பிரதமர் அலுவலகம்

மாநில முதலமைச்சர்கள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் கூட்டு மாநாட்டை பிரதமர் தொடங்கிவைத்தார்

‘’ நீதித்துறை, நிர்வாகத்தின் பொறுப்புகள் மற்றும் பங்கு பற்றி 75 ஆண்டு சுதந்திரம் தொடர்ந்து தெளிவுபடுத்தியுள்ளது. தேவைப்படும் இடத்தில், இந்த உறவு நாட்டுக்கான திசையை தொடர்ந்து உருவாக்கி வந்துள்ளது’’

‘’2047-ல் இந்தியாவின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் நமது நீதி பரிபாலன முறையை நாம் எவ்வாறு உருவாக்குகிறோம் என்பதே இன்றைய உயர்முன்னுரிமையாக இருக்க வேண்டும்’’
‘’ அமிர்த காலத்தில் நமது தொலைநோக்கு, எளிதான நீதி, விரைவான நீதி, அனைவருக்கும் நீதியை உள்ளடக்கிய அத்தகைய நீதிபரிபாலன முறையை ஏற்படுத்துவதாக இருக்கவேண்டும்’’
‘’ டிஜிடல் இந்தியா இயக்கத்தின் ஒரு அவசிய பகுதியாக நீதிபரிபாலன முறையில் தொழில்நுட்ப வாய்ப்புகளை அரசு பரிசீலித்து வருகிறது’’

நீதி பரிபாலன நடைமுறையுடன் தொடர்புள்ளதாக நாட்டு மக்கள் கருதுவதற்கு நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிப்பது முக்கியமாகும்’’

நாட்டில் சுமார் 3.5 லட்சம் கைதிகள் சிறைகளில் விசாரணைக் கைதிகளாக உள்ளனர். இதல் ஏராளமானோர் ஏழைகள் மற்றும் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்’’

“சட்டத்துக்கு உட்பட்டு, மனிதாபிமான உணர்வு அடிப்படையில் அனைத்து முதலமைச்சர்கள் மற்ற

Posted On: 30 APR 2022 12:04PM by PIB Chennai

புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் கூட்டு மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, உச்சநீதிமன்ற நீதிபதி யு.யு.லலித், மத்திய அமைச்சர்கள் திரு கிரண் ரிஜிஜூ, பேராசிரியர் எஸ்.பி. சிங் பாகல், உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், ‘’ நமது நாட்டில், அரசியல் சாசனத்தின் பாதுகாவலாக நீதித்துறை பங்காற்றி வரும் நிலையில், சட்டமன்றங்கள் மக்களின் விருப்பங்களை பிரதிபலித்து வருகின்றன. அரசியல் சாசனத்தின் இரு பிரிவுகளின் சங்கமம் மற்றும் சமன்பாடு நாட்டில் சிறப்பான நீதிபரிபாலன முறைக்கு உரிய வழிகாட்டுதலை உருவாக்கும்’’ என்று கூறினார். நீதித்துறை மற்றும் நிர்வாகத்தின் பொறுப்புகள் மற்றும் பங்கு பற்றி 75 ஆண்டு சுதந்திரம் தொடர்ந்து தெளிவுபடுத்தியுள்ளது. தேவைப்படும் இடத்தில், இந்த உறவு நாட்டுக்கான  திசையை தொடர்ந்து உருவாக்கி வந்துள்ளது என்று அவர் கூறினார். இந்த மாநாடு அரசியல் சாசன அழகின் ஒரு துடிப்பான வெளிப்பாடு என்று வர்ணித்த பிரதமர், இதில் தாம் முதலில் முதலமைச்சராகவும்,  இப்போது பிரதமராகவும் நீண்டகாலமாக கலந்து கொண்டு வருவதாக கூறினார். அந்த வகையில், இந்த மாநாட்டின் மூத்த பங்கேற்பாளர் தாமாகத்தான் இருக்க வேண்டும் என நகைச்சுவையுடன் பிரதமர் குறிப்பிட்டார்.

மாநாட்டின் தொனி பற்றி குறிப்பிட்ட பிரதமர், ‘’ 2047-ல் நாடு சுதந்திரத்தின் நூற்றாண்டை நிறைவு செய்யும் போது, நாட்டில் எந்த விதமான நீதிபரிபாலன முறை இருக்க வேண்டும் என நாம் விரும்புகிறோம்? 2047-ல் இந்தியாவின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் நமது நீதி பரிபாலன முறையை நாம் எவ்வாறு உருவாக்குகிறோம் என்பதே இன்றைய உயர்முன்னுரிமையாக இருக்க வேண்டும்’’ என்று கூறினார். அமிர்த காலத்தில் நமது தொலைநோக்கு, எளிதான நீதி, விரைவான நீதி, அனைவருக்கும் நீதியை உள்ளடக்கிய அத்தகைய நீதிபரிபாலன முறையை ஏற்படுத்துவதாக இருக்கவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

நீதிபரிபானத்தில் ஏற்படும் கால தாமதத்தை குறைக்க அரசு கடினமாக பாடுபட்டு வருகிறது என்று கூறிய பிரதமர், நீதித்துறையை வலுப்படுத்தி, உள்கட்டமைப்பை முன்னேற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். வழக்கு மேலாண்மைக்கான ஐசிடி ஈடுபடுத்தப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், நீதித்துறையில் பல்வேறு மட்டத்தில் நிலவும் காலி பணியிடங்களை நிரப்ப முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

நீதிப் பணியில் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்ற தமது தொலைநோக்கை வெளியிட்ட பிரதமர், டிஜிடல் இந்தியா இயக்கத்தின் ஒரு அவசிய பகுதியாக நீதிபரிபாலன முறையில் தொழில்நுட்ப வாய்ப்புகளை அரசு பரிசீலித்து வருவதாக தெரிவித்தார். இதனை முன்னெடுக்குமாறு மாநில முதலமைச்சர்களையும், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளையும் அவர் கேட்டுக்கொண்டார். மின்னணு நீதிமன்ற திட்டங்கள் இன்று சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டினார். சிறிய நகரங்களிலும், கிராமங்களிலும் டிஜிடல் பரிவர்த்தனைகள் தற்போது சர்வ சாதாரணமாகி விட்டதாக அவர் தெரிவித்தார். உலகில் கடந்த ஆண்டில் நடைபெற்ற டிஜிடல் பரிவர்த்தனைகளில், 40 சதவீதம் இந்தியாவில் நடைபெற்றுள்ளதாக பிரதமர் கூறினார். தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை அதிகரிக்க, பிளாக் செயின், மின்னணு விநியோகம், இணையவெளி பாதுகாப்பு, ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, பயோஎதிக்ஸ் போன்றவை பல நாடுகளின் சட்டப்பல்கலைக்கழகங்களில் தற்போது பயிற்றுவிக்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார். ‘’ சர்வதேச தரத்துக்கு இணையாக நமது நாட்டில் சட்டக்கல்வி இருப்பதை உறுதி செய்வது நமது கடமையாகும்’’ என்று அவர் தெரிவித்தார்.

நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிப்பது முக்கியம் என்று கூறிய பிரதமர், அப்போதுதான் நீதிபரிபாலன முறையில் தொடர்பு உள்ளதாக மக்கள் உணர்வார்கள் என்றும், அதனால் அவர்களது நம்பிக்கை அதிகரிக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார். நீதிபரிபாலனத்தில் மக்களின் உரிமை இதன் மூலம் வலுப்படும். உள்ளூர் மொழிகள் தொழில்நுட்பக் கல்வியிலும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

சட்டங்களில் உள்ள சிக்கல்கள் மற்றும் வழக்கொழிந்து போதல் பற்றி பேசிய பிரதமர், 2015-ல் பொருத்தமில்லாத 1800 சட்டங்களை அரசு கண்டறிந்து,அதில் 1450 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இத்தகைய 75 சட்டங்கள் மட்டும் மாநிலங்களில் ரத்து செய்யப்பட்டதாக கூறிய பிரதமர் நரேந்திர மோடி, ‘’ மாநில மக்கள் எளிதான வாழ்க்கையை மேற்கொள்ளும் வகையில், இந்த திசையில் நடவடிக்கைகளை நிச்சயமாக எடுக்க வேண்டும் என அனைத்து முதலமைச்சர்களையும் நான்  கேட்டுக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

நீதித்துறை சீர்திருத்தம் என்பது வெறும் கொள்கை விஷயம் மட்டுமல்ல என்று கூறிய பிரதமர், மக்களின் உணர்வுகள் இதில் சம்பந்தப்பட்டுள்ளதால், அனைத்து விவாதங்களிலும் அவர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். நாட்டில் தற்போது சுமார் 3.5 லட்சம் கைதிகள் சிறைகளில் விசாரணைக் கைதிகளாக உள்ளனர் என்றும், இதில்  ஏராளமானோர் ஏழைகள் மற்றும் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட நீதிபதி தலைமையில் குழு ஏற்படுத்தி, வழக்குகளை ஆய்வு செய்து, தேவைப்படும் நிகழ்வுகளில் இத்தகைய கைதிகளை ஜாமீனில் விடுதலை செய்யலாம் என்று அவர் யோசனை தெரிவித்தார். ‘’ இந்த விஷயத்தில் சட்டத்துக்கு உட்பட்டு, மனிதாபிமான உணர்வு அடிப்படையில் அனைத்து முதலமைச்சர்கள் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் முன்னுரிமை அளிக்குமாறு நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்’’ என்று அவர் கூறினார்.

நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளுக்கு தீர்வு காண உள்ளூர் மட்டத்தில் மத்தியஸ்தம் ஒரு முக்கியமான கருவி என்று கூறிய பிரதமர், நமது சமுதாயத்தில் மத்தியஸ்தம் மூலம் தாவாக்களுக்கு தீர்வு காணும் பாரம்பரியம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டினார். பரஸ்பர ஒத்திசைவு, பரஸ்பர பங்கேற்பு ஆகியவை நீதிபரிபாலனத்தில் அருமையான கருத்தியல் என்று அவர் குறிப்பிட்டார். இந்த சிந்தனையின் அடிப்படையில், அரசு நாடாளுமன்றத்தில் மத்தியஸ்த மசோதாவை தாக்கல் செய்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.’’ நமது செழுமையான சட்ட நிபுணத்துவத்துடன், மத்தியஸ்தம் மூலமாக தீர்வு காணும் துறையில், நாம் உலக முன்னோடியாக மாறலாம். உலகம் முழுமைக்கும் ஒரு மாதிரியை நாம் அளிக்கலாம்’’ என்று அவர் கூறினார்.

 

***************

(Release ID: 1821517)



(Release ID: 1821550) Visitor Counter : 229