நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
நாடாளுமன்ற அரசியல் கட்சித் தலைவர்களுடனான அரசின் கூட்டம் இன்று நடைபெற்றது
நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு தருமாறு வேண்டுகோள்; மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்
நாடாளுமன்றத்தில் ஆரோக்கியமான விவாதம் நடத்த அரசு விரும்புகிறது; திரு ராஜ்நாத் சிங்
Posted On:
28 NOV 2021 3:48PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், அவைகளின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை அரசு இன்று நடத்தியது. இந்தக்கூட்டத்தில் தொடக்க உரையாற்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி, நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர், நவம்பர் 29-ம்தேதி தொடங்கி, டிசம்பர் 23-ந் தேதி வரை நடைபெறும் என்று கூறினார். இந்தக் கூட்டத் தொடரில், 19 அமர்வுகள் நடைபெறும். இந்தக்கூட்டத் தொடரில், 36 மசோதாக்கள், ஒரு நிதித்துறை தொடர்பான அலுவல் ஆகியவை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அவர் கூறினார். 3 அவசர சட்டங்களுக்கு மாற்றாக மசோதாக்களும் இதில் கொண்டுவரப்படும் என்று கூறிய அமைச்சர், நாடாளுமன்ற விதிமுறைகள் அனுமதிக்கும் அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக உள்ளதாக கூறினார். அவையை சுமுகமாக நடத்த அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று திரு ஜோஷி வேண்டுகோள் விடுத்தார்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களைக் கேட்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், கூட்டம் ஆரோக்கியமான முறையில் நடந்ததைப் பாராட்டினார். நாடாளுமன்றத்தில் அதிக அளவு விவாதம் வேண்டும் என கட்சிகள் தெரிவித்ததைக் கேட்ட அவர், அரசும் நாடாளுமன்றத்தில் ஆரோக்கியமான விவாதத்தை விரும்புவதாகத் தெரிவித்தார்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு.பிரகலாத் ஜோஷி, நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர்கள் திரு அர்ஜூன்ராம் மெக்வால், திரு.வி.முரளீதரன் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பிஜேபி, காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், பிஎஸ்பி, டிஆர்எஸ், என்சிபி, சிவசேனா, அஇஅதிமுக, மதிமுக, எஸ்பி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1775827
******
(Release ID: 1775896)
Visitor Counter : 316