பிரதமர் அலுவலகம்

புனே சிம்பயாசிஸ் பல்கலைக்கழகத்தின் பொன்விழா கொண்டாட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்


சிம்பயாசிஸ் ஆரோக்கிய வளாகத்தையும் துவக்கி வைத்தார்

‘’ ஞானம் அகன்று விரிவடைய வேண்டும், உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக இணைக்கும் ஊடகமாக அறிவு திகழ வேண்டும், இதுதான் நமது கலாச்சாரம். நம் நாட்டில் இன்னும் இந்த பாரம்பரியம் உயிர்ப்புடன் இருப்பதைக் கண்டு நான் மகிழ்கிறேன்’’

‘’ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா, தற்சார்பு இந்தியா போன்ற இயக்கங்கள் உங்களது விருப்பங்களைப் பிரதிபலிக்கின்றன. இன்றைய இந்தியா புதுமையானது, முன்னேறுவது, உலகம் முழுவதிலும் செல்வாக்கு கொண்டது’’

‘’ முந்தைய தற்காப்பு மற்றும் சார்பு உளவியலின் தீங்கு விளைவிக்கும் தாக்கத்தால் பாதிக்கப்படாத உங்களது தலைமுறை ஒருவகையில் அதிருஷ்டமானது. இந்த பெருமை எல்லாம் உங்கள் அனைவரையும், எங்கள் இளைஞர்களையும் சாரும்’’

‘’ நாட்டின் இன்றைய அரசு, நாட்டின் இளைஞர்களின் ஆற்றலை நம்புகிறது. அதனால்தான், ஒன்றன்பின் ஒன்றாக துறைகளை உங்களுக்காக நாங்கள் திறந்து விடுகிறோம்’’

‘’ வளர்ந்து வரும் இந்தியாவின் செல்வாக்கால், நாங்கள் ஆயிரக்கணக்கான மாணவர்களை யுக்ரைனில் இருந்து தாய்நாட்டுக்கு திரும்ப அழைத்து வந்துள்ளோம்’’

Posted On: 06 MAR 2022 3:22PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று புனேயில் சிம்பயாசிஸ் பல்கலைக் கழகத்தின் பொன்விழா கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார். சிம்பயாசிஸ் ஆரோக்கிய வளாகத்தையும் அவர் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மகாராஷ்டிர மாநில ஆளுநர் திரு. பகத் சிங் கோஷ்யாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்களை பாராட்டிய பிரதமர், ‘ வசுதேவ குடும்பகம் என்னும் நிறுவனத்தின் குறிக்கோளைக் குறிப்பிட்டார். பல்வேறு நாடுகளின் மாணவர்கள் வடிவத்தில், இந்த நவீன நிறுவனம், இந்தியாவின் தொன்மையான பாரம்பரியத்தை பிரிதிபலிக்கிறது என்று அவர் கூறினார். ஞானம் அகன்று விரிவடைய வேண்டும், உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக இணைக்கும் ஊடகமாக அறிவு திகழ வேண்டும், இதுதான் நமது கலாச்சாரம். நம் நாட்டில் இன்னும் இந்த பாரம்பரியம் உயிர்ப்புடன் இருப்பதைக் கண்டு நான் மகிழ்கிறேன்’’ என்று அவர் கூறினார்.

புதிய இந்தியாவின் நம்பிக்கையை வலியுறுத்திய பிரதமர், உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று, உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட் அப் சூழலை அது கொண்டுள்ளது என்றார். ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா, தற்சார்பு இந்தியா போன்ற இயக்கங்கள் உங்களது விருப்பங்களைப் பிரதிபலிக்கின்றன. இன்றைய இந்தியா புதுமையானது, முன்னேறுவது, உலகம் முழுவதிலும் செல்வாக்கு கொண்டது’’ என்று அவர் தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி திட்டத்தில், இந்தியா எவ்வாறு உலகிற்கு தனது ஆற்றலை நிரூபித்தது என்பதை புனேவாசிகளுக்கு  நன்கு தெரியும் என்று பிரதமர் கூறினார்.

இந்தியாவின் செல்வாக்கு குறித்து எடுத்துக்காட்டிய அவர், யுக்ரைன் போர் பிராந்தியத்தில் இருந்து ஆபரேஷன் கங்கா மூலம் இந்தியா தனது மக்களை பாதுகாப்பாக கொண்டு வந்துள்ளது என்று தெரிவித்தார். உலகின் பெரிய நாடுகள் இதில் கஷ்டப்படும் நிலையில், வளர்ந்து வரும் இந்தியாவின் செல்வாக்கால், நாங்கள் ஆயிரக்கணக்கான மாணவர்களை யுக்ரைனில் இருந்து தாய்நாட்டுக்கு திரும்ப அழைத்து வந்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

நாட்டின் மனநிலை மாறிவிட்டதை பிரதமர் சுட்டிக்காட்டினார். முந்தைய தற்காப்பு மற்றும் சார்பு உளவியலின் தீங்கு விளைவிக்கும் தாக்கத்தால் பாதிக்கப்படாத உங்களது தலைமுறை ஒருவகையில் அதிருஷ்டம் கொண்டதாகும். இந்த பெருமை எல்லாம் உங்கள் அனைவரையும், எங்கள் இளைஞர்களையும் சாரும்’’ என்று அவர் தெரவித்தார்.

ஒரு காலத்தில் எட்ட முடியாது என்று நினைத்திருந்த துறைகளில் எல்லாம் இப்போது இந்தியா உலகத் தலைமைத்துவம் வாய்ந்த நாடாக மாறியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். மொபைல் உற்பத்தியில் இந்தியா உலகின் இரண்டாவது பெரிய நாடாக மாறியுள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு 2 மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் இருந்தன. இன்று இந்தப் பணியில், 200-க்கும் மேற்பட்ட அலகுகள் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பாதுகாப்பு துறையில், உலகின் மிகப்பெரிய இறக்குமதி நாடாக கருதப்பட்ட இந்தியா தற்போது ஏற்றுமதி நாடாக உயர்ந்துள்ளதாக பிரதமர் கூறினார். இன்று, இரண்டு பெரிய பாதுகாப்பு வழித்தடங்கள் வரவுள்ளன, அங்கு மிகப்பெரிய நவீன ஆயுதங்கள் நாட்டின் பாதுகாப்பு தேவைக்காக தயாரிக்கப்படவுள்ளன என்று அவர் கூறினார்.

பல்வேறு பிரிவுகள் திறக்கப்பட்டுள்ளதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், ஜியோ-ஸ்பேசியல் சிஸ்டம், ட்ரோன்கள், செமி-கண்டக்டர்கள், விண்வெளி தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்யப்பட்டுள்ள சமீபத்திய சீர்திருத்தங்களை சுட்டிக்காட்டினார். நாட்டின் இன்றைய அரசு, நாட்டின் இளைஞர்களின் ஆற்றலை நம்புகிறது. அதனால்தான், ஒன்றன்பின் ஒன்றாக துறைகளை உங்களுக்காக நாங்கள் திறந்து விடுகிறோம்’’ என்று அவர் தெரிவித்தார்.

நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும், உங்கள் வாழ்க்கைத் தொழிலுக்காக இலக்குகளை நீங்கள் நிர்ணயிக்கும் விதத்தில்,நாட்டுக்காகவும் சில குறிக்கோள்களை வைத்திருக்க வேண்டும்’’ என திரு. மோடி கேட்டுக்கொண்டார். உள்ளூர் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண வேண்டும் என்று அவர்களை பிரதமர் வலியுறுத்தினார். உடல் தகுதியைப் பராமரித்து, மகிழ்ச்சியாகவும், துடிப்புடனும் திகழுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.’’ நமது இலக்குகள் தனிப்பட்ட வளர்ச்சியில்  இருந்து, நாட்டின் வளர்ச்சிக்காக செல்லும் போது, நாட்டு கட்டமைப்பில் பங்கேற்கிறோம் என்ற உணர்வு மேம்படும்’’ என்று திரு. மோடி கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் கருப்பொருள்களை தேர்வு செய்து, அவற்றை தேசிய மற்றும் உலக தேவைக்காக மனதில் இருத்தி, செயல்பட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். முடிவுகள் மற்றும் எண்ணங்கள் ஆகியவற்றை பிரதமர் அலுவலகத்திலும் பகிர்ந்து கொள்ளலாம் என அவர் கூறினார்.

*************



(Release ID: 1803370) Visitor Counter : 198