பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

மணிப்பூரின் தமெங்லாங் மாவட்டத்தில் உள்ள லுவாங்காவ் கிராமத்தில் உள்ள ராணி கைடின்லியு பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்கள் அருங்காட்சியகத்திற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா நாளை அடிக்கல் நாட்டுகிறார்

Posted On: 21 NOV 2021 5:31PM by PIB Chennai

மணிப்பூரின் தமெங்லாங் மாவட்டத்தில் உள்ள லுவாங்காவ் கிராமத்தில் உள்ள ராணி கைடின்லியு பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்கள் அருங்காட்சியகத்திற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா நாளை அடிக்கல் நாட்டுகிறார்.

இம்பால் கிழக்கில் உள்ள மாநகர மாநாட்டு மையத்தில் நாளை நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் மணிப்பூர் முதலமைச்சர் திரு நோங்தோம்பம் பிரேன் சிங், மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா மற்றும் பிற பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

ரூ 15 கோடி மதிப்பீட்டில் இந்திய அரசின் பழங்குடியினர் விவகார அமைச்சகம் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீராங்கனை ராணி கெய்டின்லியு பிறந்த இடமான தமெங்லாங் மாவட்டத்தில் உள்ள லுவாங்காவ் கிராமத்தில் அருங்காட்சியகத்தை அமைக்க மாநில அமைச்சரவை முடிவு செய்திருந்தது. விடுதலையின் அமிர்த மகோத்ஸவத்தையும், பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட பழங்குடியினர் கவுரவ தினத்தையும் நவம்பர் 15 முதல் பழங்குடியினர் விவகார அமைச்சகம் கொண்டாடி வருகிறது.

ராணி கெய்டின்லியு 1915-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி மணிப்பூர் மாநிலத்தின் தமெங்லாங் மாவட்டத்தில் உள்ள லுவாங்காவ் கிராமத்தில் பிறந்தார். 13 வயதில்  ஜடோனாங்குடன் இணைந்த அவர், ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராளியாக மாறினார். ஜடோனாங் தூக்கிலிடப்பட்ட பிறகு, கெய்டின்லியு இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்றார்.

சுற்றுலாத் துறையில் மிகப்பெரிய சாத்தியக்கூறுகளை மணிப்பூர்  கொண்டுள்ளது. நாளை தொடங்கி வைக்கப்படவிருக்கும் திட்டம் சுற்றுலா வளர்ச்சிக்கு மேலும் வழிவகுப்பதோடு, மாநிலத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1773746

 

-----



(Release ID: 1773770) Visitor Counter : 220