பிரதமர் அலுவலகம்

ஜி-7 உச்சிமாநாட்டையொட்டி தென் ஆப்பிரிக்க அதிபருடன் பிரதமர் சந்திப்பு

Posted On: 27 JUN 2022 9:21PM by PIB Chennai

ஜி-7 உச்சிமாநாட்டையொட்டி தென் ஆப்பிரிக்க அதிபர் மேதகு திரு சிரில் ரமாஃபோசாவை பிரதமர் திரு நரேந்திர மோடி ஜெர்மனியின் ஸ்கிளாஸ் எல்மாவோவில் ஜூன் 27, 2022 அன்று சந்தித்துப் பேசினார்.

2019-ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஒத்துழைப்புக்கான உத்திகள் திட்டம் உள்ளிட்ட இருதரப்பு உறவுகளின் முன்னேற்றப் பணிகள் பற்றி இரண்டு தலைவர்களும் ஆய்வு செய்தனர். ராணுவம், கல்வி மற்றும் வேளாண்மைத் துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கு திருப்தி தெரிவித்த அவர்கள், வர்த்தகம் மற்றும் முதலீடு, உணவுப் பாதுகாப்பு, ராணுவம், மருந்துப் பொருட்கள், மின்னணு நிதி உள்ளடக்கம், திறன் மேம்பாடு, காப்பீடு, சுகாதாரம் மற்றும் மக்களுக்கு இடையேயான தொடர்பு போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்கள்.

வளர்ந்து வரும் நாடுகளில் கொவிட்-19 தடுப்பூசியின் உற்பத்திக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜூன் 2022-இல் எடுக்கப்பட்ட உலக வர்த்தக அமைப்பின் உடன்படிக்கையை இரு தலைவர்களும் வரவேற்றனர்.   கொவிட்-19 தொற்றைத் தடுப்பது, கட்டுப்படுத்துவது அல்லது சிகிச்சை அளிப்பது தொடர்பாக ட்ரிப்ஸ் ஒப்பந்தத்தின் சில விதிகளை செயல்படுத்துவதில் உலக வர்த்தக அமைப்பின் அனைத்து உறுப்பினர்களுக்கும் விலக்கு அளிக்க வேண்டும் என்ற முன்மொழிவை முதன்முதலாக இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் சமர்ப்பித்தன.

பலதரப்பு அமைப்புகளில் தொடர்ச்சியான ஒருங்கிணைப்பு மற்றும் அவற்றில் சீர்திருத்தம் செய்வதற்கான அவசியம், குறிப்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

***************



(Release ID: 1837486) Visitor Counter : 140