பிரதமர் அலுவலகம்

மாநிலங்களவையில் இருந்து ஓய்வுபெறும் உறுப்பினர்களுக்கு பிரதமர் பிரிவு உபச்சாரம்

“அனுபவமிக்க உறுப்பினர்கள் ஓய்வு பெறும் போது, அவர்களின் இழப்பை அவை உணர்கிறது”

“ஒட்டுமொத்த நாட்டின் உணர்வுகள், மனநிலை, வேதனை மற்றும் பரவசத்தை அவை பிரதிபலிக்கிறது”

Posted On: 31 MAR 2022 1:12PM by PIB Chennai

மாநிலங்களவையில் இருந்து ஓய்வுபெறும் அனைத்து உறுப்பினர்களின் பங்களிப்பை வெகுவாக பாராட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி, அவர்களது எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்து தெரிவித்துள்ளார்.   ஓய்வு பெறும் உறுப்பினர்களின் அனுபவத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், அவர்கள் விடைபெறுவதன் மூலம், அவர்கள் மேற்கொண்டு வந்த பணிகளையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு காரணமாக எஞ்சிய உறுப்பினர்களின் பணி அதிகரிப்பதாகவும் தெரிவித்தார். 

நாட்டின் அனைத்துப் பகுதிகளின் உணர்வுகள்மனநிலைவேதனை மற்றும் பரவசத்தை அவை பிரதிபலிப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். உறுப்பினர் என்ற முறையில் நாம் இந்த அவைக்கு அளித்து வரும் பங்களிப்பு ஏராளம் என்பது உண்மை என்றாலும், அதேவேளையில் இந்த அவையும் நமக்கு ஏராள வாய்ப்புகளை வழங்கியிருப்பதும் உண்மை என்று கூறிய திரு மோடி,  இந்திய சமுதாயத்தின் தற்போதைய மற்றும் அளவற்ற உணர்வுகளை உணரக்கூடிய வாய்ப்பை அவை நமக்கு தினந்தோறும் தருவதாகத் தெரிவித்தார்.

சில உறுப்பினர்கள் அவையிலிருந்து ஓய்வு பெற்றாலும்  அவர்களது பழுத்த அனுபவத்தை நாட்டின் அனைத்து பகுதிக்கும் எடுத்துச் செல்வார்கள் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

வருங்கால சந்ததியினருக்கு பயனுள்ள வகையில் மேற்கோள்காட்டும் விதமாக ஓய்வு பெறும் உறுப்பினர்கள் தங்களது அனுபவங்கள் குறித்து எழுத வேண்டும் என்றும் பிரதமர் யோசனை தெரிவித்தார்.   இந்த உறுப்பினர்கள், நாடு செல்ல வேண்டிய திசையை   ஒழுங்குபடுத்துவதுடன் அவர்களது நினைவுகள் நாட்டின் முன்னேற்றத்திற்காக அமைப்பு ரீதியான வகையில் பயன்படுத்திக் கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 

ஓய்வு பெறும் உறுப்பினர்கள் அனைவரும் சுதந்திர பெருவிழா கொண்டாட்டத்தில் மக்களை ஈர்க்க வேண்டும் எனவும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

 

***************



(Release ID: 1811948) Visitor Counter : 198