நிதி அமைச்சகம்
மத்திய நிதிநிலை அறிக்கை 2022-23, பிப்ரவரி 1ம் தேதி, காகிதம் இல்லா முறையில் தாக்கல் : செயலியை அனைவரும் பதிவறக்கம் செய்யலாம்
Posted On:
27 JAN 2022 6:53PM by PIB Chennai
மத்திய நிதிநிலை அறிக்கை 2022-23-ஐ, மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம் தேதி அன்று காகிதம் இல்லா முறையில் தாக்கல் செய்யவுள்ளார்.
நிதிநிலை அறிக்கையின் இறுதி கட்ட நடவடிக்கையை குறிக்கும் வகையில், இதன் தயாரிப்பில் ஈடுபட்ட நிதியமைச்சக ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. வழக்கமாக இந்தப் பணி அல்வா தயாரிப்புடன் நடைபெறும். இந்தாண்டு பெருந்தொற்று சூழலை கருத்தில் கொண்டு, சுகாதார பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுவதற்காக அல்வா தயாரிக்கும் விழாவுக்கு பதிலாக இனிப்புகள் வழங்கப்பட்டன.
நிதிநிலை அறிக்கை ரகசியத்தை பராமரிக்க, நிதிநிலை அறிக்கை தயாரிப்பில் ஈடுபட்ட அதிகாரிகள், நிதி நிலை அறிக்கை வெளியாகும் வரை, பட்ஜெட் பிரஸ் அமைந்துள்ள நார்த் பிளாக் கட்டிடத்திலேயே தங்கியிருப்பர். நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த பின்பே, இந்த அதிகாரிகள் தங்கள் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்வர்.
வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையாக, மத்திய நிதிநிலை அறிக்கை 2021-22, முதல் முறையாக காகிதம் இல்லா முறையில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதிநிலை அறிக்கை குறித்த செயலியும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களுக்காக வெளியிடப்பட்டது. அதேபோல் 2022-23 மத்திய நிதிநிலை அறிக்கையும், நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பின்பு கைப்பேசி செயலியில் கிடைக்கும்.
இந்த கைப்பேசி செயலியில், பட்ஜெட் உரை, ஆண்டு நிதிநிலை அறிக்கை, மானிய கோரிக்கைகள், நிதி மசோதா என 14 விதமான ஆவணங்களை அரசியல் சாசனத்தில் பரிந்துரைத்துள்ளபடி முழுமையாக பார்வையிடலாம். ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் இந்த செயலி ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளத்தில் கிடைக்கும்.
இந்த செயலியை (www.indiabudget.gov.in) என்ற இணையளத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும். பட்ஜெட் ஆவணங்களை, இந்த இணையளத்தில் பொதுமக்களும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
******************
(Release ID: 1793047)
Visitor Counter : 693