பிரதமர் அலுவலகம்

“வனிஜ்ய பவன்” மற்றும் நிர்யாத் இணையதளத்தை பிரதமர் தொடங்கிவைத்தார்


“மக்கள் நலன்சார்ந்த ஆளுகை என்ற திசையை நோக்கி நாடு செல்கிறது”

“டாக்டர் ஷியாம பிரசாத் முகர்ஜியின் கொள்கைகள், முடிவுகள், உறுதிப்பாடு மற்றும் அவரது சாதனைகள், சுதந்திர இந்தியாவுக்கு வழிகாட்டியதில் முக்கியமானவை”

“அரசு மற்றும் அதன் வசதிகளை அணுகுதலை, எளிதாக்குவதை உறுதி செய்வதற்கு அதிக முன்னுரிமை”

“திட்டங்களும், பணிகளும் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முடிக்கப்படுவதே வரிசெலுத்துவோருக்கு அளிக்கும் மரியாதையாகும்”

“வனிஜ்ய பவனுக்கு அடிக்கல் நாட்டியதிலிருந்து திறப்பு விழா வரை, நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது”

“வளரும் நாடு என்ற நிலையிலிருந்து வளர்ந்த நாடு என்ற நிலைக்கு மாறுவதில் ஏற்றுமதி முக்கியப் பங்கு வகிக்கிறது”

Posted On: 23 JUN 2022 12:31PM by PIB Chennai

தில்லியில் இன்று ‘வனிஜ்ய பவன்’ கட்டிடத்தை திறந்து வைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி, நிர்யாத் இணையதளத்தையும் தொடங்கிவைத்தார். மத்திய அமைச்சர்கள் திரு பியூஷ்கோயல், திரு சோம் பிரகாஷ் மற்றும் திருமதி அனுப்ரியா பட்டேல் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர்,  கடந்த 8 ஆண்டுகளாக நாடு பீடுநடை போடும் புதிய இந்தியாவில், மக்கள் நலன்சார்ந்த ஆளுகை என்ற பயணத்தை நோக்கிய செயல்பாட்டில் இன்றைய தினம் ஒரு முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  நாடு இன்று புதிய மற்றும் அதிநவீன வணிக  கட்டிடத்தையும், ஒரு ஏற்றுமதி இணையதளத்தையும், அதாவது, ஒரு கட்டிடம் மற்றும் ஒரு டிஜிட்டல் கட்டமைப்பை   நன்கொடையாக பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.

 இன்றைய தினம், நாட்டின் முதலாவது தொழில்துறை அமைச்சர் டாக்டர் ஷியாமபிரசாத் முகர்ஜியின் நினைவுதினம் என்பதையும் பிரதமர் நினைவுகூர்ந்தார். “அவரது கொள்கைகள், முடிவுகள், உறுதிப்பாடு மற்றும் அவரது சாதனைகள், சுதந்திர இந்தியாவுக்கு வழிகாட்டியதில் முக்கியமானவை. நாடு இன்று அவருக்கு தன்னடக்கத்துடன் மரியாதை செலுத்துகிறது” என்றும் குறிப்பிட்டார்.

 அமைச்சகத்திற்கான புதிய கட்டமைப்பு வசதி பற்றி குறிப்பிட்ட  பிரதமர், தொழில் தொடங்குவதை எளிதாக்குவதன் வாயிலாக, ‘வாழ்க்கையையும் எளிதாக்க’ மேற்கொண்ட உறுதியை புதுப்பிக்க இதுவே தக்கதருணம் என்றார். அணுகுதலை எளிதாக்குவது என்பது இவை இரண்டிற்கும் இடையிலான இணைப்பு என்றும் கூறினார். அரசுடன் தொடர்புகொள்வதில் எவ்வித இடையூறுகளும் இருக்கக்கூடாது என்று குறிப்பிட்ட அவர், அரசாங்கம் எளிதில் அணுகக்கூடியதாக இருக்கச் செய்வதே அரசின் முக்கிய முன்னுரிமை என்றும் கூறினார்.  இந்த தொலைநோக்குப் பார்வை, அரசின் கொள்கையில் தெளிவாக இடம் பெற்றுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 அண்மையில் நிகழ்ந்த பல்வேறு உதாரணங்களை சுட்டிக்காட்டிய பிரதமர், இதுவே புதிய இந்தியாவின் புதிய பணி கலாச்சாரம் என்பதோடு, பணிகள் நிறைவடையும் தேதி என்பது நிலையான வழிகாட்டு நெறிமுறையில் ஒரு அங்கமாக இருப்பதுடன், அது உறுதியாக பின்பற்றப்படுகிறது என்றும் தெரிவித்தார். அரசு திட்டப்பணிகளை பல ஆண்டுகளுக்கு இழுத்தடிக்காமல், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும். அதேபோன்று, அரசின் திட்டங்களும் அதன் இலக்கை எட்டினால்தான், அது வரி செலுத்துவோருக்கு மரியாதையாக இருக்கும் என்று தெரிவித்தார். கட்டமைப்பு வளர்ச்சிக்கான பிரதமரின் தேசிய பெருந்திட்ட வடிவில், நாம் தற்போது புதிய ஏற்பாடு ஒன்றை பெற்றிருக்கிறோம். இந்த வனிஜ்ய பவன், நாட்டின் ‘கடி சக்தி’ திட்டத்திற்கு ஊக்கமளிக்கும்.

 புதிதாக திறக்கப்பட்டுள்ள வனிஜ்ய பவன் கட்டிடம், தற்போதைய காலகட்டத்தில் வணிகத்துறையில் அரசின் சாதனைக்கு அடையாளமாக திகழ்கிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்த கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய போது, உலகளாவிய புதுமை கண்டுபிடிப்பு தரவரிசையில், புதிய கண்டுபிடிப்பு மற்றும் முன்னேற்றம் தேவை என்று வலியுறுத்தியதையும் அவர் நினைவுகூர்ந்தார்.  இந்தியா தற்போது, உலகளாவிய புதுமை கண்டுபிடிப்பு தரவரிசையில் 46-வது இடத்தில் இருப்பதோடு தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது. முன்பு தொழில்தொடங்குவதை எளிதாக்கும் நடவடிக்கைகளை மேம்படுத்துவது பற்றி தாம் கூறிவந்த நிலையில், தற்போது 32,000-த்திற்கும் மேற்பட்ட தேவையற்ற நடைமுறைகள் அகற்றப்பட்டுள்ளன. அதேபோன்று, இந்த கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டியபோது ஜிஎஸ்டி என்பது புதிதாக இருந்த நிலையில்,  தற்போது மாதந்தோறும் ஒரு லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் கிடைப்பது வழக்கமாகிவிட்டது. அரசு மின்னணு சந்தையான ஜெம் (GeM),  9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்களை பெற்றது, அப்போது விவாதப்பொருளாக இருந்த நிலையில், தற்போது 45 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு தொழில்முனைவோர் இந்த இணையதளத்தில் பதிவு செய்து 2.25 கோடிக்கும் மேற்பட்ட ஆர்டர்கள் கிடைத்துள்ளன. 2014-ல் 2 செல்போன் தொழிற்சாலைகள் மட்டுமே இருந்தநிலையில், 120 செல்போன் தொழிற்சாலைகள் பற்றி பேசப்பட்ட நிலை மாறி, இன்று அந்த எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.    நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் 500 ஆக இருந்த ஃபின்-டெக் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை தற்போது, 2300  ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. வனிஜ்ய பவனுக்கு அடிக்கல் நாட்டிய போது  ஆண்டுதோறும் 8000 ஸ்டார்டப் நிறுவனங்களை இந்தியா அங்கீகரித்துவந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 15,000-த்திற்கும் மேல் அதிகரித்துவிட்டதாகவும்  பிரதமர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு சர்வதேச அளவில் பின்னடைவுகள் ஏற்பட்டபோதிலும், இந்தியாவின் ஏற்றுமதி மொத்தம் 670 பில்லியன் டாலர், அதாவது, ரூ. 50 லட்சம் கோடி அளவிற்கு அதிகரித்து சாதனை படைக்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். எத்தகையை இடையூறு ஏற்பட்டாலும் 400 பில்லியன் டாலர், அதாவது, நமது வணிக ஏற்றுமதி 30 லட்சம் கோடிக்கு மேல் மேற்கொள்வது என கடந்த ஆண்டு  நாடு முடிவு செய்தது. நாம் இதனை தாண்டி 418 பில்லியன் டாலர், அதாவது, 31 லட்சம் கோடி அளவிற்கு ஏற்றுமதி செய்து புதிய சாதனை படைத்துள்ளோம். “கடந்த காலங்களில் ஏற்பட்ட இதுபோன்ற வெற்றிகளால் கிடைத்த ஊக்கம் காரணமாக, தற்போது நாம் நமது ஏற்றுமதி இலக்குகளை அதிகரித்து இருப்பதுடன் இதனை அடைவதற்கான முயற்சிகளையும் இரட்டிப்பாக்கியுள்ளோம். இந்த புதிய இலக்குகளை அடைய அனைவரது கூட்டு முயற்சி மிகவும் அவசியம்” என்று கூறிய அவர், குறுகிய காலத்திற்கானதாக இல்லாமல், நீண்ட கால இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

வருடாந்திர வர்த்தக பகுப்பாய்வுக்கான தேசிய இறக்குமதி-ஏற்றுமதி இணையதளமான நிர்யாத், இத்துறை சார்ந்தவர்களுக்கு அந்தந்த காலத்திற்குரிய, புள்ளி விவரங்களை வழங்குவதன் மூலம், தடைகளை அகற்ற உதவும். “30க்கும் மேற்பட்ட சரக்கு தொகுப்புகள், 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது பற்றிய முக்கிய தகவல்களை இந்த இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். வருங்காலங்களில் மாவட்ட வாரியான ஏற்றுமதி குறித்த தகவல்களும் இதில் கிடைக்கும். அத்துடன் மாவட்டங்களை ஏற்றுமதிக்கான முக்கிய மையங்களாக மேம்படுத்துவதற்கான முயற்சிகளையும் இது வலுப்படுத்தும்” என்றும் பிரதமர் தெரிவித்தார்.

வளரும் நாடு என்ற நிலையிலிருந்து வளர்ந்த நாடு என்ற நிலைக்கு நாட்டை மாற்றுவதில் அதிகரித்து வரும் ஏற்றுமதிகளின் பங்களிப்பை பிரதமர் சுட்டிக்காட்டினார். கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியா தனது ஏற்றுமதியை தொடர்ந்து அதிகரித்து வருவதோடு, ஏற்றுமதி இலக்குகளையும் எட்டியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான சிறந்த கொள்கைகள், செயல்முறைகளை எளிதாக்குதல் மற்றும் உற்பத்தி பொருட்களை புதிய சந்தைகளுக்கு எடுத்துச்செல்லுதல் போன்றவை பெருமளவிற்கு உதவியுள்ளன. தற்போது அரசின் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் அனைத்து துறைகளும், ‘ஒட்டுமொத்த அரசு’ என்ற அணுகுமுறையுடன், ஏற்றுமதியை அதிகரிக்க முன்னுரிமை அளித்து வருவதாக அவர் தெரிவித்தார். குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான அமைச்சகமாக இருந்தாலும், வெளியுறவுத்துறை, வேளாண்மை அல்லது வர்த்தக அமைச்சகமாக இருந்தாலும், அனைவரும் பொதுவான இலக்கை அடைய பொதுவான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

“புதிய துறைகளிலிருந்து ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. முன்னேற்றத்தை விரும்பும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் கூட, தற்போது ஏற்றுமதி அளவு அதிகரித்து வருகிறது. பருத்தி மற்றும் கைத்தறி ஆடைகள் ஏற்றுமதி 55 சதவீதம் அதிகரித்து இருப்பது, அடிமட்ட அளவில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை எடுத்துக்காட்டுகிறது” என்று அவர் குறிப்பிட்டார்.

உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கு முன்னுரிமை என்ற இயக்கத்தின் வாயிலாக, உள்ளூர் உற்பத்திக்கு அரசு அளித்து வரும் முக்கியத்துவம், ‘ஒரு மாவட்டத்திற்கு ஒரு பொருள் உற்பத்தி’ என்ற திட்டம், ஏற்றுமதியை அதிகரிக்க உதவியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். தற்போது நமது பல்வேறு உற்பத்தி பொருட்கள், உலகில் உள்ள பல புதிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

“நமது உள்ளூர் உற்பத்திப் பொருட்கள், வேகமாக உலக அளவில் பிரசித்திபெற்றுள்ளன” என்று கூறிய அவர், சித்தாபாக் மிட்டாய் பஹ்ரைனுக்கும், நாகாலாந்தின் ஃப்ரஷ் கிங் மிளகாய் லண்டனுக்கும், அசாமின் ஃப்ரஷ் பர்மீஸ் திராட்சை துபாய்க்கும், பழங்குடியினரின் மஹூவா பொருட்கள்  சத்தீஷ்கரிலிருந்து பிரான்சுக்கும், கார்கிலின் குமானி துபாய்க்கும் ஏற்றுமதி செய்யப்படுவதையும் உதாரணமாக எடுத்துரைத்தார்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகளை சுட்டிக்காட்டிய பிரதமர், “நமது விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் நமது பாரம்பரிய உற்பத்திப் பொருட்களுக்கு ஏற்றுமதி சூழலுடன் கூடிய புவிசார் குறியீடு பெற வலியுறுத்துவதோடு அதற்கு உதவியும் வருகிறோம்” என்றார். ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்திரேலியாவுடன், கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வர்த்தக உடன்படிக்கைகளை சுட்டிக்காட்டிய அவர்,  மற்ற நாடுகளுடனும் இதற்கான நடவடிக்கைகள் முன்னேற்றகரமாக உள்ளதாக தெரிவித்தார். மிகவும் சவாலான சூழலை, இந்தியாவிற்கான வாய்ப்புகளாக மாற்றுவதில் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் கடுமையாக பாடுபட்டு வருவதாகவும் அவர் பாராட்டு தெரிவித்தார். “வர்த்தகம், புதிய சந்தைகளை அடையாளம் காணுதல் மற்றும் பொருட்களின் தேவையை அடையாளம் கண்டு அவற்றை உற்பத்தி செய்வது நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியம்” என்றும் அவர் தெரிவித்தார்.

நிறைவாக, அண்மைகாலத்தில் உருவாக்கப்பட்ட இணையதளங்கள் மற்றும் அமைப்புகளை அனைத்து துறைகளும் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டார். “நாம் இந்த சாதனங்களை உருவாக்கியதற்கான குறிக்கோள், எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அதனை அடையவேண்டும் என்பதோடு, ஏதாவது சிக்கல் ஏற்பட்டால், அதனை தீர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும்”.

***************



(Release ID: 1836513) Visitor Counter : 226