளர் திரு சஞ்சய் குமார் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1851284
-----
(Release ID: 1851370)
Visitor Counter : 198