மத்திய அமைச்சரவை

ஜி-20 தலைமையை இந்தியா ஏற்பதற்கான ஏற்பாடுகள் மற்றும் ஜி-20 செயலகத்தை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 15 FEB 2022 5:23PM by PIB Chennai

ஜி-20 அமைப்புக்கு செயலகம் உருவாக்குவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று  நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. ஜி-20 அமைப்பின் தலைமையை இந்தியா ஏற்கவுள்ள நிலையில் அதன் செயலகத்தை அமைப்பது மற்றும் ஒட்டுமொத்த கொள்கை முடிவுகளை செயலாக்கும் அமைப்புகளை ஏற்படுத்துவது ஆகியவற்றுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

 ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை 2022 டிசம்பர் 1 முதல் 2023 நவம்பர் 30 வரை இந்தியா ஏற்கவுள்ளது. இது 2023-ல் நடைபெறவுள்ள ஜி-20 உச்சிமாநாட்டுடன் நிறைவடையும். உலக பொருளாதார நிர்வாகத்தில் முக்கிய பங்குவகிக்கும் சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான முக்கிய அமைப்பாக ஜி-20 விளங்குகிறது.

ஜி-20 தலைமைப் பொறுப்பை ஏற்கும் நாட்டில், செயலகம் அமைப்பது அதற்கான ஏற்பாடுகளை அந்நாடு மேற்கொள்வது வழக்கமாகும். வெளியுறவு அமைச்சகம், நிதி அமைச்சகம் மற்றும் பொருத்தமான மற்ற அமைச்சகங்கள் மற்றும் துறைகளிலிருந்து இது குறித்த நிபுணத்துவம் பெற்ற பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். 2024 பிப்ரவரி வரை இந்தச் செயலகம் செயல்படும்.

 பிரதமர் தலைமையிலான உயர்மட்ட குழு செயலக செயல்பாட்டுக்கு வழிகாட்டும். இந்த குழுவில் இடம்பெறும் நிதியமைச்சர், உள்துறை அமைச்சர், வெளியுறவு அமைச்சர், ஜி-20 ஷெர்பா அமைப்பு (வர்த்தகம் மற்றும் தொழில், ஜவுளி, நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர்) ஆகியோர் இந்தியாவின் ஜி-20 தலைமைப் பொறுப்புக்கு ஒட்டுமொத்த வழிகாட்டுதலை வழங்குவார்கள். மேலும் ஜி-20  தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்பார்வையிட ஒருங்கிணைப்பு குழு ஒன்றும் அமைக்கப்படும். இந்தக் குழு உயர்மட்ட குழுவுக்கு ஏற்பாடுகள் குறித்து தகவல்களை அளிக்கும். பன்னோக்கு அமைப்புகளில் உலக விஷயங்கள் குறித்த இந்தியாவின் தலைமைப் பொறுப்புக்கு ஜி-20 செயலகம் உதவிகரமாக இருக்கும்.

***************



(Release ID: 1798547) Visitor Counter : 466