பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் திருமதி உர்சுலா வொன் டெ லெயென்-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வரவேற்றார்

Posted On: 25 APR 2022 4:49PM by PIB Chennai

இந்த ஆண்டிற்கான ராய்சினா உரையாடல் நிகழ்ச்சியில் தொடக்கவுரையாற்ற ஒப்புக்கொண்ட  ஐரோப்பிய ஆணையத்தின் தலைவருக்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர், இன்று பிற்பகல் அவரது உரையை கேட்க ஆர்வமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 பெரிய மற்றும் வலிமையான ஜனநாயக அமைப்புகளைக் கொண்ட இந்தியாவும், ஐரோப்பாவும், ஒரே மாதிரியான நற்பண்புகள் மற்றும் பல்வேறு உலக விவகாரங்களில் பொதுவான கருத்தை கொண்டிருப்பதாக இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தம் உட்பட இந்தியா- ஐரோப்பிய யூனியன் இடையிலான நீடித்த ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது உயர்மட்ட வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப ஆணையத்தை உருவாக்க ஒப்புக்கொள்ளப்பட்டது.  இந்த ஆணையம் இந்தியா- ஐரோப்பிய யூனியன் இடையிலான நட்புறவின் அனைத்து அம்சங்கள் குறித்த அரசியல் அளவிலான தொலைநோக்குப் பார்வையை வழங்குவதுடன்,  பல்வேறு துறைகளிலும் ஒத்துழைப்பிற்கான ஒருங்கிணைப்பை உறுதி செய்யும்.

பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட துறைகளில் இந்தியா- ஐரோப்பிய யூனியன் இடையே ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறு உள்பட, பருவநிலை மாற்றம் சார்ந்த அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவான பேச்சு நடத்தினர்.  கொவிட்-19 ஏற்படுத்தி வரும் தொடர் சவால்கள் குறித்தும் விவாதித்த அவர்கள், உலகின் அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி மற்றும் சிகிச்சைகள் சமமாக கிடைப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தினர்.

இதுதவிர, உக்ரைன் நிலவரம் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்திய முன்னேற்றங்கள் உள்பட முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு புவி-அரசியல் விவகாரங்கள் குறித்தும் இந்த கூட்டத்தின் போது விவாதிக்கப்பட்டது.

***************


(Release ID: 1819916) Visitor Counter : 250