சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

உலக செவித்திறன் தின நிகழ்ச்சி: குழந்தைகளுக்கான செவித்திறன் பரிசோதனை மையங்களை தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா

Posted On: 03 MAR 2022 2:27PM by PIB Chennai

பத்தாவது உலக செவித்திறன் தினத்தை முன்னிட்டு, புதுதில்லி டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா உரையாற்றினார். புதுதில்லி, மைசூரில்  குழந்தைகளுக்கான செவித்திறன் பரிசோதனை மையங்களையும் அவர் காணொலி மூலம்  தொடங்கி வைத்தார். 

"வாழ்நாள் முழுவதும் கேட்க, கவனமாகக் கேளுங்கள்" என்பதுதான் இந்தாண்டு உலக செவித்திறன் தினத்தின் கருப்பொருள். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா  பேசியதாவது:

செவித்திறன் குறைபாடு பிரச்னை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு கூட்டு முயற்சிகள் முக்கியம்.  செவித்திறன் குறைபாட்டை முன்கூட்டியே கண்டறிந்து சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பது தொடர்பாக மக்களுக்கு கூடுதல் தகவல்களை தெரிவிப்பதில் ஒவ்வொருவரும் கூட்டாக இணைந்து செயல்பட வேண்டும். இப்பிரச்சினையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கவில்லை என்றால் அது இயலாமையாக மாறி பலரின் வாழ்க்கையை பாதிக்கும்.

செவித்திறன் குறைபாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மருத்துவர்கள், செவிலியர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆஷா மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். குழந்தைகளுக்கு செவித்திறன் குறைபாடு குறித்து முன்கூட்டியே பரிசோதிப்பது குறித்து மக்களுக்கு மேலும் தகவல்களை அவர்கள் அளிக்க வேண்டும். காது கேட்காத பிரச்னைகளுக்கு, நாம் சுயமாக சிகிச்சை எடுத்துக் கொள்ளக் கூடாது. மருத்துவர்களை ஆலோசித்து முறையான சிகிச்சை பெற வேண்டும். நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காலத்தில், செவித்திறன் குறைபாட்டை தடுக்க முடியும் மற்றும் சிகிச்சை பெற முடியும்.

இவ்வாறு மத்திய அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா  கூறினார்.

மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் டாக்டர். பாரதி பிரவீன் பவார் பேசுகையில், ‘‘ உலக செவித்திறன்  தினம், செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கு நமது பொறுப்புகளை நினைவுபடுத்துகிறது. கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள் ஆகியோர் இப்பிரச்னை குறித்து அறிந்திருக்க வேண்டும், தங்கள் குழந்தைகளுக்கு செவித்திறன் குறைபாடு பிரச்சினை ஏதும் இருந்தால், முன்கூட்டியே சிகிச்சை பெற வேண்டும்’’ என கூறினார்.  

புதுதில்லி எய்ம்ஸ் மற்றும் 11 சேவை மையங்கள், மைசூரில் உள்ள அகில இந்திய பேச்சு மற்றும் செவித்திறன் மையம் ஆகியவற்றில்  குழந்தைகளுக்கான செவித்திறன் பரிசோதனை வசதிகளையும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1802616

*************



(Release ID: 1802746) Visitor Counter : 278