தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான தவறான தகவல்களை பரப்பியதற்காக 16 யூடியூப் செய்தி சேனல்களை தகவல் & ஒலிபரப்பு அமைச்சகம் தடை செய்துள்ளது

Posted On: 25 APR 2022 5:41PM by PIB Chennai

தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021-ன் கீழ் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி, பதினாறு (16) யூடியூப் சார்ந்த செய்தி சேனல்கள் மற்றும் ஒரு (1) முகநூல் கணக்கை தடை செய்வதற்காக இரண்டு தனித்தனி உத்தரவுகளை 22.04.2022 அன்று தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் பிறப்பித்தது.

தடைசெய்யப்பட்ட சமூக ஊடக கணக்குகளில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆறு மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பத்து யூடியூப் செய்தி சேனல்களும் அடங்கும். 68 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை அவைக் கொண்டுள்ளன. தேசிய பாதுகாப்பு, இந்தியாவின் வெளிநாட்டு உறவுகள், நாட்டில் மத நல்லிணக்கம் மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான விஷயங்களில் சமூக ஊடகங்களில் போலியான செய்திகளை பரப்புவதற்கு இந்த சேனல்கள் பயன்படுத்தப்படுவது கவனிக்கப்பட்டது.

தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021-ன் விதி 18-ன் கீழ் தேவைப்படும் தகவல்களை இந்த டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள் யாரும் அமைச்சகத்திற்கு வழங்கவில்லை.

உள்ளடக்கத்தின் தன்மை

இந்தியாவை தளமாகக் கொண்ட சில யூடியூப் சேனல்களால் வெளியிடப்பட்ட உள்ளடக்கம், ஒரு சமூகத்தை பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டு, பல்வேறு மத சமூகங்களைச் சேர்ந்தவர்களிடையே வெறுப்பைத் தூண்டியது. இத்தகைய உள்ளடக்கம் வகுப்புவாத வேற்றுமையை உண்டாக்கும் மற்றும் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் தன்மை கொண்டதாக கண்டறியப்பட்டது.

சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடையே பீதியை உருவாக்கும் சாத்தியம் கொண்ட சரிபார்க்கப்படாத செய்திகள் மற்றும் வீடியோக்களை வெளியிட்ட இந்தியா சார்ந்த பல்வேறு யூடியூப் சேனல்கள் கண்காணிக்கப்பட்டன. கொவிட்-19 காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிப்பு தொடர்பான தவறான உரிமைகோரல்கள், இதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அச்சுறுத்துவது மற்றும் சில மத சமூகங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படும் இட்டுக்கட்டப்பட்ட உரிமைகோரல்கள் போன்றவை இவற்றில் அடங்கும். இதுபோன்ற உள்ளடக்கம் நாட்டில் பொது ஒழுங்கிற்கு தீங்கு விளைவிப்பதாகக் காணப்பட்டது.

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட யூடியூப் சேனல்கள், இந்திய ராணுவம், ஜம்மு காஷ்மீர், உக்ரைனில் உருவாகியுள்ள சூழ்நிலையை தொடர்ந்து இந்தியாவின் வெளிநாட்டு உறவுகள் போன்ற பல்வேறு விஷயங்களில் இந்தியாவைப் பற்றிய பொய் செய்திகளை வெளியிட ஒருங்கிணைந்த முறையில் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது. தேசிய பாதுகாப்பு, இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் வெளிநாடுகளுடனான இந்தியாவின் நட்புறவு ஆகியவற்றின் கண்ணோட்டத்தில் இந்த சேனல்களின் செயல்பாடுகள் முற்றிலும் தவறானவை என்று கண்டறியப்பட்டது.

தவறான உரிமைகோரல்கள் மற்றும் அவதூறான தலைப்புச் செய்திகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று தனியார் தொலைக்காட்சி செய்தி சேனல்களுக்கு ஏப்ரல் 23, 2022 அன்று அமைச்சகம் அறிவுறுத்தியது. அச்சு, தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் ஊடகங்கள் அனைத்திற்கும் இந்தியாவில் பாதுகாப்பான தகவல் சூழலை உறுதி செய்வதில் இந்திய அரசு உறுதியாக உள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1819892  

***************



(Release ID: 1819952) Visitor Counter : 286