பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சூரத்தில் நடைபெற்ற மூவண்ணக் கொடி பேரணியில் பிரதமர் உரையாற்றினார்


“நமது மூவண்ணக்கொடி கடந்த காலத்தின் பெருமை, நிகழ்காலத்தின் அர்ப்பணிப்பு மற்றும் எதிர்கால கனவுகளின் பிரதிபலிப்பாகும்”

“நமது தேசிய கொடியே, நாட்டின் ஜவுளித்தொழில். காதி மற்றும் தன்னம்பிக்கையின் அடையாளம்”

“நமது மூவண்ணக்கொடி, இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பன்முகத்தன்மையின் சின்னம்”

“பொதுமக்களின் இந்த பங்கேற்பு புதிய இந்தியாவின் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தும்”


Posted On: 10 AUG 2022 6:58PM by PIB Chennai

 பிரதமர் திரு.நரேந்திர மோடி, சூரத்தில் நடைபெற்ற மூவண்ணக்கொடி பேரணியில், காணொலி வாயிலாக உரையாற்றினார். அனைவருக்கும், சுதந்திரதின அமிர்தப் பெருவிழாவின் வாழ்த்துகளை தெரிவித்து தனது உரையை தொடங்கிய அவர், இன்னும் சில தினங்களில், இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவடை நினைவுகூர்ந்தார். நாடு முழுவதும் மூலை,முடுக்கெல்லாம் மூவண்ணக்கொடி ஏற்றியிருக்கும் நிலையில், வரலாற்று சிறப்புமிக்க சுதந்திரதின கொண்டாட்டத்துக்கு நாம் அனைவரும் தயாராகி வருவதாக தெரிவித்தார்.

குஜராத்தின் அனைத்து பகுதிகளிலும் உற்சாகம் நிறைந்துள்ளதாகவும், அதன் பெருமையை சூரத் மேலும் அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் கூறினார். “இன்று நாடு முழுவதும் சூரத்தின் மீது கவனம் செலுத்துகிறது. ஒருவகையில், சூரத்தின் மூவண்ணக்கொடி பேரணியில், ஒரு சிறிய இந்தியாவை காண முடிகிறது. சமூகத்திலுள்ள அனைத்து தரப்பு மக்களும் இணைந்து இதில் ஈடுபட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டார். மூவண்ணக்கொடியின் உண்மையான ஒற்றுமை உணர்வை சூரத் வெளிப்படுத்தியுள்ளதாகவும் பிரதமர் மேலும் கூறினார். சூரத், தனது தொழில்கள் மற்றும் வணிகம் மூலம் உலகம் முழுவதும் முத்திரை பதித்திருந்தாலும், இன்று மூவண்ணக்கொடி யாத்திரை வாயிலாக உலக மக்களின் கவனத்தை மேலும் ஈர்க்கும் என்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், “மூவண்ணக்கொடி பேரணியில், தமது சுதந்திரப் போராட்ட உணர்வுகளை வெளிப்படுத்திய சூரத் மக்களை பாராட்டினார். “ஆடை விற்பனை செய்யும் ஒருவர், கடைக்காரர் ஒருவர், தறி நெய்யும் கைவினைக் கலைஞர், போக்குவரத்துத்துறையை சேர்ந்தவர் என அனைவரும் இணைக்கப்பட்டுள்ளனர்” என்று பிரதமர் தெரிவித்தார். இதனை மாபெரும் நிகழ்வாக மாற்றிய சூரத்தை சேர்ந்த ஒட்டுமொத்த ஜவுளித்துறையினரின் முயற்சிகளை பிரதமர் பாராட்டினார். இந்த முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளித்த நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சி.ஆர்.பாட்டீலுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

“நமது தேசியக் கொடியே நாட்டின் ஜவுளித்தொழில். நமது நாட்டின் காதி மற்றும் தன்னம்பிக்கையின் அடையாளமாக உள்ளது” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்த துறையில் தன்னிறைவு பெற்ற, இந்தியாவுக்கான அடிப்படையை சூரத் எப்போதும் தயார் செய்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். குஜராத், சுதந்திரப் போராட்டத்தை பாபு உருவில் வழிநடத்தியது என்றும், சுதந்திரத்திற்கு பிறகு, ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வுக்கு அடித்தளமிட்ட இரும்பு மனிதர் சர்தார் படேல் போன்ற மாவீரர்களை வழங்கியது என்றும் குறிப்பிட்டார். பர்தோலி இயக்கம் மற்றும் தண்டி யாத்திரை வாயிலாக வழங்கிய செய்தி மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்தது என்றும் பிரதமர் கூறினார்.

இந்தியாவின் மூவண்ணக்கொடியில் மூன்று நிறங்கள் மட்டும் இல்லை என்றும், அதில் நமது கடந்த காலத்தின் பெருமை, நிகழ்காலத்திற்கான நமது அர்ப்பணிப்பு மற்றும் எதிர்கால கனவுகளின் பிரதிபலிப்பாகும் என்றும், நமது மூவண்ணக்கொடி, இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றின் சின்னம் என்றும் பிரதமர் கூறினார். சுதந்திரத்தில் ஈடுபட்ட போராளிகள், மூவண்ணக்கொடியில் நாட்டின் எதிர்காலத்தையும், கனவையும் கண்டனர். எந்த வகையிலும் தலைவணங்க விடவில்லை. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய இந்தியாவுக்கான பயணத்தை தொடங்கும்போது, மூவண்ணக்கொடி இந்தியாவின் ஒற்றுமையையும், உணர்வையும் மீண்டும் பிரதிபலிக்கிறது என்று பிரதமர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1850606

                             ***************


(Release ID: 1850630) Visitor Counter : 224