சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

வனஉயிரின பாதுகாப்பு மற்றும் நிலையான உயிரி பல்லுயிர் பயன்படுத்துதல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியா- நமீபியா கையெழுத்து

Posted On: 20 JUL 2022 12:59PM by PIB Chennai

சிறுத்தையை இந்தியாவில் வரலாற்று ரீதியாக நிலைநிறுத்துவதற்காக வனஉயிரின பாதுகாப்பு மற்றும் நிலையான உயிரி பல்லுயிர் பயன்படுத்துதல் பற்றிய ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய அரசும், நமீபியா குடியரசு அரசும் இன்று கையெழுத்திட்டன. இந்தியா மற்றும் நமீபியா நாடுகளின் நலனைக் கருத்தில் கொண்டும், பரஸ்பர மரியாதை, இறையாண்மை, சமத்துவம் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் வனஉயிரின பாதுகாப்பு மற்றும் நிலையான உயிரி பல்லுயிர் பயன்படுத்துதலை ஊக்குவிப்பதற்கும், இரு நாடுகளும் பயனடையும் வகையிலான வளர்ச்சியை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தும்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

•     சிறுத்தைகள் எந்த பகுதிகளில் முன்னர் அழிந்ததோ, அதே இடங்களில் அவற்றை மீண்டும் கொண்டு வருவது மற்றும் உயிரி பல்லுயிரின் பாதுகாப்பு.

•     இரு நாடுகளிலும் சிறுத்தையின் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்காக நிபுணத்துவங்களை பகிர்வது மற்றும் பரிமாறிக் கொள்வது.

•     தொழில்நுட்ப செயல்பாடுகள், வன உயிரின வாழ்விடங்களில் வசிக்கும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்திற்கான வழிமுறைகள் மற்றும் உயிரி பல்லுயிரின் நிலையான மேலாண்மை ஆகியவற்றில் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றி வனஉயிரின பாதுகாப்பு மற்றும் நிலையான உயிரி பல்லுயிரைப் பயன்படுத்துதல்.

•     பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் ஆளுகை, சுற்றுச்சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தும் மதிப்பீடுகள், மாசு மற்றும் கழிவு மேலாண்மை மற்றும் பரஸ்பர விருப்பமுள்ள இதர துறைகளில் ஒருங்கிணைப்பு.

•     தேவையேற்படும் விஷயங்களில் நிபுணத்துவத்தை பகிர்வது உள்ளிட்ட வனஉயிரின மேலாண்மையில் பயிற்சி மற்றும் கல்விக்காக வல்லுநர்களைப் பரிமாறிக் கொள்வது.

தேசிய பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் கலாச்சாரத்தில் சிறுத்தை சிறப்பு முக்கியத்துவத்தைப் பெறுகிறது. சிறுத்தைகளை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வருவது என்பது சம அளவிலான பாதுகாப்பு விளைவுகளை ஏற்படுத்தும். சிறுத்தையின் மறுசீரமைப்பு என்பது, சிறுத்தைகளின் உண்மையான வாழ்விடங்கள் மற்றும் அவற்றின் பல்லுயிரை மீட்டெடுக்கும் முன்மாதிரி முயற்சியின் ஒரு பகுதியாகும். இது, பல்லுயிரின் சீரழிவு மற்றும் விரைவான இழப்பைத் தடுக்க உதவும்.

பெரிய அளவிலான கால்நடைகளைத் தாக்காமல், மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இல்லாமல் இருக்கும் காரணத்தால், மாமிச விலங்குகளுக்கு மத்தியில் மனிதர்களுக்கும் சிறுத்தைகளுக்குமான முரண்பாடு மிகக் குறைவாகவே உள்ளது. வேட்டையாடும் உயிரினங்களுள் முதன்மை வகிக்கும் சிறுத்தையை மீண்டும் கொண்டு வருவது வரலாற்று பரிணாம சமநிலையை மீட்டெடுக்கிறது. இதன் மூலம் சுற்றுச்சூழலின் பல்வேறு நிலைகளில் இதனுடன் தொடர்புடைய மாற்றங்கள் ஏற்படும். மேம்பட்ட மேலாண்மை மற்றும் வனஉயிரினங்களின் வாழ்விடங்கள் மறுசீரமைப்பு (புல்வெளிகள், தாவர நிலங்கள் மற்றும் வனங்களின் திறந்த வெளிப்பகுதிகள்), சிறுத்தையின் இரையைப் பாதுகாத்தல் மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள உயிரினங்களைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழல் அமைப்புகளின் கீழ்நிலை உணவு சங்கிலி வரம்பில் பன்முகத்தன்மையை நிலை நிறுத்தி, மேம்படுத்தும் சுற்றுச்சூழலியலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் மிகப்பெரிய வேட்டையாடும் விலங்கு போன்றவற்றிற்கு இந்த முயற்சி வழிவகை செய்யும்.

தலைசிறந்த வேட்டையாடும் விலங்காக தனது பணியை மேற்கொள்ள வழிவகை செய்யும் வகையில் இந்தியாவில் சாத்தியமுள்ள சிறுத்தைகளின் எண்ணிக்கையை உருவாக்கி, வரலாற்று ரீதியாக சிறுத்தையின் விரிவாக்கத்திற்கு போதிய இடமளித்து அதன் மூலம் சர்வதேச பாதுகாப்பு முயற்சியில் பங்கேற்பதே சிறுத்தை மறுஅறிமுகத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

2010 மற்றும் 2012-ஆம் ஆண்டுகளுக்கு இடையே 10 இடங்களுக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மக்கள் தொகை, மரபியல் மற்றும் சமூக- பொருளாதார பூசல்கள் மற்றும் வாழ்வாதாரங்களைப் பொறுத்து, குறிப்பிட்ட இனங்களை மறுஅறிமுகம் செய்வதற்கு சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம் (ஐ.யு.சி.என்) வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இந்தியாவில் சிறுத்தைகளைக் கொண்டு வருவதற்கு சாதகமான இடங்கள் மதிப்பீடு செய்யப்பட்டதில், மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் ஆசிய சிங்கங்களை மறுஅறிமுகம் செய்வதற்காக இந்த பாதுகாக்கப்பட்ட பகுதியில் ஏராளமான முதலீடுகள் செய்யப்பட்ட காரணத்தால், குறைந்த மேலாண்மை இடையீடுகளில் சிறுத்தைகளைக் கொண்டு வர இந்த இடம் ஏதுவாக இருக்கும் என்று கருதப்பட்டது.

பல்வேறு வழிகளுள் மிகச்சிறந்தவற்றைத் தேர்வு செய்யும் மாதிரியைப் பயன்படுத்தி இந்தியாவில் மாதிரி இடங்களைப் பயன்படுத்த சம்பந்தப்பட்ட சுற்றுச்சூழல்- பருவநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயங்களுடன், தென்னாப்பிரிக்காவில் சிறுத்தைகள் வசிக்கும் பகுதிகள் (தென் ஆப்பிரிக்கா, நமீபியா, போட்ஸ்வானா மற்றும் ஜிம்பாப்வே) பயன்படுத்தப்பட்டன. சிறுத்தை வாழ்விடங்களுக்கு உகந்ததாகவும், தென் ஆப்பிரிக்காவில் உள்ள சிறுத்தையின் தட்பவெப்ப நிலைக்கு இணையாகவும் இந்தியாவின் குனோ தேசிய பூங்கா உள்ளது என்பதை ஆய்வு காட்டுகிறது.

ஐ.யு.சி.என். வழிகாட்டுதல்களுக்கு இணங்கவும், குறிப்பிட்ட வளாகத்தில் மதிப்பீடு, இரையின் அடர்த்தி, குனோ தேசிய பூங்காவின் சிறுத்தைகளை உள்ளடக்கும் தற்போதைய  திறன் முதலிய வரைமுறைகளைக் கருத்தில் கொண்டும் சிறுத்தைகளை இங்கு இடமாற்றம் செய்வதற்கான செயல்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குனோ தேசிய பூங்காவில் தற்போது அதிகபட்சமாக 21 சிறுத்தைகள் இடம்பெறும் வசதியுள்ள நிலையில், மறுசீரமைப்பு செய்யப்பட்டதும் 36 சிறுத்தைகள் என்ற அளவிற்கு திறன் அதிகரிக்கப்படும். இரையை மீட்டெடுப்பதன் வாயிலாக குனோ வனவிலங்கு பிரிவில் மீதமுள்ள பகுதியையும் (1,280 சதுர கிலோமீட்டர்) சேர்த்து தேசிய பூங்காவின் திறனை மேலும் அதிகரிக்க முடியும்.

இந்தியாவில் சிறுத்தை மறுஅறிமுகத் திட்டத்திற்குத் தேவையான நிதி மற்றும் நிர்வாக உதவியை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வாயிலாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் வழங்கும். மத்திய மற்றும் மாநில அளவுகளில் கூடுதல் நிதியை ஈட்டுவதற்காக பெருநிறுவன சமூக பொறுப்பின் மூலம் அரசு மற்றும் பெரு நிறுவன முகமைகளின் பங்களிப்பும் ஊக்குவிக்கப்படும். இந்திய வனஉயிரின கழகம், தேசிய மற்றும் சர்வதேச மாமிச விலங்குகள்/ சிறுத்தை நிபுணர்கள்/ முகமைகள் ஆகியவை இந்த திட்டத்திற்கு தொழில்நுட்ப மற்றும் அறிவு சார்ந்த உதவியை அளிக்கும்.

இந்தியாவில் சிறுத்தை மறுஅறிமுகம் வெற்றியடைவதை உறுதி செய்வதற்கு ஆப்பிரிக்காவின் சிறுத்தை பாதுகாப்பு இடங்களில் உள்ள திறன் கட்டமைப்பு திட்டங்களின் மூலம் மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், இந்திய வனஉயிரின கழகம், மாநில வன துறைகளின் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். மேலும், ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சிறுத்தை மேலாளர்கள் மற்றும் உயிரியலாளர்கள், இந்தியாவில் உள்ள நிபுணர்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக இங்கு வரவேற்கப்படுவார்கள்.

பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான கண்காணிப்பை குனோ தேசிய பூங்காவும், ஆராய்ச்சிக்கான கண்காணிப்பை சிறுத்தை ஆராய்ச்சிக் குழுவும் மேற்கொள்ளும். உள்ளூர் கிராம மக்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்காக பல்வேறு பிரச்சாரங்களும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். கிராமத் தலைவர்கள், உள்ளூர் தலைவர்கள், ஆசிரியர்கள், சமூகப் பணியாளர்கள், ஆன்மீகவாதிகள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனத்தினருக்கு பாதுகாப்பு பற்றி அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். வனத்துறையினரின் பல்வேறு திட்டங்கள் பற்றி பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கிராமங்களில் எடுத்துரைப்பதற்கு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. “சிண்ட்டு சீட்டா” என்ற பெயரிலான உள்ளூர் சின்னத்துடன் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. சிறுத்தை- மனித இடையீடு குறித்த தகவல்களை வழங்குமாறு அனைத்து அரசு அதிகாரிகள், குனோ தேசிய பூங்காவைச் சுற்றியுள்ள தொகுதிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை மத்திய பிரதேச முதலமைச்சர் கேட்டு கொண்டுள்ளார்.

2020-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் வழங்கிய ஆணையின்படி, உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் வழிகாட்டுதல் மற்றும் உத்தரவின் பேரில் இந்தியாவில் சிறுத்தை மறுஅறிமுகத் திட்டத்தை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் ஆகியவை மேற்கொண்டு வருகின்றன.

இந்தியாவில் “சிறுத்தையின் மறு அறிமுகத்திற்கான செயல் திட்டம்” என்ற கையேட்டிற்கு இணைப்பை கிளிக் செய்யவும்.

***************



(Release ID: 1842990) Visitor Counter : 566