பிரதமர் அலுவலகம்
அகமதாபாதில் குஜராத் பஞ்சாயத்து மகாசம்மேளனத்தில் பிரதமர் உரை
“தற்போது சுதந்திரப் பெருவிழாவை நாம் கொண்டாடி வரும் வேளையில், ‘கிராமப்புற வளர்ச்சி‘ என்ற பாபுஜியின் கனவுகளை நனவாக்க வேண்டும்”
“ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்து பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து விவாதிப்பதைவிட வேறு எதுவும் இந்திய ஜனநாயகத்தின் வலிமையை பறைசாற்ற முடியாது
Posted On:
11 MAR 2022 6:23PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, அகமதாபாதில் இன்று (11.03.2022) நடைபெற்ற குஜராத் பஞ்சாயத்து மகா சம்மேளனத்தில் உரையாற்றினார். மாநிலம் முழுவதிலுமிருந்து வந்திருந்த பஞ்சாயத்து ராஜ் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.
குஜராத் மாநிலம் பாபுஜி (மகாத்மா காந்தி) மற்றும் சர்தார் வல்லபாய் படேலின் பூமி என பிரதமர் குறிப்பிட்டார். “பாபுஜி எப்போதும் கிராமப்புற வளர்ச்சி, கிராமங்களின் தற்சார்பு பற்றியே பேசி வந்தார். தற்போது நாம் சுதந்திரப் பெருவிழாவை கொண்டாடி வரும் வேளையில், ‘கிராமப்புற வளர்ச்சி‘ என்ற பாபுஜியின் கனவை நனவாக்க வேண்டும் ” என்று அவர் கூறினார்.
பெருந்தொற்றுப் பாதிப்பை கட்டுப்பாடாகவும் மற்றும் சிறந்த முறையிலும் எதிர்கொண்டதில் குஜராத்தின் பஞ்சாயத்து மற்றும் கிராமங்களின் பங்களிப்பை அவர் பாராட்டினார். குஜராத்தில் ஆண் பிரதிநிதிகளைவிட, பெண் பஞ்சாயத்து பிரதிநிதிகள் அதிக அளவில் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்து பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து விவாதிப்பதைவிட வேறு எதுவும் இந்திய ஜனநாயகத்தின் வலிமையை பறைசாற்றிவிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிறிய அளவிலான ஆனால் மிகவும் அடிப்படையான திட்டங்கள் மூலம் கிராமப்புற வளர்ச்சியை எவ்வாறு உறுதி செய்வது என்பது குறித்து பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு பிரதமர் அறிவுரை வழங்கினார். அவர்களது பள்ளியின் நிறுவன தினம் அல்லது பிறந்த நாளை கொண்டாடுமாறும் அவர் யோசனை தெரிவித்தார். அந்த வகையில், பள்ளி வளாகங்கள் மற்றும் வகுப்பறைகளை தூய்மைப்படுத்துவதுடன், பள்ளிகளில் நல்லொழுக்க செயல்பாடுகளை மேற்கொள்ளுமாறும் அவர் தெரிவித்தார். ஆகஸ்ட்’23 வரை சுதந்திர பெருவிழாவை நாடு கொண்டாடும் வேளையில், கிராமப்புறங்களில் 75 காலை நேர பேரணிகளை நடத்துமாறும் யோசனை தெரிவித்தார்.
மேலும் இந்த காலக்கட்டத்தில் ஒட்டுமொத்த கிராம மக்களும், ஒருங்கிணைந்து கிராமத்தின் முழுமையான வளர்ச்சிக் குறித்து சிந்திப்பதற்கான 75 நிகழ்ச்சிகளை நடத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டார். இது தவிர இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை நினைவு கூரும் விதமாக 75 மரக்கன்றுகளை நட்டு கிராமங்களில் சிறு சிறு காடுகளை உருவாக்குமாறு அவர் யோசனை தெரிவித்தார். ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தபட்சம் 75 விவசாயிகள், இயற்கை விவசாயத்தை பின்பற்றுபவராக இருக்க வேண்டும். ரசாயன உரங்களால் ஏற்படும் நச்சு பாதிப்பிலிருந்து பூமித்தாயை விடுவிக்க வேண்டும். நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கச் செய்வதன் மூலம் கோடைக்காலங்களில் உதவிகரமாக இருக்க ஏதுவாக மழைநீரை சேமிக்க 75 பண்ணைக் குட்டைகளை அமைக்குமாறும் பிரதமர் குறிப்பிட்டார்.
கோமாரி பாதிப்பிலிருந்து பாதுகாக்க அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்யுமாறும் அவர் கேட்டுக் கொண்டார். ஊராட்சி மன்றங்கள் மற்றும் தெருவிளக்குகளில் எல்இடி பல்புகளை பயன்படுத்துவதன் மூலம் மின்சாரத்தை சேமிக்கும் நடைமுறையைப் பின்பற்றுமாறும் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை கிராமங்களில் திரட்டி, மக்களை ஒன்று கூட்டி கிராமங்களில் பிறந்த நாளை கொண்டாடுவதுடன் அந்த மக்களின் நலனுக்கான அம்சங்கள் பற்றி விவாதிக்கலாம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களில் ஒருவராவது தினந்தோறும் ஒரு முறையாவது உள்ளூர் பள்ளிக் கூடத்திற்கு சென்று 15 நிமிடங்களாவது அங்கிருந்து அந்த கிராமத்தில் உள்ள பள்ளிக் கூடத்தை முழுமையாக கண்காணிப்பதுடன், பள்ளியின் கல்வித்தரம் மற்றும் தூய்மையைப் பராமரிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினார். பொது சேவை மையங்களை அதிக அளவில் பயன்படுத்திக் கொள்வது குறித்து பஞ்சாயத்து உறுப்பினர்கள் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டார். இதன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட சேவைகளுக்காக மக்கள் பெரிய நகரங்களை நோக்கி செல்வதைத் தடுக்கலாம். நிறைவாக, மாணவர்கள் யாரும் பள்ளிப்படிப்பை கைவிடாமலிருப்பதையும், குழந்தைகளின் தகுதிக்கு ஏற்ப அவர்கள் பள்ளிக்கூடம் அல்லது அங்கன்வாடி மையங்களில் சேர்க்கப்படுவதை உறுதி செய்யுமாறும் பஞ்சாயத்து உறுப்பினர்களை பிரதமர் கேட்டுக் கொண்டார். இந்த யோசனைகளை ஏற்றுக்கொள்ளும் விதமாக வாக்குறுதி அளிக்குமாறு பிரதமர் கோரிய போது, நிகழ்ச்சியில் பங்கேற்ற பஞ்சாயத்து உறுப்பினர்கள் அனைவரும் பலத்த கரவொலி எழுப்பி உறுதியளித்தனர்.
***************
(Release ID: 1805202)
Visitor Counter : 196
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam