பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

ஜூன் 14 அன்று பிரதமர் மகாராஷ்டிரா பயணம்


புனேவின் டெஹுவில் உள்ள ஜகத்குரு ஸ்ரீசாந்த் துக்காராம் மகாராஜா ஆலயத்தை பிரதமர் திறந்து வைக்கிறார்

மும்பையின் ராஜ்பவனில் ஜல் பூஷன் கட்டிடத்தையும், புரட்சியாளர்களின் அரங்கையும் பிரதமர் திறந்து வைக்க உள்ளார்

மகாராஷ்டிராவின் விடுதலைப் போராட்ட வீரர்கள் மற்றும் புரட்சியாளர்களின் பங்களிப்பை நினைவு கூரும் வகையில் புரட்சியாளர்களின் அரங்கு, ஒருவகையான அருங்காட்சியகமாக உருவாக்கப்பட்டுள்ளது

200 ஆண்டுகளாக தொடர்ந்து வெளிவரும் மும்பை சமாச்சார் நாளிதழின் த்விஷதாப்தி மகோத்சவத்திலும் பிரதமர் பங்கேற்கிறார்

Posted On: 12 JUN 2022 11:43AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜூன் 14-ஆம் தேதி மகாராஷ்டிரா செல்லவிருக்கிறார். மதியம் 1:45 மணிக்கு புனேவின் டெஹுவில் உள்ள ஜகத்குரு ஸ்ரீசாந்த் துக்காராம் மகாராஜா ஆலயத்தை பிரதமர் திறந்து வைப்பார். மாலை 4:15 மணிக்கு மும்பையின் ராஜ்பவனில் ஜல் பூஷன் கட்டிடத்தையும், புரட்சியாளர்களின் அரங்கையும் அவர் திறந்து வைக்க உள்ளார். அதன் பிறகு மாலை சுமார் 6 மணிக்கு மும்பையின் பந்தரா குர்லா வளாகத்தில் நடைபெறும் மும்பை சமாச்சார் நாளிதழின் த்விஷதாப்தி மகோத்சவத்தில் பிரதமர் கலந்து கொள்வார்.

 

புனேவில் பிரதமர்:

புனேவின் டெஹுவில் உள்ள ஜகத்குரு ஸ்ரீசாந்த் துக்காராம் மகாராஜா ஆலயத்தை பிரதமர் திறந்து வைப்பார். சந்த் துக்காராம், ஓர் வார்க்காரி துறவி மற்றும் கவிஞர் ஆவார். அபங்கா பக்தி கவிதைகள் மற்றும் கீர்த்தனைகள் எனப்படும் ஆன்மீக பாடல்கள் மூலம் சமூகம் சார்ந்த வழிபாட்டிற்கு அவர் பிரபலமானவர். அவர் டெஹுவில் வசித்து வந்தார்.‌ அன்னாரது மறைவிற்குப் பிறகு ஓர் கல் கோவில் கட்டப்பட்டது, எனினும், ஓர் முறையான ஆலயமாக அது வடிவமைக்கப்படவில்லை. 36 சிகரங்களைக் கொண்ட கல் செதுக்கல்களால் அது புனரமைக்கப்பட்டிருப்பதுடன், சந்த் துக்காராமின் சிலையையும் கொண்டுள்ளது.

 

 

மும்பையில் பிரதமர்:

மும்பையின் ராஜ்பவனில் ஜல் பூஷன் கட்டிடத்தையும், புரட்சியாளர்களின் அரங்கையும் பிரதமர் திறந்துவைப்பார். ஜல் பூஷன் என்பது 1885 முதல் மகாராஷ்டிரா ஆளுநரின் அதிகாரபூர்வமான இல்லமாகும். கட்டிடத்தின் வாழ்நாள் நிறைவடைந்த பிறகு, அது இடிக்கப்பட்டு அந்த இடத்தில் புதிய கட்டிடத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆகஸ்ட், 2019- இல் மேதகு இந்திய குடியரசுத் தலைவர் இதற்கான அடிக்கல்லை நாட்டினார். பழைய கட்டிடத்தின் தனித்துவம் வாய்ந்த அம்சங்கள் அனைத்தும் புதிதாக நிறுவப்பட்டுள்ள கட்டிடத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன. 

 

2016- ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தின் அப்போதைய ஆளுநர் திரு வித்யாசாகர் ராவ், ராஜ்பவனில் பதுங்கு குழி ஒன்றைக் கண்டார். ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை ரகசியமாக பாதுகாப்பதற்காக ஆங்கிலேயர்கள் இதை முன்னர் பயன்படுத்தியிருந்தனர். இந்த பதுங்கு குழி, 2019-ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. மகாராஷ்டிராவின் விடுதலைப் போராட்ட வீரர்கள் மற்றும் புரட்சியாளர்களின் பங்களிப்பை நினைவு கூரும் வகையில்  புரட்சியாளர்களின் அரங்கு, ஒருவகையான அருங்காட்சியகமாக பதுங்கு குழியில் உருவாக்கப்பட்டுள்ளது. வாசுதேவ் பல்வந்த் பாட்கே, சபேகார் சகோதரர்கள், சாவர்க்கர் சகோதரர்கள், மேடம் பிகாஜி காமா, வி.பி. கோகாடே,  1946-ஆம் ஆண்டு நடைபெற்ற கடற்படை கிளர்ச்சிக்கு இந்த அருங்காட்சியகம் மரியாதை செலுத்துகிறது.

 

மும்பையின் பந்தரா குர்லா வளாகத்தில் நடைபெறும் மும்பை சமாச்சார் நாளிதழின் த்விஷதாப்தி மகோத்சவத்தில் பிரதமர் கலந்து கொள்வார். ஃபர்துன்ஜீ மர்ஸ்பாஞ்ஜி என்பவரால் ஜூலை 1, 1822 அன்று மும்பை சமாச்சார், ஓர் வார நாளிதழாக அச்சாகத் தொடங்கியது. பிறகு 1832-ஆம் ஆண்டு, தினசரியாக அது மாறியது. 200 ஆண்டுகளாக இந்த பத்திரிக்கை தொடர்ந்து வெளிவருகிறது. இதன் தனித்துவமான சாதனையைப் போற்றும் வகையில், நிகழ்ச்சியின்போது ஓர் அஞ்சல் தலையும் வெளியிடப்படும்.

*****************



(Release ID: 1833270) Visitor Counter : 207