பிரதமர் அலுவலகம்

அருணாச்சலப்பிரதேச பொன்விழா மற்றும் மாநிலம் அமைக்கப்பெற்ற 36-வது ஆண்டு தினத்தில் பிரதமர் உரையாற்றினார்


‘’ஆங்கிலேய –அபோர் போராகட்டும் , சுதந்திரத்திற்கு பின்னர் எல்லைப் பாதுகாப்பாகட்டும், அருணாச்சலப் பிரதேச மக்களின் வீரக்கதைகள் ஒவ்வொரு இந்தியருக்கும் விலைமதிப்பில்லா பாரம்பரியமாகும்’’

‘’அனைவருடன் இணைந்து, அனைவருக்கும் மேம்பாடு, அனைவரின் விசுவாசம் , அனைவரின் முயற்சி " என்கிற பாதை, அருணாச்சலப் பிரதேசத்தின் சிறப்பான எதிர்காலத்தை உறுதி செய்யும்’’
‘’கிழக்கு இந்தியா, குறிப்பாக வடகிழக்கு இந்தியா 21-ம் நூற்றாண்டில் இந்தியாவின் வளர்ச்சிக்கு எஞ்சினாக இருக்கும்’’

‘’அருணாசலை கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய நுழைவு வாயிலாக மாற்ற நாங்கள் முழு வேகத்துடன் உழைக்கிறோம். அருணாச்சலின் உத்திபூர்வமான பங்கைக் கருத்தில் கொண்டு, மாநிலத்தில் நவீன உள்கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது’’

Posted On: 20 FEB 2022 12:03PM by PIB Chennai

 

அருணாச்சலப்பிரதேச பொன்விழா மற்றும் மாநிலம் அமைக்கப்பெற்ற 36-வது ஆண்டு தினத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி அம்மாநில மக்களை வாழ்த்தியுள்ளார். சூரிய உதயத்தின் நிலமாக, தங்களது அடையாளத்தை கடந்த 50 ஆண்டுகளாக வலுப்படுத்தி வந்துள்ளதற்காக அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.  புகழ்பெற்ற பாரதரத்னா விருது பெற்ற டாக்டர் பூபன் ஹசாரிகாவின்   'அருணாச்சல் ஹமாரா’ என்னும் பாடலை அவர் குறிப்பிட்டார்.  அருணாச்சலப்பிரதேச பொன்விழா மற்றும் மாநிலம் அமைக்கப்பெற்ற 36-வது ஆண்டு தினத்தில், அவர் உரையாற்றினார்.

தேசபக்தி, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை ஊட்டுவதற்காகவும், நாட்டின் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காவும்பிரதமர் அருணாச்சல் மக்களைப் பாராட்டினார். நாட்டுக்காக உயிர்நீத்த அருணாச்சலப் பிரதேச தியாகிகளுக்கு அவர் மரியாதை செலுத்தினார். ஆங்கிலேய –அபோர் போராக இருந்தாலும், சுதந்திரத்திற்குப் பின்னர் எல்லைப் பாதுகாப்பாக இருந்தாலும், அருணாச்சலப் பிரதேச மக்களின் வீரக்கதைகள் ஒவ்வொரு இந்தியருக்கும் விலைமதிப்பில்லா பாரம்பரியமாகும் என்று பிரதமர்  கூறினார்.

மாநிலத்திற்குப் பல முறை தாம் சென்றுள்ளதை நினைவு கூர்ந்துள்ள பிரதமர், முதலமைச்சர் திரு பெமா காண்டு தலைமையின் கீழான இரட்டை எஞ்சின் அரசு மேற்கொண்டுள்ள வளர்ச்சியின் வேகம் குறித்து மனநிறைவை வெளியிட்டார். சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஷ்வாஸ், சப்கா பிரயாஸ் பாதை, அருணாச்சலப் பிரதேசத்தின் சிறப்பான எதிர்காலத்தை உறுதி செய்யும் என்று அவர் கூறினார்.

கிழக்கு இந்தியா, குறிப்பாக வடகிழக்கு இந்தியா 21-ம் நூற்றாண்டில் இந்தியாவின் வளர்ச்சிக்கு  எஞ்சினாக இருக்கும் என்று உறுதியுடன் தெரிவித்த பிரதமர், கடந்த ஏழு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களைப் பட்டியலிட்டார். தொடர்புத்துறையில் செய்யப்பட்ட விரிவான பணிகள், மின்சார கட்டமைப்புகள் ஆகியவை அருணாச்சலப் பிரதேசத்தில் மக்களின் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளன.  இந்தப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து தலைநகரங்களும் முன்னுரிமை அடிப்படையில் ரயில் போக்குவரத்து  மூலம் இணைக்கப்பட்டு வருகின்றன. அருணாசலை கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய நுழைவு வாயிலாக மாற்ற நாங்கள் முழு வேகத்துடன் உழைக்கிறோம். அருணாச்சலின் உத்திபூர்வமான பங்கைக் கருத்தில் கொண்டு, மாநிலத்தில் நவீன உள்கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது என்று அவர் தெரவித்தார்.

அருணாச்சலப் பிரதேசம் இயற்கை மற்றும் கலாச்சாரத்துடன் நல்லிணக்கம் கொண்டு முன்னேறி வருகிறது என்று பிரதமர் தெரிவித்தார். ‘’ உங்களது முயற்சியால், அருணாச்சல், உயிரிப்பல்லுயிர் பெருக்கத்தில் மிக முக்கிய பகுதிகளில் ஒன்றாக திகழ்கிறது’’ என்று கூறி அம்மாநில மக்களைப் பாராட்டினார். 

சுகாதாரம், கல்வி, திறன் மேம்பாடு, மகளிர் அதிகாரமளித்தல், சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்ட பிரிவுகளில் முதலமைச்சரின் முயற்சியால், ஏற்பட்டுள்ள வளர்ச்சி  குறித்து திரு மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். மாநிலத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் மத்திய சட்ட அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூவுக்கும் பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார்.

அருணாச்சலின் சுற்றுலா வளத்தை உலக அளவில் கொண்டு செல்லும் தமது உறுதிப்பாட்டையும் பிரதமர் தெரிவித்துக் கொண்டார்.



(Release ID: 1799811) Visitor Counter : 207