இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் புனேவில் உள்ள விமான் நகரில் தக்ஷஷிலா விளையாட்டு வளாகத்தை திறந்து வைத்தார்
Posted On:
29 MAY 2022 1:19PM by PIB Chennai
புனே மாநகராட்சியால் (பிஎம்சி) கட்டப்பட்ட தக்ஷஷிலா விளையாட்டு வளாகத்தை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் சனிக்கிழமை மாலை விமான நகரில் திறந்து வைத்தார். அடிமட்ட அளவில் விளையாட்டு உள்கட்டமைப்பை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய திரு தாக்கூர், புனேவில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் சிஎஸ்ஆர் (கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு) நிதி மூலம் விளையாட்டு வசதிகளுக்கு நிதியளிக்க முன்வருமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இளைஞர்கள் விளையாட்டு மற்றும் உடற்தகுதியில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர், "விளையாட்டு விடாமுயற்சியை கற்றுத் தருகிறது, தன்னம்பிக்கையை வளர்க்கிறது மற்றும் தலைமைப் பண்புகளை வளர்க்கிறது" என்றார். இந்தியாவில்தான் அதிக உடல் பருமன் உள்ளவர்கள் இருப்பதாகவும், வாழ்க்கை முறை மக்களை மாற்றியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.எனவே, அனைவருக்கும் உடற்தகுதி முக்கியமானது, என்று அவர் தெரிவித்தார்.
இப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்காக இந்த விளையாட்டு வளாகம் கட்டப்பட்டுள்ளது என்று கூறிய அமைச்சர், "ஏசி அறைகளை விட்டு வெளியே வாருங்கள், இங்கு அரை மணி நேரம் விளையாட்டுப் பயிற்சி செய்யுங்கள். அப்போதுதான் உடல் ஆரோக்கியம், உடல் நலம் மற்றும் சிகிச்சை கட்டணம் குறையும்’’ என்றார்.
நாட்டில் விளையாட்டு கலாச்சாரத்தை வளர்ப்பது குறித்து பேசிய திரு தாக்கூர், "நம் குழந்தைகளுக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தால், அவர்கள் விளையாட்டின் மீது ஆர்வத்தை வளர்த்துக்கொள்வார்கள், பின்னர் அவர்கள் நாட்டிலும் வெளிநாட்டிலும் போட்டிகளில் வெற்றி பெறுவார்கள். ". ஒரு விளையாட்டுப் போட்டி என்பது நரம்புகளின் போர் என்று அவர் கூறினார், இது ஒரு நபர் எவ்வளவு மன வலிமையுடன் இருக்க முடியும் என்பதைக் காட்டுகிறது.
அரசாங்கம் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும், நாடு முழுவதும் அடிமட்ட உள்கட்டமைப்பைக் கட்டமைக்க மாநிலங்களுடன் மத்திய அரசு மிகவும் நெருக்கமாக செயல்பட்டு வருவதாகவும் திரு தாக்கூர் கூறினார். விளையாட்டுத் துறைக்கான பட்ஜெட், 1,200 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 3,000 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டதால், விளையாட்டு வீரர்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1829146
************
(Release ID: 1829198)
Visitor Counter : 180