பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மொரீசியஸில் வீடுகள், சிவில் சர்வீஸ் கல்லூரி, 8 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டம் : பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மொரீசியஸ் பிரதமர் பிரவிந்த் ஜகுநாத் கூட்டாக தொடங்கி வைத்தனர்

Posted On: 20 JAN 2022 6:48PM by PIB Chennai

மொரீசியஸில் சமூக வீட்டு வசதி திட்டத்தை, பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் மொரீசியஸ் பிரதமர் திரு பிரவிந்த் குமார் ஜகுநாத் ஆகியோர் இன்று கூட்டாக தொடங்கி வைத்தனர்.  இந்தியா மற்றும் மொரீசியஸ் இடையேயான வளர்ச்சி கூட்டுறவின் ஒரு பகுதியாக இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், சிவில் சர்வீஸ் கல்லூரி மற்றும் 8 மெகா வாட் சூரிய மின்சக்தி கட்டுமான திட்டங்களுக்கும் இரு பிரதமர்களும் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினர்.  இந்நிகழ்ச்சி மொரீசியஸில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், மொரரீசியஸ் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் காணொலி காட்சி மூலம் நடந்தது.

 

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நமது நண்பர்களின் தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் மற்றும் மதிப்பிற்குரிய இறையாண்மை மற்றும் அதே நேரத்தில் மக்களின் நலன் மற்றும் நாட்டின் திறன்களை மேம்படுத்தும் இந்தியாவின் வளர்ச்சி உதவியின் தொலைநோக்குப்  பார்வையை எடுத்துரைத்தார். நாட்டை மேம்படுத்துவதில் சிவில் சர்வீஸ் கல்லூரியின் முக்கியத்துவத்தை ஒப்புக்கொண்ட பிரதமர், கர்மயோகி திட்டத்தின்  அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் முன்வந்தார்.  2018ம் ஆண்டு அக்டோபரில் நடந்த சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணியின் முதல் கூட்டத்தில், ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின்தொகுப்பு  நடவடிக்கையை முன்வைத்ததையும், பிரதமர் நினைவு கூர்ந்தார்.  8 மெகா வாட் சூரிய மின் சக்தி திட்டம் , மொரீசியஸ் சந்திக்கும் 13,000 டன் கார்பன் உமிழ்வு பருவநிலை சவால்களைக்  குறைக்க உதவும் என்றார். 

 

மொரீசியஸ்க்கு நிதியுதவி உட்பட பல உதவிகளை அளிக்கும் இந்தியாவுக்கு மொரீசியஸ் பிரதமர் பிரவிந் ஜகுநாத் நன்றி தெரிவித்தார்.  பிரதமர் திரு நரேந்திரமோடியின் தலைமையின் கீழ், இந்தியா மற்றும் மொரீசியஸ் இடையேயான உறவுகள் புதிய உச்சத்துக்கு சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 

மொரீசியஸ் அரசின் 5 திட்டங்கள் செயல்படுத்துவது உட்பட இதர திட்டங்களுக்காக 353 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சிறப்பு பொருளாதார நிதியுதவியை கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் இந்தியா வழங்கியது. மெட்ரோ எக்ஸ்பிரஸ் திட்டம், உச்சநீதிமன்ற கட்டிடம், புதிய இஎன்டி மருத்துவமனை, ஆரம்பப் பள்ளிக்  குழந்தைகளுக்கு டிஜிட்டல் டேப்லட் விநியோகம், சமூக வீட்டு வசதித்  திட்டம் ஆகியவை இதில் அடங்கும். இன்று தொடங்கப்பட்ட வீட்டு வசதித் திட்டத்துடன், சிறப்புப்  பொருளாதார நிதியுதவித் திட்டத்தின் கீழ் அனைத்து மிகப் பெரிய திட்டங்களும் அமல்படுத்தப்பட்டுள்ளன.

 

மொரீசியஸ் பிரதமர் பிரவிந்த ஜகுநாத்,கடந்த 2017ம் ஆண்டு இந்தியா வந்தபோது, செய்துகொள்ளப்பட்ட  புரிந்துணர்வு ஒப்பந்தம் அடிப்படையில் ரெடியூட் நகரில் உள்ள சிவில் சர்வீஸ் கல்லூரிக்கு 4.74 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி அளிக்கப்படுகிறது. இந்தக்  கல்லூரி கட்டப்பட்டவுடன், மொரீசியஸ் சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கான பல பயிற்சிகள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்கும்.  இது இந்தியாவுடனான பயிற்சி நிறுவனத்  தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும்.

 

8 மெகா வாட் சூரிய மின்சக்தி திட்டம் மூலம் 25,000 சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்தப்படும். இது

ஆண்டுக்கு தோரயமாக 14 ஜிகா வாட் பசுமை மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இதன் மூலம் மொரீசியஸில் 10 ஆயிரம் வீடுகளுக்கு மின்வசதி அளிக்கப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு 13,000 டன் கார்பன் உமிழ்வை தவிர்க்க முடியும். இத்திட்டம் மொரீசியஸ் பருவநிலை பாதிப்புக்களைக்  குறைக்க உதவும்.

 

இன்றைய நிகழ்ச்சியில் இரண்டு முக்கிய இருதரப்பு ஒப்பந்தங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.  மெட்ரோ எக்ஸ்பிரஸ் மற்றும் இதர உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக , மொரீசியஸ் அரசுக்கு 190 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும சிறு வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தானது. 

 

 

 

கோவிட்-19 சவால்கள் ஏற்பட்ட போதிலும், இந்தியா-மொரீசியஸ் இடையேயான வளர்ச்சி கூட்டுறவு திட்டங்கள் வேகமாக முன்னேறியுள்ளன. கடந்த 2019ம் ஆண்டு  மெட்ரோ எக்ஸ்பிரஸ் திட்டம் மற்றும் புதிய இஎன்டி மருத்துவமனை திட்டம் ஆகியவற்றை  பிரதமர் மோடி, மொரீசியஸ் பிரதமர் திரு ஜகுநாத் ஆகியோர் காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தனர்.  அதேபோல், மொரீசியஸில் புதிய உச்சநீதிமன்றக்  கட்டிடத்தையும், 2020 ஜூலை மாதம் இரு நாட்டுப்  பிரதமர்களும் காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தனர். 

 

வரலாறு, கலாச்சாரம், மற்றும் மொழி ஆகியவற்றில் இந்தியா மற்றும் மொரீசியஸ் ஆகிய இரு நாடுகளும் நெருக்கமான உறவுகளைப்  பகிர்ந்து கொள்கின்றன.  இது நமது இருநாடுகளின் வளர்ச்சி கூட்டுறவில் பிரதிபலிக்கிறது. இந்திய பெருங்கடல் பகுதியில், இந்தியாவுக்கு முக்கியமான வளர்ச்சி கூட்டுறவு நாடாக மொரீசியஸ் உள்ளது.   அனைவருடனும், அனைவருக்குமான வளர்ச்சி, அனைவருக்குமான முன்னேற்றம் என்ற உணர்வுடன் இன்றைய நிகழ்ச்சி நமது வெற்றிகரமான உறவின் மற்றொரு முக்கிய சாதனையாக அமைந்துள்ளது.

                                                                                                *************

 


(Release ID: 1791321) Visitor Counter : 276