பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

44-வது செஸ் ஒலிம்பியாட் தொடங்கியதாக பிரதமர் அறிவித்தார்

செஸ் ஒலிம்பியாட் இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்படுகிறது; மிகப் பெரிய அளவிலான இப்போட்டியில் இந்தியா பங்கேற்கிறது

“செஸ் விளையாட்டின் தாயகமான இந்தியாவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த செஸ் போட்டி நடைபெறுகிறது”

“44வது செஸ் ஒலிம்பியாட் பல்வேறு முதலாவது மற்றும் சாதனைகளின் போட்டியாகும்"

“இந்தியாவின் சதுரங்க சக்கரவர்த்தியாக தமிழ்நாடு திகழ்கிறது”

“சிறந்த மனம், துடிப்பான கலாச்சாரத்திற்கான இல்லமாக தமிழ்நாடு உள்ளது மற்றும் உலகின் பழமையான மொழி தமிழ்"

“தற்போது உள்ளது போல் இந்தியாவில் விளையாட்டிற்கான சிறந்த தருணம் இதுவரை இருந்ததில்லை”

"இளைஞர்களின் சக்தி மற்றும் சுற்றுச்சூழலின் சரியான இணைப்பின் காரணமாக இந்தியாவின் விளையாட்டு கலாச்சாரம் வலுவடைந்து வருகிறது"

“விளையாட்டில் தோற்பவர்கள் எவரும் கிடையாது. அவர்கள் வெற்றியாளர்கள் மற்றும் எதிர்கால வெற்றியாளர்கள்”

Posted On: 28 JUL 2022 8:22PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் திரு.அனுராக்  சிங் தாக்கூர், திரு.எல்.முருகன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) தலைவர் திரு.ஆர்காடி ஓர்கோவிச் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அப்போது பேசிய பிரதமர், உலகில் உள்ள அனைத்து செஸ் விளையாட்டு வீரர்களையும், ரசிகர்களையும் இந்தியாவிற்கு வரவேற்பதாக கூறினார். விடுதலைப் பெருவிழா கொண்டாடப்பட்டு வரும் இவ்வேளையில் இந்த மகத்துவமிக்க விளையாட்டு நடைபெறுவதாக குறிப்பிட்டார். செஸ் விளையாட்டின் தாயகமான இந்தியாவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த செஸ் போட்டி நடைபெறுவதாக தெரிவித்தார்.

44வது செஸ் ஒலிம்பியாட் பல்வேறு முதலாவது மற்றும் சாதனைகளின் போட்டியாகும் என்று பிரதமர் கூறினார். செஸ் விளையாட்டின் தாயகமான இந்தியாவில் முதல் முறையாக  செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது என்று தெரிவித்தார். 30 ஆண்டுகளில் ஆசியாவில் முதல் முறையாக இப்போட்டி நடைபெறுவதாக கூறினார். முன்பு நடைபெற்ற போட்டியை விட அதிக நாடுகள் இப்போட்டியில் பங்கேற்றுள்ளதாக குறிப்பிட்டார். மகளிர் பிரிவில் அதிக வீரர்கள் இடம் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதலாவது ஜோதி ஓட்டம் இந்த முறை நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

செஸ் விளையாட்டுடன் தமிழ்நாட்டிற்கு பாரம்பரிய தொடர்பு இருப்பதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். அதனால்தான் இந்தியாவுக்கான செஸ் கேந்திரமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று கூறினார். இந்தியாவின் பல கிராண்ட் மாஸ்டர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்று அவர் தெரிவித்தார். சிறந்த மனம், துடிப்பான கலாச்சாரத்திற்கான இல்லமாக தமிழ்நாடு உள்ளது என்றும் உலகின் பழமையான மொழி தமிழ்மொழி என்றும் அவர் கூறினார்.

விளையாட்டு அழகானது என்று கூறிய பிரதமர், இது அனைவரையும் ஒருங்கிணைக்கும் சக்தியாக உள்ளது என்று தெரிவித்தார். மக்களையும், சமூகத்தையும் விளையாட்டு இணைப்பதாக அவர் கூறினார். குழுவாக விளையாட்டில் ஈடுபடுவதன் மூலம் ஒருங்கிணைந்து பணியாற்றும் திறனை வளர்ப்பதாக அவர் தெரிவித்தார். தற்போது உள்ளது போல் இந்தியாவில் விளையாட்டிற்கான சிறந்த தருணம் இதுவரை இருந்ததில்லை என்று அவர் கூறினார். ஒலிம்பிக் பாராலிம்பிக், டெஃப்லிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியா சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். இதுவரை வெற்றி பெறாத விளையாட்டுகளிலும் நாம் வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளதாக அவர் கூறினார். இளைஞர்களின் சக்தி மற்றும் சுற்றுச்சூழலின் சரியான இணைப்பின் காரணமாக இந்தியாவின் விளையாட்டு கலாச்சாரம் வலுவடைந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

விளையாட்டில் தோற்பவர்கள் என்று யாரும் கிடையாது. விளையாட்டில் எப்போதும் வெற்றியாளர்கள் அல்லது எதிர்கால வெற்றியாளர்களே இருக்கிறார்கள்.  44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றுள்ள அனைத்து அணிகள்  மற்றும் விளையாட்டு வீரர்களை நான் வாழ்த்துகிறேன். இந்தியாவில் மேற்கொண்டுள்ள உங்களது பயணம் சிறந்த அனுபவங்களை உங்களுக்கு தரும் என்றும், வரும் காலங்களில் இது உங்கள் நினைவுகளில் பெட்டகமாக நீடித்து நிலைத்திருக்கும் என்றும் நம்புகிறேன்.  இருகரம் நீட்டி இந்தியா உங்களை எப்போதும் வரவேற்கிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள் எனத் தெரிவித்தார்.

முன்னதாக செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதலாவது ஜோதி ஓட்டத்தை புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய விளையாட்டரங்கில் பிரதமர் ஜூன் 19, 2022 அன்று தொடங்கி வைத்தார். கடந்த 40 நாட்களாக சுமார் 20,000 கி.மீ. தொலைவிற்கு சிறப்புமிக்க 75 இடங்களை கடந்து போட்டி நடைபெறும் மகாபலிபுரத்தை செஸ் ஒலிம்பியாட் ஜோதி வந்தடைந்தது.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அருகே மகாபலிபுரத்தில் 2022, ஜூலை 28-ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 1927 ஆம் ஆண்டு முதல் நடைபெறும் இப்போட்டி முதன் முறையாக இந்தியாவிலும், 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசியாவில் முதன் முறையாகவும் நடைபெறுகிறது. இப்போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இப்போட்டியில் இந்தியா 6 அணிகளைச் சேர்ந்த 30 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

***************


(Release ID: 1845995) Visitor Counter : 208