குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2021-22 நிதியாண்டில் பிஎம்இஜிபி-ன் கீழ் எப்போதும் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கேவிஐசி அனைத்து முந்தைய சாதனைகளையும் முறியடித்துள்ளது

Posted On: 19 APR 2022 2:38PM by PIB Chennai

காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தைப் (கேவிஐசி) பொறுத்தவரை இந்த ஆண்டு வரலாற்று சாதனைகள் நிறைந்த ஆண்டாகும். பிரதமரின் வேலை உருவாக்கத் திட்டத்தை (பிஎம்இஜிபி) கேவிஐசி சிறப்பாக செயல்படுத்தி உள்ளது. 2021-22 நிதியாண்டில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 1.03 லட்சம் புதிய உற்பத்தி மற்றும் சேவை அலகுகளை ஏற்படுத்தி, 8.25 லட்சத்திற்கும் அதிகமான வேலைகளை உருவாக்கி,
பிஎம்இஜிபி-ஐ சுயநிலைத்தன்மைக் கொண்ட அரசின் மிகவும் சக்தி வாய்ந்த உபகரணமாக கேவிஐசி மாற்றியுள்ளது. கொவிட்-19 இரண்டாவது அலை பரவி வந்த முதல் 3 மாதங்களில் பகுதி நேர பொது முடக்கத்தின் கீழ் நாடு இருந்தபோதும் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு பிஎம்இஜிபி திட்டம் தொடங்கப்பட்ட பின்னர் முதல் முறையாக ஒரு நிதியாண்டில் 1 லட்சம் புதிய அலகுகளை கேவிஐசி அமைத்துள்ளது. 1,03,219 அலகுகள் மொத்தம் சுமார் ரூ.12,000 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கேவிஐசி லாபத்தொகையாக ரூ.2,978 கோடி மானியத்தை விடுவித்துள்ளது. வங்கிக்கடன் உதவி சுமார் ரூ.9,000 கோடியாகும். லாபத்தொகை மானியமான ரூ.2,978 கோடி 2021-22 ஆம் ஆண்டு கேவிஐசி-யால் வழங்கப்பட்டுள்ளது. இது 2008 ஆம் ஆண்டிலிருந்து இப்போது வரை வழங்கப்பட்ட மிக அதிக தொகையாகும். 8,25,752 புதிய வேலைவாய்ப்புகள் நாடு முழுவதும் உருவாக்கப்பட்டுள்ளது. பிஎம்இஜிபி-யின் கீழ் இதுவும் அதிகபட்சமாகும்.

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், (அதாவது 2020-21 ஆம் ஆண்டு) பிஎம்இஜிபி-யின் கீழ் அலகுகளின் எண்ணிக்கை வேலைவாய்ப்பு உருவாக்கம் 39 சதவீதம் அதிகமாகும். லாபத்தொகை வினியோகமும் 36 சதவீதம் உயர்ந்துள்ளது.

தன்னிறவை எட்ட உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமென்ற பிரதமரின் வலியுறுத்தலே வேலை உருவாக்கத்தின் கணிசமான உயர்வு ஏற்பட்டதற்கு காரணம் என கேவிஐசி தலைவர் திரு.வினய் குமார் சக்சேனா கூறியுள்ளார். கொவிட்-19 பெருந்தொற்றுக்கு இடையே உள்ளூர் உற்பத்தியும், சுயவேலைவாய்ப்பும் அதிசயங்களை நிகழ்த்தியுள்ளன. ஏராளமான இளைஞர்கள், பெண்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் பிஎம்இஜிபி-யின் கீழ் சுயவேலைவாய்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சக்சேனா கூறியுள்ளார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1818004

***************

(Release ID: 1818004)


(Release ID: 1818011) Visitor Counter : 240