நித்தி ஆயோக்
azadi ka amrit mahotsav

மாநில சுகாதாரக் குறியீட்டின் நான்காவது பதிப்பை நிதி ஆயோக் வெளியிட்டது: பெரிய மாநிலங்கள் வரிசையில் கேரளா, தமிழகம் முன்னிலை

Posted On: 27 DEC 2021 3:19PM by PIB Chennai

2019-20-ம் ஆண்டிற்கான மாநில சுகாதாரக் குறியீட்டின் நான்காவது பதிப்பை நிதி ஆயோக் இன்று வெளியிட்டது. "ஆரோக்கியமான மாநிலங்கள், முற்போக்கு இந்தியா" என்ற தலைப்பிலான அறிக்கை, சுகாதார செயல்பாடுகளில் ஆண்டுதோறும் அதிகரிக்கும் செயல்திறன் மற்றும் ஒட்டுமொத்த நிலை ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை தரவரிசைப்படுத்துகிறது.

2019-20-ம் ஆண்டிற்கான ஒட்டுமொத்த தரவரிசையின் படி, பெரிய மாநிலங்களின் வரிசையில் கேரளா மற்றும் தமிழ்நாடு முன்னணியிலும், சிறிய மாநிலங்களில் மிசோராம் மற்றும் திரிபுரா முன்னணியிலும், யூனியன் பிரதேசங்களில் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன், டையு மற்றும் சண்டிகர் முன்னணியிலும் உள்ளன.

நிதி ஆயோக் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமார், தலைமை நிர்வாக அதிகாரி திரு அமிதாப் காந்த், கூடுதல் செயலாளர் டாக்டர் ராகேஷ் சர்வால் மற்றும் உலக வங்கியின் மூத்த சுகாதார நிபுணர் திருமிகு ஷீனா சாப்ரா ஆகியோர் கூட்டாக இந்த அறிக்கையை வெளியிட்டனர்.

உலக வங்கியின் தொழில்நுட்ப உதவியுடன், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துடன் நெருங்கிப் பணியாற்றி இந்த அறிக்கையை நிதி ஆயோக் உருவாக்கியுள்ளது.

மாநில சுகாதாரக் குறியீடு என்பது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்கான வருடாந்திர கருவியாகும். 'சுகாதார விளைவுகள்', 'ஆளுமை மற்றும் தகவல்' மற்றும் 'முக்கிய உள்ளீடுகள்/செயல்முறைகள்' ஆகிய பிரிவுகளின் கீழ் தொகுக்கப்பட்ட 24 குறிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்ட கூட்டுக் குறியீடு இதுவாகும்.

ஒத்த மாநிலங்களுக்கிடையேயான ஒப்பீட்டை உறுதிப்படுத்த, 'பெரிய மாநிலங்கள்', 'சிறிய மாநிலங்கள்' மற்றும் 'யூனியன் பிரதேசங்கள்' என தரவரிசை வகைப்படுத்தப்பட்டுள்ளது.

2017 முதல் இந்த அட்டவணை தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. வலுவான சுகாதார அமைப்புகளை உருவாக்குவதற்கும், சேவைகளை மேம்படுத்துவதற்கும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைத் தூண்டுவதை இந்த அறிக்கைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1785506


(Release ID: 1785574) Visitor Counter : 3931