பிரதமர் அலுவலகம்
'சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டுப் பெருவிழாவிலிருந்து தங்க இந்தியாவை நோக்கி' என்பது குறித்த தேசிய விழாவைப் பிரதமர் தொடங்கிவைத்து முக்கிய உரையாற்றினார்
பிரம்ம குமாரிகளின் ஏழு முன்முயற்சிகளையும் பிரதமர் தொடங்கிவைத்தார்
"புதுமையான சிந்தனையையும் அணுகுமுறையையும் முற்போக்கான முடிவுகளையும் கொண்ட இந்தியா உருவாகிவருவதை நாம் காண்கிறோம்"
"இன்று நாம் உருவாக்கியிருக்கும் நிர்வாகமுறையில் பாகுபாட்டுக்கு இடமில்லை, நாம் கட்டமைக்கும் சமூகம் சமத்துவம், சமூகநீதி என்ற அடித்தளத்தின் மீது உறுதியாக நிற்கிறது"
பெண்களைப்பற்றி இந்த உலகம் ஆழ்ந்த இருளிலும்பழமையான சிந்தனையிலும் கட்டுண்டிருந்தபோது இந்தியா பெண்களை மகளிர் சக்தியாகவும் பெண்தெய்வமாகவும் வணங்கியது"
"அமிர்த காலம் என்பது தூங்கும்போது கனவு காண்பதற்கல்ல; நமது தீர்மானங்களை உறுதியாக நிறைவேற்றுவதற்கு. வரும் 25 ஆண்டுகள் அதிகபட்ச கடின உழைப்பு, தியாகம், 'தவம்' ஆகியவற்றுக்கான காலமாகும். இந்த 25 ஆண்டு காலம், நூற்றாண்டுகால அடிமைத்தனத்தில் நமது சமூகம் இழந்தவற்றை மீளப் பெறுவதற்கானது"
"நாட்டின் அனைத்துக் குடிமக்கள் மனதிலும் விளக்கு ஒன்றை நாம் அனைவரும் ஏற்றவேண்டியுள்ளது. நாம் ஒன்றிணைந்து கடமையின் பாதையில் நாட்டை முன்னேற்றினால், இந்த சமூகத்தில் உள்ள தீமைகள் அகற்றப்பட்டு நாடு புதிய உச்சங்களைத் தொடும்"
“சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டுப் பெருவிழாவை இன்று நாம் கொண்டாடும்போது, உலகத்திற்கு இந்தியாவை முறையாக அறிய வேண்டும் ன்பதும் நமது பொறுப்பாகும்"
Posted On:
20 JAN 2022 12:57PM by PIB Chennai
'சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டுப் பெருவிழாவிலிருந்து தங்க இந்தியாவை நோக்கி' என்பது குறித்த தேசிய விழாவைத் தொடங்கிவைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி முக்கிய உரை நிகழ்த்தினார். பிரம்ம குமாரிகளின் ஏழு முன்முயற்சிகளையும் அவர் தொடங்கிவைத்தார்.
மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா, ராஜஸ்தான் ஆளுநர் திரு கல்ராஜ் மிஸ்ரா, ராஜஸ்தான் முதலமைச்சர் திரு அசோக் கெலாட், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், மத்திய அமைச்சர்கள் திரு ஜி.கிஷன் ரெட்டி, திரு பூபேந்திர யாதவ், திரு அர்ஜுன் ராம் மெக்கால், திரு பர்ஷோத்தம் ரூபாலா திரு கைலாஷ் சவுத்ரி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
உரையாற்றிய பிரதமர், சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டுப் பெருவிழா கொண்டாட்டத்தின்போது,
பிரம்ம குமாரி அமைப்பால் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி, தங்க இந்தியாவுக்கான மனவோட்டம், உணர்வு, ஊக்கம் ஆகியவற்றை விளக்குவதாகும் என்றார். ஒரு பக்கம் தனிபட்ட விருப்பங்கள் மற்றும் வெற்றிகள் மறுபக்கம் தேசிய விருப்பங்கள் மற்றும் வெற்றிகள் ஆகியவற்றுக்கிடையே வேறுபாடு எதுவும் இல்லை என்று அவர் கூறினார். நமது முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றத்தில் உள்ளடங்கியது என்பதைப் பிரதமர் வலியுறுத்தினார். "இந்த நாடு நம்மிலிருந்து வாழ்கிறது, இந்த நாட்டின் மூலம் நாம் வாழ்கிறோம். இதை உணர்வது புதிய இந்தியாவை உருவாக்குவதில் இந்தியர்களாகிய நமக்கு மிகப்பெரிய பலமாகும். நாட்டில் இன்று மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு விஷயமும் 'அனைவரின் முயற்சி'யை உள்ளடக்கியது" என்று அவர் கூறினார். 'அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி' என்பது நாட்டின் வழிகாட்டும் குறிக்கோளாக மாறியிருக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.
புதிய இந்தியாவின் புதுமையான முற்போக்கான புதிய சிந்தனை மற்றும் புதிய அணுகுமுறை குறித்து கருத்து தெரிவித்த பிரதமர், "இன்று நாம் உருவாக்கியிருக்கும் நிர்வாக முறையில் பாகுபாடு என்பதற்கு இடமில்லை, நாம் கட்டமைத்து வரும் சமூகம் சமத்துவம் மற்றும் சமூக நீதி அடித்தளத்தின் மீது உறுதியாக நிற்கிறது" என்றார்.
பெண்களை வழிபடுகின்ற மற்றும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிற இந்தியப் பாரம்பரியம் பற்றி பிரதமர் குறிப்பிட்டார். "பெண்கள் பற்றி உலகம் ஆழ்ந்த இருளிலும் பழமை சிந்தனையிலும் கட்டுண்டு இருந்தபோது, இந்தியா பெண்களை மகளிர் சக்தியாகவும் பெண் தெய்வமாகவும் வழிபட்டது. கார்கி, மைத்ரேயி, அனுசூயா, அருந்ததி, மடாலசா போன்று சமூகத்திற்கு அறிவை தருகின்ற பெண் ஞானிகளை நாம் கொண்டிருந்தோம்" என்று அவர் கூறினார். இந்திய வரலாற்றின் பல்வேறு சகாப்தங்களில் பெண்கள் சிறப்புக்குரிய பங்களிப்பு செய்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். மிகவும் சிக்கல் மிகுந்த மத்திய காலங்களில் பண்ணாதாய், மீராபாய் போன்ற மகத்தான பெண்கள் நாட்டில் இருந்ததைப் பிரதமர் நினைவுகூர்ந்தார். விடுதலைப் போராட்ட காலத்திலும் கூட பல பெண்கள் தியாகம் செய்திருக்கிறார்கள். கிட்டூர் ராணி சென்னம்மா, மதாங்கினி ஹஸ்ரா, ராணி லட்சுமிபாய். வீராங்கானா ஜல்காரி பாய் தொடங்கி சமூகத் தளத்தில் அஹில்யா பாய் ஹோல்கர், சாவித்திரிபாய் பூலே ஆகியோர் இந்தியாவின் அடையாளமாகத் திகழ்ந்தனர் என்று அவர் கூறினார். பெண்களிடையே புதிய நம்பிக்கையின் குறியீடாக இராணுவத்தில் பெண்கள் இடம்பெற்றிருப்பது, கூடுதலான பேறுகால விடுப்பு கள், அதிக எண்ணிக்கையில் வாக்களிப்பது என்ற வடிவில் சிறந்த அரசியல் பங்கேற்பு, அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் போன்ற மாற்றங்களைப் பிரதமர் பட்டியலிட்டார். சமூகத்திற்கு வழிகாட்டும் இந்த வளர்ச்சி குறித்தும் நாட்டில் பாலின விகிதம் அதிகரித்திருப்பது பற்றியும் அவர் திருப்தி தெரிவித்தார்.
நமது கலாச்சாரத்தை நமது நாகரீகத்தை நமது மாண்புகளை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் நமது ஆன்மீகம், நமது பன்முகத் தன்மை ஆகியவற்றைப் பாதுகாத்து மேம்படுத்தவும் அனைவரையும் பிரதமர் வலியுறுத்தினார். அதேசமயம், தொழில்நுட்பம், அடிப்படைக் கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றைத் தொடர்ந்து நவீனமாக்குவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"அமிர்த காலம் என்பது உறங்கும்போது கனவு காண்பதற்காக அல்ல, உங்களின் தீர்மானங்களை விழிப்புடன் நிறைவேற்றுவதற்கானது. வரும் 25 ஆண்டுகள் அதிகபட்ச கடின உழைப்பு, தியாகம், 'தவம்' ஆகியவற்றின் காலமாகும். அடிமைத்தனத்தின் பல நூற்றாண்டுகளின்போது நமது சமூகம் இழந்தவற்றை மீண்டும் பெறுவதற்கானது இந்த 25 ஆண்டுகாலம்" என்று பிரதமர் குறிப்பிட்டார்.
சுதந்திரம் அடைந்ததற்குப் பிந்தைய 75 ஆண்டுகளில் கடமைகளைப் புறக்கணித்து அவற்றை மிக உயர்ந்ததாகக் கருதாத தீமை தேசிய வாழ்க்கையில் நுழைந்து விட்டது என்பதை ஒப்புக்கொள்வது அவசியம் என்று பிரதமர் கூறினார். இந்தக் காலத்தை நாம் பேசுவதிலும் உரிமைகளுக்காகப் போராடுவதிலும் மட்டுமே செலவழித்து விட்டோம் என்று அவர் குறிப்பிட்டார். பேசுவதற்கான உரிமை சில சூழ்நிலைகளில் ஒரு எல்லை வரை சரியானதுதான்; ஆனால் கடமைகளை முழுமையாக மறந்துவிடுவது அதிகபட்சமாக இருந்தது இந்தியாவை பலவீனமாக்கி விட்டது என்று அவர் கூறினார். "நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் மனதிலும் ஒரு விளக்கை - கடமை எனும் விளக்கை - ஏற்ற வேண்டும். ஒன்றிணைந்து கடமையின் பாதையில் இந்த நாட்டை முன்னேற்றினால் சமூகத்தில் தங்கியுள்ள தீமைகள் அகற்றப்படும். இந்த நாடு புதிய உச்சங்களை எட்டும்" என்று அனைவரிடமும் வலியுறுத்தினார்.
இந்தியாவின் தோற்றத்தை சிதைக்கும் போக்கு சர்வதேச அளவிலும்கூட இருப்பது குறித்துப் பிரதமர் கவலை தெரிவித்தார். "வெறும் அரசியல் என்று கூறி இதனை நாம் விட்டுவிட முடியாது. இது அரசியல் அல்ல, நமது நாட்டின் பிரச்சனை. சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டுப் பெருவிழாவை நாம் கொண்டாடி வரும் இந்த வேளையில், உலகம் இந்தியாவை முறையாக அறியச் செய்வதும் நமது பொறுப்பாகும்" என்பதை அவர் வலியுறுத்தினார்.
சர்வதேச இருப்பைக் கொண்டுள்ள இத்தகைய அமைப்புகள் மற்ற நாடுகளின் மக்களுக்கு இந்தியா பற்றிய சரியான தோற்றத்தைக் கொண்டுசெல்ல வேண்டும் என்றும் இந்தியா பற்றி பரப்பப்படுகின்றவை வதந்திகள் என்ற உண்மையை எடுத்துரைக்க வேண்டும் என்றும் கூறி பிரதமர் உரையை நிறைவு செய்தார். இந்தியாவைப் பற்றி அறிந்துகொள்ள இந்தியாவுக்கு மக்கள் வருகை தருவதற்கு பிரம்ம குமாரிகள் போன்ற அமைப்புகள் ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
----
(Release ID: 1791230)
Visitor Counter : 404
Read this release in:
English
,
Malayalam
,
Bengali
,
Telugu
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada