பிரதமர் அலுவலகம்

பிரதமர் டிசம்பர் 11-அன்று உத்தரப்பிரதேசம் பல்ராம்பூருக்கு சென்று சரயு நஹர் தேசியத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்

ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளாக நிலுவையில் உள்ள திட்டம் நான்கு ஆண்டுகளில் முடிக்கப்பட்டது

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் விளைவாகவும், விவசாயிகளின் நலன் மற்றும் விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல் மீதான அவரது உறுதிப்பாட்டின் விளைவாகவும் இத்திட்டம் நிறைவடைந்துள்ளது

இந்தத் திட்டம் 14 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் பாசனத்திற்கான தண்ணீரை உறுதி செய்யும்; கிழக்கு உத்தரப் பிரதேத்தில் 6200க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 29 லட்சம் விவசாயிகளுக்குப் பயனளிக்கும்

விவசாயிகள் இப்போது இப்பகுதியின் விவசாயத் திறனை அதிகரிக்க முடியும்
ககாரா, சரயு, ரப்தி, பங்கங்கா மற்றும் ரோகினி ஆகிய ஐந்து நதிகளை இணைக்கும் திட்டமும் இதில் அடங்கும்

Posted On: 10 DEC 2021 8:25AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூருக்குச் சென்று, டிசம்பர் 11ஆம் தேதி மதியம் 1 மணியளவில் சரயு நஹர் தேசியத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.

இத்திட்டத்தின் பணிகள் 1978 இல் தொடங்கப்பட்டன. ஆனால் போதுமான நிதி ஒதுக்கீடு, துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு போதுமான கண்காணிப்பு ஆகியவற்றில் தொடர்ச்சியின்மை காரணமாக, இத்திட்டம் தாமதமாகி, கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகும் முடிக்கப்படவில்லை.

விவசாயிகளின் நலன் விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை உறுதி செய்யவேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வை, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பு ஆகியவை காரணமாக இத்திட்டம் அதிக கவனத்தை ஈர்த்தது. இதன் விளைவாக, 2016 ஆம் ஆண்டு, பிரதமர் வேளாண் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ், இத்திட்டம் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்க வேண்டும் என்ற இலக்குடன் கொண்டுவரப்பட்டது. இந்த முயற்சியில், புதிய கால்வாய்களை அமைப்பதற்கும், திட்டத்தில் உள்ள முக்கியமான இடைவெளிகளை நிரப்புவதற்கும், புதிய நிலம் கையகப்படுத்துதல் மற்றும் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளைத் தீர்ப்பதற்கும் புதுமையான தீர்வுகள் காணப்பட்டன. இத்திட்டத்தின் மீது மீண்டும் கவனம் செலுத்தியதன் விளைவாக, வெறும் நான்கு ஆண்டுகளிலேயே இத்திட்டம் முடிக்கப்பட்டது.

சரயு நஹர் தேசிய திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ. 9800 கோடி ஆகும். இதில் ரூ. 4600 கோடிக்கு மேல் கடந்த நான்கு ஆண்டுகளில் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியின் நீர் ஆதாரங்களை உகந்த முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக ககாரா, சரயு, ரப்தி, பங்கங்கா ரோகினி ஆகிய ஐந்து நதிகளை இணைத்தலும் இத்திட்டத்தில் அடங்கும்.

இத்திட்டம் 14 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்குப் பாசனத்திற்கான தண்ணீரை வழங்குவதோடு, 6200க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 29 லட்சம் விவசாயிகள் பயனடைவதையும் உறுதி செய்யும். இது கிழக்கு உத்தரபிரதேசத்தின் பஹ்ரைச், ஷ்ரவஸ்தி, பல்ராம்பூர், கோண்டா, சித்தார்த்நகர், பஸ்தி, சந்த் கபீர் நகர், கோரக்பூர், மஹராஜ்கஞ்ச் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்குப் பயனளிக்கும்.

இத்திட்டத்தில் ஏற்பட்ட காலதாமதத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட இப்பகுதி விவசாயிகள், தற்போது மேம்படுத்தப்பட்ட பாசனத் திறன் மூலம் பெரிதும் பயனடைவார்கள்.  இத்திட்டத்தினால் அவர்கள் இப்போது பெரிய அளவில் பயிர்களை சாகுபடி செய்ய முடியும். மேலும், பிராந்தியத்தின் விவசாயத் திறனையும் அதிகரிக்க முடியும்



(Release ID: 1779978) Visitor Counter : 188