நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் 2021 இன்றுடன் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது
Posted On:
22 DEC 2021 2:21PM by PIB Chennai
நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் நிலக்கரி & சுரங்கத்துறை அமைச்சர் திரு.பிரகலாத் ஜோஷி, இணையமைச்சர்கள் திரு.அர்ஜூன் ராம் மெஹ்வால், திரு.வி.முரளீதரன் ஆகியோர் புதுதில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
29 நவம்பர் 2021 திங்கட்கிழமை அன்று தொடங்கிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர், 23 டிசம்பர் 2021 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 22 டிசம்பர் 2021 உடன் ஒத்திவைக்கப்பட்டது. முக்கியமான அரசு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதால், இந்தக் கூட்டத் தொடர் ஒருநாள் முன்கூட்டியே முடிவடைந்தது என்று தெரிவித்தனர். 24 நாட்களில் 18 அமர்வுகளாக இந்தக் கூட்டத் தொடர் நடைபெற்றது. இதில் 13 மசோதாக்கள் (மக்களவையில் 12, மாநிலங்களவையில் 1) அறிமுகப்படுத்தப்பட்டன. 2021-22 ஆம் ஆண்டுக்கான துணை மானியக் கோரிக்கைகள் தொடர்பான நிதி ஒதுக்க மசோதா உட்பட 11 மசோதாக்கள் இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டன. மத்திய கண்காணிப்பு ஆணையத் திருத்தச் சட்டம் சிறப்பு காவல் அமைப்பு சட்டம், போதைப் பொருட்கள் திருத்தச் சட்டம் போன்ற 3 அவசரச் சட்டங்களுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட மசோதாக்களும் இரு அவைகளாலும் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
உயிரி பன்முகத்தன்மை (திருத்தச்) சட்ட மசோதா நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கும் 5 மசோதாக்கள் நிலைக்குழுக்களின் பரிசீலனைக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.
மேலும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான மசோதா, அணை பாதுகாப்பு மசோதா, இனப்பெருக்க தொழில்நுட்ப திருத்த மசோதா, வாடகைத்தாய் (ஒழுங்குமுறை) மசோதா, தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன (திருத்த) மசோதா, உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் (சம்பளம் மற்றும் பணி நிபந்தனைகள்) திருத்த மசோதா, தேர்தல் சட்டங்கள் (திருத்த) மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த அமர்வின் போது மக்களவை 82% அளவிற்கும், மாநிலங்களவை 42% அளவிற்கும் இயங்கி உள்ளதாகவும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.
மேலும் விவரங்களுக்கு ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1784165
*****
(Release ID: 1784210)
Visitor Counter : 430