பிரதமர் அலுவலகம்

ராம நவமியை முன்னிட்டு ஜூனாகத் கதிலாவில் உள்ள உமியா மாதா கோயிலின் 14-வது நிறுவன தின விழாவில் பிரதமர் உரையாற்றினார்


நீர் பாதுகாப்பு மற்றும் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது

"ஊட்டச்சத்து குறைபாடு முற்றிலும் அகற்றப்பட வேண்டும்"

Posted On: 10 APR 2022 2:39PM by PIB Chennai

ராம நவமியை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று குஜராத் மாநிலம்  ஜூனாகத் கதிலாவில் உள்ள உமியா மாதா கோயிலில் 14-வது நிறுவன தின விழாவில் காணொளி  மூலம் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் பூபேந்திரபாய் படேல், மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ருபாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கோவிலின் நிறுவன தினம் மற்றும் ராம நவமியை முன்னிட்டு அங்கு கூடியிருந்த மக்ககளுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். பக்தர்களின் அனைத்து விருப்பங்களையும் மா சித்திதாத்திரி பூர்த்தி செய்ய வேண்டும் என்று சைத்ரா நவராத்திரியின் புனிதமான தருணத்தில் பிரதமர் வாழ்த்து கூறினார். கிர்னாரின் புனித பூமியையும் அவர் வழிபட்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் அவர்களின் கூட்டு பலத்தையும், மாநிலம் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கான அக்கறையையும் தான் எப்போதும் உணர்ந்துள்ளதாக கூறினார். அயோத்தி மற்றும் நாடு முழுவதும் ராம நவமி பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். 2008-ம் ஆண்டு கோவிலை பிரதிஷ்டை செய்யும் வாய்ப்பு கிடைத்ததற்கும், கடந்த பல ஆண்டுகளாக மா உமியாவை தரிசனம் செய்வதற்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

ஆன்மீக மற்றும் தெய்வீக முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய இடமாக இருப்பதுடன், கதிலாவில் உள்ள உமியா மாதா ஆலயம் சமூக உணர்வு மற்றும் சுற்றுலாத் தலமாக மாறியுள்ளதற்கு பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். மா உமியாவின் அருளால், சமுதாயமும், பக்தர்களும் பல பெரிய பணிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.

மா உமியாவின் பக்தன் என்ற முறையில், தாய் பூமிக்கு எந்தவொரு சேதத்தையும் ஏற்படுத்த முடியாது என்று பிரதமர் குறிப்பிட்டார். தாய்க்கு தேவையில்லாத மருந்துகளை ஊட்டுவதில்லை என்பதால், நம் நிலத்திலும் தேவையற்ற ரசாயனங்களை பயன்படுத்தக்கூடாது, என்றார். ஒரு துளி அதிக பயிர் போன்ற நீர் சேமிப்பு திட்டங்கள் மூலம் நிலப்பரப்பைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அவர் வலியுறுத்தினார். குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது நீர் சேமிப்பு மக்கள் இயக்கமாக மேற்கொள்ளப்பட்டதை நினைவு கூர்ந்தார். ரசாயனங்களில் இருந்து தாய் பூமியை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தினார். தானும் கேசுபாயும் தண்ணீருக்காக பணியாற்றியது போல், தற்போதைய முதல்வர் தாய் பூமிக்காக பணியாற்றி வருவதாக கூறினார்.

மா உமியா மற்றும் பிற தெய்வங்களின் அருள், அரசின் முயற்சிகள், காரணமாக பாலின விகிதம் மேம்பட்டு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு  இயக்கம் நல்ல பலனை அளித்துள்ளதாக பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். குஜராத்தில் இருந்து ஏராளமான பெண்கள் ஒலிம்பி விளையாட்டுப் போட்டிகளில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார். குழந்தைகள் மற்றும் சிறுமிகளிடையே ஊட்டச்சத்து குறைபாட்டை களைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டியதன்  அவசியத்தை அவர் வலியுறுத்தினார். கர்ப்பிணித் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். ஊட்டச்சத்து குறைபாடு முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்று அவர் கூறினார். கோவில் அறக்கட்டளை மூலம் கிராமங்களில் ஆரோக்கியமான குழந்தைகளுக்கான போட்டியை நடத்துமாறு மோடி கேட்டுக் கொண்டார். ஏழை மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள், கோவிலின் இடங்கள் மற்றும் மண்டபங்களை யோகா முகாம்கள் மற்றும் வகுப்புகளுக்கு பயன்படுத்தலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1815406

****



(Release ID: 1815414) Visitor Counter : 198