பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே -வின் சோகமான மரணத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அதிர்ச்சியும், துயரமும் வெளியிட்டுள்ளார்


ஷின்சோ அபே-வுக்கு மிகுந்த மரியாதை தெரிவிக்கும் வகையில் 2022 ஜூலை 9 அன்று ஒருநாள் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது

Posted On: 08 JUL 2022 3:52PM by PIB Chennai

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே-வின் சோகமான மரணத்திற்கு பிரதமர்  அதிர்ச்சியும், துயரமும் வெளியிட்டுள்ளார். திரு அபே உடனான தமது உறவையும், நட்பையும் எடுத்துரைத்துள்ள திரு மோடி, இந்தியா-ஜப்பான் உறவுகளை சிறப்பு உத்திகள் வகுத்தல் மற்றும் உலகளாவிய கூட்டாளிகள் நிலைக்கு  உயர்த்தியதில் அவர் ஆழமான பங்களிப்பை செய்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  ஷின்சோ அபே-வுக்கு மிகுந்த மரியாதை தெரிவிக்கும் வகையில் 2022 ஜூலை 9 அன்று ஒருநாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படுவதாகவும், திரு மோடி அறிவித்துள்ளார்.  டோக்கியோவில் அண்மையில் தாங்கள் சந்தித்த புகைப்படம் ஒன்றையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

 தொடர்ச்சியான ட்விட்டர் பதிவுகளில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“எனது இனிய நண்பர்களில் ஒருவரான ஷின்சோ அபேயின் சோகமான மரணத்தால் வார்த்தைகளால் கூற முடியாத அதிர்ச்சியையும், துயரத்தையும் நான் கொண்டுள்ளேன். அவர் உலகளாவிய அரசியல் பிரமுகராக உயர்ந்திருந்தவர், ஒப்பற்ற தலைவர், குறிப்பிடத்தகுந்த நிர்வாகி. ஜப்பானையும், உலகத்தையும் சிறந்த இடத்தில் வைப்பதற்கு  தனது வாழ்க்கையை அவர் அர்ப்பணித்துக்கொண்டவர்.”

“பல ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு திரு அபே உடன்  நட்பு இருந்தது. குஜராத் முதலமைச்சராக எனது பதவிக்காலத்தில் அவரை நான் அறிந்திருந்தேன். நான் பிரதமரான பிறகும் எங்களின் நட்பு தொடர்ந்தது. பொருளாதாரம் மற்றும் உலக நடவடிக்கைகள் குறித்த அவரின் நுட்பமான கருத்துக்கள் எனக்கு எப்போதும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.”

“அண்மையில் எனது ஜப்பான் பயணத்தின் போது திரு அபேயை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பையும், பல விஷயங்களை விவாதிக்கும் வாய்ப்பையும் நான் பெற்றிருந்தேன். எப்போதும் அவர், சமயோசிதம் உள்ளவராகவும், நுட்பமான அறிவு மிக்கவராகவும் இருந்தவர். இதுவே எங்களின் கடைசி சந்திப்பாக இருக்கும் என்று நான் சிறிதும் நினைக்கவில்லை. அவரது குடும்பத்திற்கும், ஜப்பான் மக்களுக்கும் எனது நெஞ்சம் நெகிழ்ந்த இரங்கல்கள்.”

“இந்தியா-ஜப்பான் உறவுகளை சிறப்பு உத்திகள் வகுத்தல் மற்றும் உலகளாவிய  கூட்டாளிகள் நிலைக்கு  உயர்த்தியதில் அவர் ஆழமான பங்களிப்பை செய்துள்ளார். இன்று ஒட்டுமொத்த இந்தியாவும், ஜப்பானுடன் துக்கம் அனுசரிக்கிறது. இந்த சிரமமான தருணத்தில் எங்களின் ஜப்பானிய  சகோதரர்கள், சகோதரிகளுடன் ஒருமைப்பாட்டுடன் நாங்கள் இருக்கிறோம்.”

“முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே-வுக்கு மிகுந்த மரியாதை தெரிவிக்கும் வகையில் 2022 ஜூலை 9 அன்று ஒருநாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும்.”

“டோக்கியோவில் எனது இனிய நண்பர் ஷின்சோ அபேயுடனான அண்மைக்கால சந்திப்பிலிருந்து ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளேன். இந்தியா-ஜப்பான் உறவுகளை வலுப்படுத்துவதில் எப்போதும் ஆர்வம் கொண்டிருந்த அவர், ஜப்பான்-இந்தியா சங்கத்தின் தலைவராக சிறிது காலத்திற்கு முன்புதான் பொறுப்பேற்றார்.”

***************(Release ID: 1840132) Visitor Counter : 135