பிரதமர் அலுவலகம்

புதுதில்லியில் பிரதமர்களின் அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார்

“இந்த அருங்காட்சியகம் ஒவ்வொரு அரசின் பகிர்ந்துகொள்ளப்பட்ட பாரம்பரியத்தை தற்காலத்திலும் பிரதிபலிப்பதாக இருக்கும்”


“சுதந்திரப் பெருவிழா கொண்டாடும் வேளையில் இந்த அருங்காட்சியகம் பெரும் உத்வேகம் அளிக்கும் ”


“சுதந்திர இந்தியாவில் அமைக்கப்பட்ட ஒவ்வொரு அரசும், தற்போது உள்ளது போன்று நாட்டை உச்சத்திற்கு அழைத்துச் செல்ல பங்களிப்பை வழங்கியுள்ளன. இதை நான் செங்கோட்டையிலிருந்தும் பலமுறை திரும்பத் திரும்ப கூறியிருக்கிறேன்”


“இது, இந்தியாவின் ஜனநாயக நடைமுறை காரணமாக, சாமான்யக் குடும்பத்தில் பிறந்தவரும் நாட்டின் உயர் பதவிக்கு வரமுடியும் என்ற நம்பிக்கையை இளைஞர்களுக்கு அளிக்கும்”


“ஒன்றிரண்டு நிகழ்வுகள் தவிர, ஜனநாயக முறையில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் பெருமைமிகு பாரம்பரியம் இந்தியாவிற்கு உள்ளது”


“தற்போது, புதிய உலக நடைமுறைகள் உருவாகியுள்ள நிலையில், இந்த உலகம், இந்தியாவை எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையுடன் எதிர்நோக்குகிறது, அதனால், இந்தியாவும் காலத்திற்கேற்ற வளர்ச்சியடைவதற்கான தனது முயற்சிகளை அதிகரிக்க வேண்டும்”

Posted On: 14 APR 2022 2:24PM by PIB Chennai

புது தில்லியில் பிரதமர்களின் அருங்காட்சியகத்தை, பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று திறந்துவைத்தார். 

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர்,   இன்றைய தினம் பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்படுவதை சட்டிக்காட்டினார்.   பாபாசாஹேப் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்திய அவர்,  “பாபாசஹேப் சிற்பியாக இருந்து உருவாக்கிய அரசியல் சாசனம், நாடாளுமன்ற நடைமுறையின் அடிப்படையை நமக்கு தந்துள்ளது.  இந்த நாடாளுமன்ற நடைமுறையின் முக்கியப் பொறுப்பு, நாட்டின் பிரதமர் அலுவலகத்தை சார்ந்ததாக உள்து.  பிரதமர்களின் அருங்காட்சியகத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் வாய்ப்பு இன்று எனக்குக் கிடைத்திருப்பது எனது அதிர்ஷ்டம் ஆகும்“.   இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் பிரதமர்களின் குடும்பத்தினருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார். 

 

“சுதந்திரப் பெருவிழாவை நாடு கொண்டாடும் வேளையில், இந்த அருங்காட்சிகயம் பெரும் உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது.  இந்த 75 ஆண்டுகளில்,  நாடு பல்வேறு பெருமிதமளிக்கும் தருணங்களைக் கண்டுள்ளது.  வரலாற்றில் இத்தகைய தருணங்களின் முக்கியத்துவம், ஈடு இணையற்றது. “

சுதந்திரம் பெற்றதிலிருந்து அமைந்த அனைத்து அரசுகளின் பங்களிப்பையும் பிரதமர் மீண்டும் பாராட்டினார்.   “சுதந்திர இந்தியாவில் அமைந்த ஒவ்வொரு அரசும், நாடு தற்போது அடைந்துள்ள உச்சத்திற்கு அழைத்துச்சல்ல பங்களிப்பை வழங்கியுள்ளன.  இதை நான் செங்கோட்டையிலிருந்தும் பலமுறை திரும்பத் திரும்ப கூறியிருக்கிறேன்.“  இந்த அருங்காட்சியகம் ஒவ்வொரு அரசின் பகிர்ந்துகொள்ளப்பட்ட பாரம்பரியத்தை தற்காலத்திலும் பிரதிபலிப்பதாக இருக்கும்என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.  நாட்டின் அனைத்துப் பிரதமர்களும், அரசியல் சாசன ஜனநாயகத்தின் குறிக்கோளை அடைய அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.  “அவர்களை நினைவுகூர்வது, சுதந்திர இந்தியாவின் பயணத்தை அறிந்துகொள்வதற்குச் சமமானது.  இங்கு வருவோர்,  நாட்டின் முன்னாள் பிரதமர்களின்பங்களிப்பு, அவர்களது பின்னணி, அவர்களது போராட்டங்கள் மற்றும் படைப்புகளை அறிந்து கொள்ள முடியும்“ என்றும் அவர் குறிப்பிட்டார்.  

பெரும்பாலான பிரதமர் சாமான்யக் குடும்பத்திலிருந்து வந்தவர்கள் என்பது குறித்தும் பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.  மிக ஏழ்மையான, விவசாயக் குடும்பங்களிலிருந்து வந்து, பிரதமர் பொறுப்பை அடைந்தது, இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் அதன் பாரம்பரியத்தை வலுப்படுத்தியுள்ளது எனவும் அவர் கூறினார்.  இது, இந்தியாவின் ஜனநாயக நடைமுறை காரணமாக, சாமான்யக் குடும்பத்தில் பிறந்தவரும் நாட்டின் உயர் பதவிக்கு வரமுடியும் என்ற நம்பிக்கையை இளைஞர்களுக்கு அளிக்கும்என்றும் திரு.மோடி தெரிவித்தார்.    இந்த அருங்காட்சியகம், இளைய தலைமுறையினரின் அனுபவத்தை விரிவுபடுத்தும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.  அனைத்திற்கும் மேலாக, நமது இளைஞர்கள், சுதந்திர இந்தியாவின் முக்கியமான தருணங்களை அறிந்துகொள்வதோடு, அவர்களின் முடிவுகள் மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

ஜனநாயகத்தின் தாயகமாக இந்தியா திகழ்வது பற்றிக் குறிப்பிட்ட பிரதமர்,  “இந்திய ஜனநாயகத்தின் சிறப்பம்சமே, காலத்திற்கேற்ப தொடர்ந்து மாறி வருவது தான்.   ஒவ்வொரு யுகத்திலும், ஒவ்வொரு தலைமுறையிலும், ஜனநாயகத்தை மேலும் நவீனமானதாக்கி அதிகாரம்பெற்றதாக மாற்ற தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது“ என்றும் தெரிவித்தார்.  ஒன்றிரண்டு நிகழ்வுகள் தவிர, ஜனநாயக முறையில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் பெருமைமிகு பாரம்பரியம் இந்தியாவிற்கு உள்ளது. எனவே தான், நமது முயற்சிகளால் ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டிய கடமை நமக்கும் இருக்கிறதுஎன்றும் அவர் குறிப்பிட்டார்.   அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் இந்தியக் கலாச்சாரத்தின் சிறப்பம்சங்கள் பற்றிக் குறிப்பிட்ட திரு.மோடி, நமது ஜனநாயகம், நவீனத்துவம் மற்றும் புதிய சிந்தனைகளை ஏற்றுக்கொள்ள நமக்கு உத்வேகம் அளிக்கிறது எனவும் தெரிவித்தார். 

இந்தியாவின் செழுமையான வரலாறு மற்றும் வளமான சகாப்தத்தை நினைவுகூர்ந்த பிரதமர், இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் தற்போதைய நிலை பற்றிய சரியான நிலவரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் எனவும் வலியுறுத்தினார்.   வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட நமது பாரம்பரியப் பொருட்களை திரும்பக் கொண்டுவர அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளை எடுத்துரைத்த அவர்,  பாரம்பரியப் பெருமைமிக்க இடங்களைக் கொண்டாடுவதோடு, ஜாலியன் வாலாபாக், பாபாசாஹேப்பை நினைவுகூரும் பஞ்ச தீர்த்த தலங்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் அருங்காட்சியகம், பழங்குடியினர் வரலாற்று அருங்காட்சியகம்  போன்ற இடங்கள், விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவைப் பாதுகாக்கும் வகையில்வ உள்ளதாகவும் தெரிவித்தார்.  

அசோக சக்கரத்தை பல கைகள் தாங்கிப் பிடித்திருப்பது போன்று இந்த அருங்காட்சியகம் வடிவமைக்கப்பட்டிருப்பது பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், வளமான எதிர்காலம் மற்றும் கடின உழைப்பு குறித்த உறுதிப்பாடு மற்றும் 24 மணி நேரமும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும் என்பதன் அடையாளம் தான் இந்த சக்கரம் என்றும் தெரிவித்தார்.  இந்த உறுதிப்பாடு, உணர்வு மற்றும் வலிமை, அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார். 

மாறிவரும் உலக நடைமுறை மற்றும் அதன் காரணமாக, இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.  
தற்போது, புதிய உலக நடைமுறைகள் உருவாகியுள்ள நிலையில், இந்த உலகம், இந்தியாவை எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையுடன் எதிர்நோக்குகிறது, அதனால், இந்தியாவும் காலத்திற்கேற்ற வளர்ச்சியடைவதற்கான தனது முயற்சிகளை அதிகரிக்க வேண்டும்என்றும் திரு.நரேந்திர மோடி தெரிவித்தார். 

தில்லியில் பிரதமர்களின் அருங்காட்சியகத் திறப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையைக் காண : https://t.co/I2ArKZRJdg

*****



(Release ID: 1816812) Visitor Counter : 195