பிரதமர் அலுவலகம்

இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம்-“இந்த்ஆஸ் எக்டா” பிரதமர் முன்னிலையில் கையெழுத்து


பிரதமர் மோரிசன் மற்றும் முன்னாள் பிரதமர் டோனி அபோட் ஆகியோரின் தலைமைக்கு பிரதமர் நன்றி

"இவ்வளவு குறுகிய காலத்தில் 'இந்த்ஆஸ் எக்டா' கையெழுத்தானது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பரஸ்பர நம்பிக்கையின் ஆழத்தை பிரதிபலிக்கிறது"

"இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் நாம் விநியோகச் சங்கிலிகளின் உறுதியை மேம்படுத்த முடியும், மேலும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் நிலைத்தன்மைக்கும் பங்களிக்க முடியும்."

"நம்மிடையேயான மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பரிமாற்றத்தை இந்த ஒப்பந்தம் எளிதாக்கும், மக்களுடனான உறவுகளை இது மேலும் வலுப்படுத்தும்"

உலகக் கோப்பை இறுதிப் போட்டியை முன்னிட்டு ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பிரதமர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்

Posted On: 02 APR 2022 11:07AM by PIB Chennai

இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் (இந்த்ஆஸ் எக்டா) மத்திய வர்த்தகம், தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் மற்றும் ஆஸ்திரேலிய வர்த்தகம், சுற்றுலா மற்றும் முதலீட்டு துறை அமைச்சர் திரு டான் டெஹான் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலியப் பிரதமர் மேன்மைமிகு ஸ்காட் மோரிசன் முன்னிலையில் காணொலி முறையில் இந்த நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

கையெழுத்திட்டப் பிறகு பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி, கடந்த ஒரு மாதத்தில் ஆஸ்திரேலிய பிரதமருடனான தம்முடைய மூன்றாவது கலந்துரையாடல் இது என்று குறிப்பிட்டார். பிரதமர் மோரிசனின் தலைமைத்துவத்திற்கும், அவரது வர்த்தக தூதர் மற்றும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் திரு டோனி அபோட்டின் முயற்சிகளுக்கும் அவர் தமது பாராட்டுகளைத் தெரிவித்தார். வெற்றிகரமான மற்றும் பயனுள்ள செயல்பாட்டிற்காக வர்த்தக அமைச்சர்கள் மற்றும் அவர்களது குழுவினரையும் அவர் பாராட்டினார்.

இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த்ஆஸ் எக்டா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பரஸ்பர நம்பிக்கையின் ஆழத்தை பிரதிபலிக்கிறது என்று பிரதமர் கூறினார். இரு பொருளாதாரங்களிலும் பரஸ்பரம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான மிகப்பெரிய சாத்தியக்கூறுகளை கோடிட்டுக் காட்டிய திரு மோடி, இரு நாடுகளும் இந்த வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள இந்த ஒப்பந்தம் உதவும் என்றார். "நமது இருதரப்பு உறவுகளுக்கு இது ஒரு முக்கியமானத் தருணம்" என்றும் அவர் வலியுறுத்தினார். "இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், நாம் ஒன்றாக இணைந்து விநியோகச் சங்கிலிகளின் உறுதியை அதிகரிக்க முடியும், மேலும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் நிலைத்தன்மைக்கு பங்களிக்க முடியும்" என்று பிரதமர் கூறினார்.

இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான உறவின் முக்கியத் தூணாக மக்களுக்கிடையேயான உறவுகளைக் குறிப்பிட்ட பிரதமர், நம்மிடையேயான மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பரிமாற்றத்தை இந்த ஒப்பந்தம் எளிதாக்கும், உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றார்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியை முன்னிட்டு ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பிரதமர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

சமீபத்திய ஆண்டுகளில் இரு நாட்டிற்கும் இடையேயான குறிப்பிடத்தக்க அளவிலான ஒத்துழைப்பை ஆஸ்திரேலியாவின் பிரதமர் திரு மோரிசன் குறிப்பிட்டதோடு பிரதமர் மோடியின் தலைமைக்கு நன்றி தெரிவித்தார். இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே வளர்ந்து வரும் உறவில் மற்றொரு மைல் கல்லென இந்த்ஆஸ் எக்டா ஒப்பந்தத்தை வர்ணித்த ஆஸ்திரேலிய பிரதமர், உறவுகளின் உறுதியின் அடிப்படையில் ஒப்பந்தம் மேலும் வலுவடைகிறது என்றார். மேம்பட்ட வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பைத் தவிர, வேலை, படிப்பு மற்றும் பயண வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் மூலம் இரு நாட்டு மக்களுக்கும் இடையேயான அன்பான மற்றும் நெருக்கமான உறவுகளை ஒப்பந்தம் மேலும் ஆழப்படுத்தும் என்று திரு மோரிசன் கூறினார். இரு ஆற்றல்மிக்க பிராந்திய பொருளாதாரங்களும் ஒத்த எண்ணம் கொண்ட ஜனநாயக நாடுகளும் பரஸ்பர நலனுக்காக ஒன்றிணைந்து செயல்படுவதால், 'மிகப்பெரிய கதவுகளில் ஒன்று' இப்போது திறக்கப்பட்டுள்ளது என்பதற்கான சக்திவாய்ந்த சமிக்ஞையை இது நமது வணிகங்களுக்கு அனுப்பும். ஜனநாயக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுகின்றன மற்றும் விநியோகச் சங்கிலிகளின் பாதுகாப்பு மற்றும் வலிமையை உறுதி செய்கின்றன என்பதற்கான தெளிவான செய்தியையும் இது வழங்குகிறது, என்றார் அவர்.

ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பு இரு நாடுகளுக்கு இடையிலான உறவு வலுவடைவது குறித்து தங்கள் கருத்துக்களை இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அமைச்சர்கள் தெரிவித்தனர்.

இரு நாடுகளுக்கும் இடையே வேகமாகப் பல்வகைப்படும் ஆழமான உறவின் நிலைத்தன்மை மற்றும் வலிமைக்கு வளர்ந்து வரும் இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் பங்களிக்கின்றன. சரக்குகள் மற்றும் சேவைகளில் வர்த்தகத்தை உள்ளடக்கிய இந்த்ஆஸ் எக்டா சமநிலையான மற்றும் சமமான வர்த்தக ஒப்பந்தமாகும். இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே உள்ள ஆழமான, நெருக்கமான மற்றும் யுக்தி சார்ந்த உறவுகளை இது மேலும் உறுதிப்படுத்துவதோடு பொருட்கள் மற்றும் சேவைகளில் இருதரப்பு வர்த்தகத்தை கணிசமாக மேம்படுத்தும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். வாய்ப்புகள், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் மற்றும் இரு நாட்டு மக்களின் பொது நலனை மேம்படுத்தும்.

***************



(Release ID: 1812752) Visitor Counter : 215