நிதி அமைச்சகம்
வருவாய் பற்றாக்குறை மானியமாக 14 மாநிலங்களுக்கு ரூ.7,183.42 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது
Posted On:
08 APR 2022 12:35PM by PIB Chennai
வரி பகிர்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியமாக 14 மாநிலங்களுக்கு ரூ.7,183.42 கோடியை முதலாவது மாதத் தவணையாக மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை வியாழன் அன்று வெளியிட்டது. இந்த மானியம் 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகள்படி விடுவிக்கப்பட்டுள்ளது.
2022-23-ஆம் நிதியாண்டின் வரி பகிர்வுக்கு பிந்தைய, வருவாய் பற்றாக்குறை மானியமாக 14 மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.86,201 கோடி வழங்க 15-வது நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது. பரிந்துரைக்கப்பட்ட மாநிலங்களுக்கு, பரிந்துரைக்கப்பட்ட மானியத்தை 12 சமமான மாதாந்திர தவணைகளில் செலவினத்துறை விடுவிக்கும்.
ஒரு மாநிலத்தின் வருவாய்க்கும், செலவுக்கும் இடையேயான மதிப்பீட்டு இடைவெளி அடிப்படையில், 2020-21 முதல் 2025-26 வரையிலான காலத்திற்கு வரிப்பகிர்வு மதிப்பீடு செய்யப்பட்ட பின் தகுதி உள்ள மாநிலங்கள் எவ்வளவு மானியம் பெறலாம் என்பதை 15-வது நிதிக்குழு முடிவு செய்தது.
இதன்படி 2022-23ஆம் நிதியாண்டிற்கு ஆந்திரப்பிரதேசம் அசாம், இமாசலப்பிரதேசம், கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தராகண்ட், மேற்குவங்கம் ஆகிய 14 மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.86,201 மானியம் வழங்க பரிந்துரைக்கப்பட்டது. இதில் முதல் தவணையாக இந்த மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.7,183.42 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1814743
***************
(Release ID: 1814766)
Visitor Counter : 185