புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
மேற்கூரை சூரிய சக்தி மின் உற்பத்தித் திட்டங்களின் முன்னேற்றத்தை ஆய்வு செய்த மின்சாரம் மற்றும் புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர்; திட்டத்தை எளிமைப்படுத்த அறிவுறுத்தியுள்ளார்
Posted On:
21 JAN 2022 11:49AM by PIB Chennai
மத்திய மின்துறை மற்றும் புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு.ஆர்.கே.சிங், மேற்கூரை சூரிய சக்தி மின் உற்பத்தித் திட்டங்களின் முன்னேற்றத்தை 19, ஜனவரி 2022 அன்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக்குப் பிறகு, மேற்கூரை சூரிய சக்தி மின் உற்பத்தித் திட்டத்தை எளிமைப்படுத்தி, மக்கள் இத்திட்டத்தை எளிதில் பெறுவதற்கு வகை செய்யுமாறு அறிவுறுத்தினார். இனிமேல், எந்த வீட்டிலும் பட்டியலிடப்பட்ட வியாபாரிகள் மூலம் மேற்கூரை சூரிய சக்தி மின் உற்பத்தித் தகடுகளை பொருத்த வேண்டாம் என அவர் உத்தரவிட்டார்.
வீடுகளில் தாங்களாகவோ அல்லது அவரவர் விரும்பும் வியாபாரியிடமிருந்தோ இந்த மேற்கூரை சூரிய சக்தி மின் உற்பத்தித் தகடுகளை பொருத்திக் கொள்ளலாம், அத்துடன் தாங்கள் பொருத்தியுள்ள மேற்கூரை சூரிய சக்தி மின் உற்பத்தித் தகட்டின் புகைப்படத்துடன், அதை பொருத்திய விவரங்களை மின்சார விநியோக நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டும். இந்த தகவலை, கடிதம் / விண்ணப்பம் வாயிலாகவோ அல்லது பிரத்யேக இணையதளங்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம். இது பற்றிய தகவல் கிடைக்கப் பெற்ற 15 நாட்களுக்குள் மின்சார விநியோக நிறுவனம் நெட் மீட்டரிங் பொருத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
மேற்கூரை தகடு பொருத்தப்பட்ட 30 நாட்களுக்குள் அதற்கான மானியத் தொகை வீட்டு உரிமையாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். 3 கிலோ வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட மேற்கூரை தகடுகளுக்கு 40 சதவீதமும், 10 கிலோ வாட் வரையிலான மின் உற்பத்தித் திறன் கொண்ட மேற்கூரை தகடுகளுக்கு 20 சதவீதமும் மத்திய அரசால் மானியமாக வழங்கப்படும்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1791404
***************
(Release ID: 1791425)
Visitor Counter : 622