ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

“ஆபரேஷன் கங்கா” திட்டத்தின் ஒரு பகுதியாக உக்ரைனில் இருந்து 200 மாணவர்கள் மற்றும் இந்தியர்கள் தில்லி வந்தடைந்தனர்

Posted On: 03 MAR 2022 12:07PM by PIB Chennai

மத்திய அரசின் ஆபரேஷன் கங்கா திட்டத்தின் ஒரு பகுதியாக, உக்ரைனில் இருந்து சுமார் 200 மாணவர்கள் மற்றும் இந்தியர்கள், இந்தியாவிற்கு திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளனர்.

 தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவர்களை மத்திய ரசாயன உரத்துறை இணையமைச்சர் திரு பகவந்த் கூபா வரவேற்றார்.  இவர்களை ஏற்றி வந்த இன்டிகோ சிறப்பு விமானம் இன்று காலை தில்லி வந்திறங்கியது.

 தாயகம் திரும்பிய அனைவரையும் வரவேற்ற மத்திய அமைச்சர், உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக தாயகம் திரும்பச் செய்ய, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார். இன்று வந்திறங்கிய மாணவர்களின் நண்பர்கள் மற்றும் சகாக்களும் விரைவில் அழைத்துவரப்படுவார்கள் என்றும் அவர் உறுதியளித்தார்.

 இந்தியா திரும்பியதும் குடும்பத்தினரை சந்தித்த மாணவர்கள், மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். அந்த விமானத்தில் வந்த மிகக்குறைந்த வயதுடைய ஒரு மாணவர், கண்களில் நீர் ததும்ப, போர் மேகம் சூழ்ந்துள்ள நாட்டில் இருந்து தாங்கள் பத்திரமாக  அழைத்து வரப்பட்டிருப்பதில் ஆச்சர்யப்பட எதுவுமில்லை, ஏனெனில் பிரதமர் திரு நரேந்திர மோடி இதனை சாத்தியமாக்கியுள்ளார் என்று கூறினார்.

புதன் கிழமை இரவு 10.35 மணிக்கு இஸ்தான்புல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இன்டிகோ விமானம், இன்று காலை 8.31 மணிக்கு புதுதில்லி வந்தடைந்தது.

ஆபரேஷன் கங்கா இயக்கத்தில் இணைந்துள்ள ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இன்டிகோ மற்றும் ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் உக்ரைனின் அண்டை நாடுகளில் இருந்து தில்லி மற்றும் மும்பைக்கு ஏராளமான விமானங்களை இயக்கி வருகின்றன.

***************


(Release ID: 1802594) Visitor Counter : 238