பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கோரக்பூரில் ரூ.9,600 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை டிசம்பர் 7-ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மூடிக் கிடந்த கோரக்பூர் உரத் தொழிற்சாலை புத்துயிர் பெறுகிறது

Posted On: 03 DEC 2021 7:54PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, டிசம்பர் 7-ம்தேதி கோரக்பூர் பயணம் மேற்கொண்டு, அங்கு ரூ.9600 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

2016-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட கோரக்பூர் உரத்தொழிற்சாலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக மூடிக்கிடந்த இந்த ஆலை சுமார் ரூ.8600 கோடி செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. யூரியா உற்பத்தியில் தன்னிறைவு என்ற பிரதமரின் தொலைநோக்கை எட்டும் வகையில், இந்த ஆலை புதுப்பிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் வேம்பு கலந்த யூரியாவை இந்த ஆலை ஆண்டுக்கு 12.7 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு உற்பத்தி செய்யும். இந்தப் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை இது ஊக்குவிக்கும்.

ரூ.1000 கோடியில் கட்டப்பட்டுள்ள கோரக்பூர் எய்ம்ஸ் வளாகத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த வளாகத்திற்கு பிரதமர் 2016-ம் ஆண்டு ஜூலை 22-ம்தேதி அடிக்கல் நாட்டினார். இந்த வளாகத்தில், 750 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, செவிலியர் கல்லூரி, ஆயுஷ் கட்டிடம், அனைத்து பணியாளர் தங்கும் வசதி, இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு விடுதி வசதி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.

ஐசிஎம்ஆர்-ன் பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். புதிய கட்டிடம் நவீன வசதிகளுடன் அமையவுள்ளது. தொற்று நோய்கள் மற்றும் தொற்றா நோய்கள் குறித்த ஆராய்ச்சிக்கு இது உதவும்.

****


(Release ID: 1778211) Visitor Counter : 192