பிரதமர் அலுவலகம்
மார்ச் 11-12 பிரதமர் குஜராத் செல்கிறார்
குஜராத் பஞ்சாயத் மகாசம்மேளனத்தில் பிரதமர் உரையாற்றுகிறார்; மாநிலம் முழுவதையும் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்துராஜ் பிரதிநிதிகள் இதில் பங்கேற்கின்றனர்
தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர், அந்தப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றுகிறார்
காவல்துறை, குற்றவியல் நீதி மற்றும் சீர்திருத்த நிர்வாகம் தொடர்பான பல்வேறு துறைகளில் தேவைப்படும் உயர்தர பயிற்சி பெற்ற மனிதவளத்தை உருவாக்க தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது
11-வது விளையாட்டு கும்பமேளாவை பிரதமர் தொடங்கி வைக்கிறார்
பிரதமர் 2010-ல் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது அவரது தொலைநோக்கு சிந்தனையால் தொடங்கப்பட்ட இந்த கும்பமேளா, குஜராத்தின் விளையாட்டு சூழலில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது
Posted On:
09 MAR 2022 6:42PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, மார்ச் 11-12-ல் குஜராத் செல்கிறார். 11-ம் தேதி பிற்பகல் 4 மணி அளவில் குஜராத் பஞ்சாயத் மகாசம்மேளனத்தில் பிரதமர் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். மார்ச் 12 காலை 11 மணி அளவில் தேசிய பாதுகாப்புப் பல்லைக்கழக கட்டடத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர், அப்பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவிலும் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றுகிறார்.
அன்று மாலை 6.30 மணி அளவில் 11-வது விளையாட்டு கும்பமேளாவை பிரதமர் தொடங்கி வைத்து உரையாற்ற உள்ளார்.
33 மாவட்ட ஊராட்சிகள், 248 தாலுக்கா பஞ்சாயத்துகள் மற்றும் 14,500-க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துக்களுடன் குஜராத் மாநிலம் மூன்றடுக்கு பஞ்சாயத்துராஜ் முறையை கொண்டதாக உள்ளது. ‘குஜராத் பஞ்சாயத்துராஜ் மகா சம்மேளனம்: நமது கிராமம், நமது பெருமை‘ என்ற தலைப்பிலான இந்த நிகழ்ச்சியில், மாநிலம் முழுவதும் உள்ள மூன்றடுக்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளையும் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
காவல்துறை, குற்றவியல் நீதி மற்றும் சீர்திருத்த நிர்வாகம் தொடர்பான பல்வேறு துறைகளில் தேவைப்படும் உயர்தர பயிற்சி பெற்ற மனிதவளத்தை உருவாக்க தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
2010-ல் குஜராத் அரசால் ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு திறன் பல்கலைக்கழகத்தை மேம்படுத்தி தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் என்ற பெயரில் தேசிய காவல்துறை பல்கலைக்கழகத்தை அரசு அமைத்துள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பல்கலைக்கழகம், 1, அக்டோபர் 2020 முதல் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகம் அறிவாற்றல் மற்றும் தொழில்துறை வளங்களை ஊக்குவித்து, தனியார் துறையினருடனான ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதோடு, காவல் மற்றும் பாதுகாப்புத்துறை சார்ந்த பல்வேறு துறைகளில், உயர் சிறப்பு மையங்களையும் அமைக்க உள்ளது.
தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில், காவல்துறை மற்றும் காவல் அறிவியல் மற்றும் மேலாண்மை, குற்றவியல் சட்டம் மற்றும் நீதி, இணைய உளவியல், தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் இணைய பாதுகாப்பு, குற்றப்புலனாய்வு, பாதுகாப்பு சங்கேத மொழிகள், உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் உத்திகள், உடற்கல்வி மற்றும் விளையாட்டு, கடலோரம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு போன்ற உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான பாடங்களில் பட்டயப்படிப்பு (டிப்ளமோ) முதல் முனைவர் பட்டம் வரையிலான படிப்புகளை வழங்க உள்ளது. தற்போது இந்தப் பாடப்பிரிவுகளில் 18 மாநிலங்களைச் சேர்ந்த 822 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
2010-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, அவரது தொலைநோக்கு சிந்தனையின் விளைவாக 16 விளையாட்டுகள் மற்றும் 13 லட்சம் பங்கேற்பாளர்களுடன் தொடங்கப்பட்ட விளையாட்டு கும்பமேளா, தற்போது 36 பொது விளையாட்டுகள் மற்றும் 26 பாரா விளையாட்டுக்களுடன் நடத்தப்படுகிறது. 11-வது விளையாட்டு கும்பமேளாவில் பங்கேற்க 45 லட்சத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
இந்த விளையாட்டு கும்பமேளா குஜராத்தின் விளையாட்டு சூழலில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. வயது வித்தியாசமின்றி மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் இதில் பங்கேற்று ஒரு மாத காலத்திற்கு மேலாக விளையாட உள்ளனர். கபடி, கோ-கோ, கயிறு இழுத்தல், யோகாசனம், மல்லர்கம்பம் போன்ற பாரம்பரிய விளையாட்டுக்கள் மற்றும் பனிச்சறுக்கு, டென்னிஸ் போன்ற நவீன விளையாட்டுகளின் சங்கமமாக இது நடத்தப்படுகிறது. அடித்தள அளவில் விளையாட்டுத் திறன் உடையவர்களை அடையாளம் காண்பதில் இந்த விழா முக்கியப் பங்கு வகிக்கிறது. அத்துடன் பாரா விளையாட்டுக்களுக்கும் (மாற்றுத்திறனாளி விளையாட்டு) குஜராத் முக்கியத்துவம் அளித்து வருகிறது.
----
(Release ID: 1804534)
Visitor Counter : 214
Read this release in:
Malayalam
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada