பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

கொவிட்-19, ஓமிக்ரான் மற்றும் நாடு முழுவதும் உள்ள சுகாதார அமைப்புகளின் தயார்நிலை நிலவரம் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்கான உயர்மட்டக் கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்


புதிய வகையை கருத்தில் கொண்டு, நாம் விழிப்புடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும்: பிரதமர்

மாவட்ட அளவில் தொடங்கி மாநிலங்களில் உள்ள சுகாதார அமைப்புகள் வலுப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர்

அரசு விழிப்புடன் உள்ளது, உருவாகி வரும் சூழ்நிலையை உள்வாங்கி உள்ளது; 'முழு அரசாங்க' அணுகுமுறையின் கீழ் கட்டுப்படுத்துதல் மற்றும் மேலாண்மைக்கான மாநிலங்களின் முயற்சிகளில் தாமே முன்வந்து நடவடிக்கைகள் மற்றும் ஆதரவைத் தொடர்கிறது: பிரதமர்

பிரதமர்: தொற்றுடையோர் தொடர்புகளைக் கண்டறிதல், பரிசோதனைகளை அதிகரித்தல், தடுப்பூசிகளை விரைவுபடுத்துதல் மற்றும் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்

குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசிகள் வழங்கி உள்ள, பாதிப்புகள் அதிகரித்து வரும் மற்றும் போதுமான சுகாதார உள்கட்டமைப்பு இல்லாத மாநிலங்களுக்கு உதவ மத்திய அரசு குழுக்களை அனுப்பவுள்ளது

Posted On: 23 DEC 2021 9:37PM by PIB Chennai

கொவிட்-19 மற்றும், கவலை அளிக்கும் புதிய மாறுபடு அடைந்துள்ள   ஓமிக்ரான், பொது சுகாதார கட்டுப்பட்டு நடவடிக்கைகள், கொவிட்-19 கட்டுப்படுத்துதல் மற்றும் மேலாண்மை, மருந்துகள் கிடைப்பது, ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் செறிவூட்டிகள், சுவாசக் கருவிகள், பிராண வாயு ஆலைகள், தீவிர சிகிச்சை பிரிவு/ஆக்சிஜன் வசதி கொண்ட  படுக்கைகள், மனித வளங்கள், தகவல் தொழில்நுட்ப தலையீடுகள் மற்றும் தடுப்பூசி நிலை உள்ளிட்ட சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல்
ஆகியவற்றை ஆய்வு செய்ய பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உயர்மட்டக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.  

தடுப்பூசிகள் அதிகளவில் வழங்கப்பட்ட நாடுகளிலும் அதிகரித்து வரும் ஓமிக்ரான் பாதிப்புகள் என, புதிய வகையால் உலகளவில் உருவாகி வரும் சூழ்நிலையைப் பற்றி அதிகாரிகள் பிரதமருக்கு விளக்கினர். ஓமிக்ரான் சூழலில் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த  முன்னுரிமை நடவடிக்கைகள் குறித்தும் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. நாட்டில் கொவிட்-19 மற்றும் ஓமிக்ரானின் நிலை பற்றிய விவரம், அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள  மாநிலங்கள்,  மாவட்டங்கள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான தொற்று பாதித்த  குழுக்கள் (கிளஸ்டர்) உள்ளிட்ட தகவல்கள் பிரதமரிடம்  வழங்கப்பட்டன. நாட்டில் பதிவாகியுள்ள ஓமிக்ரான் பாதிப்புகளின் விவரங்கள், பாதிக்கப் பட்டோர்  பயண வரலாறு, தடுப்பூசி நிலை மற்றும் குணமானோர் விவரம்  ஆகியவையும் பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

2021 நவம்பர் 25 அன்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் முதல் ஆலோசனை அறிவுறுத்தல் மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது முதல்  எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பிரதமருக்கு விளக்கப்பட்டது. சர்வதேச பயணிகளுக்கான திருத்தி வெளியிடப்பட்ட  பயண ஆலோசனை அறிவறுத்தல்கள், கொவிட்-19 பொது சுகாதார எதிர்வினை நடவடிக்கைகள் குறித்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடனான ஆய்வு கூட்டங்கள், தடுப்பூசி வழங்கலை விரைவு படுத்தி அதிகரித்தது , ஆக்ஸிஜன் விநியோக கருவிகளை நிறுவியது  போன்றவை குறித்து பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டது.

அதிகாரிகளின் விளக்கத்திற்குப் பிறகு, அனைத்து மட்டங்களிலும் அதிக விழிப்புணர்வையும் எச்சரிக்கையையும் பேணுமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தினார். 'முழு அரசாங்க' அணுகுமுறையின் கீழ் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மைக்கான பொது சுகாதார நடவடிக்கைகளின் முயற்சிகளை ஆதரிக்க, மாநிலங்களுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் செயல்படுமாறு அவர் மத்திய அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொற்றுநோய்க்கு எதிரான செயலூக்கமிக்க கூட்டுப் போராட்டத்திற்கான மத்திய அரசின் யுக்தி, நமது எதிர்கால நடவடிக்கைகள் அனைத்திற்கும்  வழிகாட்ட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தினார். 

புதிய வகை கிருமியைக் கருத்தில் கொண்டு, விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் நாம் இருக்க வேண்டும். தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் முடிவடையவில்லை, மேலும் கொவிட் பாதுகாப்பான நடத்தையைத்  தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் இன்றும் மிக முக்கியமானது என்று அவர் கூறினார். 

புதிய வகையால் ஏற்படும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் வகையில், மாவட்ட அளவில் தொடங்கி, மாநிலங்களில் உள்ள சுகாதார அமைப்புகள் வலுப்படுத்தப்படுவதை உறுதிசெய்யுமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தினார். ஆக்சிஜன் கருவிகள் நிறுவப்பட்டு முழுமையாக செயல்படுவதை மாநிலங்கள் உறுதி செய்வது முக்கியம் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மாநிலங்களுடன் தொடர்ந்து பணியாற்றவும், பயிற்சி மற்றும் மனித வளங்களின் திறனை மேம்படுத்துதல், அவசர ஊர்திகள் சரியான நேரத்தில் கிடைப்பது,  தனிமைப்படுத்தலுக்கான கொவிட் வசதிகளை செயல்படுத்த மாநிலங்களின் தயார்நிலை உள்ளிட்ட சுகாதார உள்கட்டமைப்பின் பல்வேறு கூறுகளின் தயார்நிலையின் நிலையை ஆய்வு செய்யவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். தொலை மருத்துவ ஆலோசனைகளை விரிவாக்க  தகவல் தொழில்நுட்ப கருவிகளைத்  திறம்பட பயன்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். 

பாதிப்புகள் அதிகரித்து வரும் பகுதிகளில் தீவிரமான மற்றும் உன்னிப்பான கண்காணிப்பு  தொடர வேண்டும் என்று அவர் கூறினார். மரபணு வரிசைப்படுத்துதலுக்கான  மாதிரிகளை உடனடி முறையில் இன்சாகோக் எனப்படும் இந்திய காரோண வைரஸ் மரபணு  ஆய்வகங்களுக்கு அனுப்புமாறு அவர் அறிவுறுத்தினார். சரியான நேரத்தில் கட்டுப்படுத்துதல் மற்றும் சிகிச்சைக்கென,  பாதிப்புகளை விரைவாகக் கண்டறிவதை உறுதி செய்வதற்காக பரிசோதனையை விரைவுபடுத்துமாறு பிரதமர் அறிவுறுத்தினார். பரவலைத் தடுப்பதற்கு பயனுள்ள தொடர்புத் தடமறிதலிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர். குறைந்த அளவில் தடுப்பூசிகள் தந்துள்ள , பாதிப்புகள் அதிகரித்துள்ள, போதிய சுகாதார உள்கட்டமைப்பு இல்லாத மாநிலங்களுக்கு  மத்திய அரசு குழுக்களை அனுப்பி நிலைமையை மேம்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார். 

நாடு முழுவதும் தடுப்பூசி போடுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது. தகுதியான மக்களில் 88% க்கும் அதிகமானோருக்கு  தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும், தகுதியுள்ள மக்களில் 60% க்கும் அதிகமானோர் இரண்டாவது டோஸைப் பெற்றுள்ளதாகவும் பிரதமருக்குத்  தெரிவிக்கப்பட்டது. மக்களைத் திரட்டி, தடுப்பூசி போடுவதற்கு வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்துதல், தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்களை ஊக்கப்படுத்திய நடவடிக்கைகள், தடுப்பூசி அளவை அதிகரிப்பதில் உற்சாகம் தரும் முடிவுகளை ஏற்படுத்தி இருப்பதாக அதிகாரிகள் பிரதமரிடம் தெரிவித்தனர். 

அமைச்சரவைச்  செயலாளர், நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி கே பால், உள்துறை செயலாளர் திரு ஏ கே பல்லா, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகச்  செயலாளர் திரு ராஜேஷ் பூஷன், மருந்துகள் துறைச்  செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

*********(Release ID: 1784938) Visitor Counter : 154