பிரதமர் அலுவலகம்

உலக சுகாதார தினத்தையொட்டி, வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் அனைவரின் நல்ல ஆரோக்கியத்திற்கும், நல்வாழ்விற்கும் பிரார்த்தனை செய்துள்ளார்

Posted On: 07 APR 2022 9:18AM by PIB Chennai

உலக சுகாதார தினத்தையொட்டி, வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவரின் நல்ல  ஆரோக்கியத்திற்கும், நல்வாழ்விற்கும் பிரார்த்தனை செய்துள்ளார்.  சுகாதாரத் துறையுடன் தொடர்புடைய அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.  ஆயுஷ்மான் பாரத், பிரதமரின் மக்கள் மருந்தகம் ஆகிய திட்டங்கள் நமது குடிமக்களுக்கு நல்ல தரமான மற்றும் குறைந்த செலவில் மருத்துவ வசதி கிடைப்பதை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன என்று அவர் கூறியுள்ளார்.  கடந்த 8 ஆண்டுகளில் மருத்துவக் கல்வித் துறை வேகமான மாறுதல்களை கண்டுள்ளது.  பல புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.  மாநில மொழிகளில் மருத்துவக் கல்வி பயில்வதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என்று  குறிப்பிட்ட அவர், இது எண்ணற்ற இளைஞர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் என்றார். 

தொடர்ச்சியான டுவிட்டர் பதிவுகளில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“ஆரோக்யம் பரம் பாக்யம் ஆரோக்யம் ஸர்வார்த்த ஸாதனம்

உலக சுகாதார தின வாழ்த்துக்கள், அனைவரும் நல்ல ஆரோக்கியமும், நல்வாழ்வும் பெறட்டும்.  சுகாதாரத் துறையுடன் தொடர்புடைய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாகவும் இந்நாள் இருக்கிறது.  நமது புவிக்கோள் பாதுகாப்பாக இருப்பது அவர்களின் கடின உழைப்பால்”

“இந்தியாவின் சுகாதார அடிப்படைக் கட்டமைப்பை விரிவுபடுத்த மத்திய அரசு ஓய்வின்றி உழைத்து வருகிறது.  நல்ல தரமான மற்றும் குறைந்த செலவில் மருத்துவ வசதி கிடைப்பதை உறுதி செய்வதில் கவனம் செலுத்தப்படுகிறது.  உலகின் மிகப்பெரிய சுகாதார கவனிப்பு திட்டமான ஆயுஷ்மான் பாரத்தின் தாயகமாக நமது நாடு இருப்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமிதத்தை அளிக்கிறது”

“பிரதமரின் மக்கள் மருந்தகம் போன்ற திட்டங்களின் பயனாளிகளுடன் கலந்துரையாடும் போது நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.  குறைந்த செலவில் மருத்துவம் என்பதற்கான நமது நோக்கம் காரணமாக ஏழைகள் மற்றும் நடுத்தர வகுப்பினரின் குறிப்பிடத்தக்க சேமிப்பை உறுதி செய்கிறது.  அதே சமயம் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேலும் அதிகப்படுத்த நமது ஆயுஷ் வலைப்பின்னலை நாம் வலுப்படுத்தி வருகிறோம்”.

“கடந்த 8 ஆண்டுகளில் மருத்துவக் கல்வித் துறை வேகமான மாறுதல்களை கண்டுள்ளது.  பல புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.  மாநில மொழிகளில் மருத்துவக் கல்வி பயில்வதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இது எண்ணற்ற இளைஞர்களின் விருப்பத்தை நிறைவேற்றும்”.

***************



(Release ID: 1814388) Visitor Counter : 173