பிரதமர் அலுவலகம்

சிட்னி பேச்சுவார்த்தையில் பிரதமரின் முக்கிய உரை

Posted On: 18 NOV 2021 9:40AM by PIB Chennai

எனதருமை நண்பர் பிரதமர் ஸ்காட் மோரிசன் அவர்களே,

நண்பர்களே,

வணக்கம்!

சிட்னி பேச்சுவார்த்தையின் தொடக்க நிகழ்வில் முக்கிய உரை நிகழ்த்த நீங்கள் என்னை அழைத்திருப்பது இந்திய மக்களுக்கான மிகப்பெரிய கௌரவமாகும்.  இந்திய-பசிபிக் பிராந்தியம் மற்றும் வளர்ந்துவரும் டிஜிட்டல் உலகம் ஆகியவற்றில்  இந்தியாவின் மையப் பங்களிப்பை அங்கீகரிப்பதாக இதனை நான் பார்க்கிறேன். இந்தப் பிராந்தியத்திற்கும் உலகத்திற்கும் நன்மை செய்யும் சக்தியாக உள்ள நம்மிரு நாடுகளுக்கிடையே விரிவான உத்திகள் வகுத்தல் பங்களிப்புக்கு இது ஒரு சிறப்பு என்றும் கருதுகிறேன். வளர்ந்துவரும் முக்கியமான சைபர் தொழில்நுட்பங்கள் குறித்து கவனம் செலுத்துவதற்காக சிட்னி பேச்சுவார்த்தையை நான் பாராட்டுகிறேன்.

நண்பர்களே,

ஒரு சகாப்தத்திற்கு ஒரு முறை நிகழும் மாற்றத்தின் காலத்தில் நாம் இருக்கிறோம். நம்மைச் சுற்றியுள்ள அனைத்தையும் டிஜிட்டல் யுகம் மாற்றி வருகிறது. இது அரசியல், பொருளாதாரம், மற்றும் சமூகத்திற்கு புது விளக்கம் அளிக்கிறது. இறையாண்மை, நிர்வாகம், நெறிமுறைகள், சட்டம், உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து புதிய கேள்விகளை இது எழுப்புகிறது. முன்னேற்றம் மற்றும் வளத்திற்கான வாய்ப்புகளின் புதிய சகாப்தத்தை இது வழங்கியிருக்கிறது. ஆனால், கடல் படுகை முதல் சைபர் வரை, வின்வெளி வரை பல வகையான அச்சுறுத்தும் முரண்பாடுகள் உருவாக்கும் புதிய அபாயங்களையும், புதிய வடிவங்களையும் கூட நாம் எதிர்கொண்டிருக்கிறோம். தொழில்நுட்பம் என்பது உலகளாவிய போட்டிக்கு மிகப்பெரிய கருவியாகவும், எதிர்கால சர்வதேச ஒழுங்கை வடிவமைக்கும் முக்கிய கருவியாகவும் ஏற்கெனவே மாறியுள்ளது. தொழில்நுட்பமும் தரவுகளும் புதிய ஆயுதங்களாக மாறியிருக்கின்றன.  ஜனநாயகத்தின் மிகப்பெரிய வலிமை வெளிப்படைத்தன்மையாகும், அதே சமயம் சுயநலம் கொண்ட ஒரு சிலர் இந்த வெளிப்படைத் தன்மையை தவறாக பயன்படுத்த நாம் அனுமதிக்கக்கூடாது.

நண்பர்களே,

ஜனநாயகம் மற்றும் டிஜிட்டலில் தலைவராக உள்ள இந்தியா   பகிரப்பட்ட வளம் மற்றும் பாதுகாப்பில் கூட்டாளிகளுடன் பணியாற்ற தயாராக இருக்கிறது. இந்தியாவின் டிஜிட்டல் புரட்சி என்பது எங்களின் ஜனநாயகம், எங்களின் மக்கள் தொகை, எங்களின் பொருளாதார நிலை ஆகியவற்றில் வேரூன்றி இருக்கிறது.  கடந்தகால சவால்களை, எதிர்கால பாய்ச்சலுக்கான வாய்ப்பாக நாங்கள் மாற்றிக்கொண்டிருக்கிறோம். இந்தியாவில் ஐந்து முக்கிய மாற்றங்கள் நடந்திருக்கின்றன. ஒன்று, உலகின் மிக விரிவான மக்கள் தகவல் அடிப்படைக் கட்டமைப்பை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். 1.3 பில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் தனித்துவ டிஜிட்டல் அடையாளத்தைக் கொண்டிருக்கிறார்கள். 6 லட்சம் கிராமங்களை அகண்ட அலைவரிகையுடன் இனைப்பதற்கான பாதையில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். உலகின் மிகவும் திறன் வாய்ந்த யுபிஐ எனும் பணப் பரிவர்த்தனை கட்டமைப்பை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். 800 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் இணையதளத்தைப் பயன்படுத்துகிறார்கள். 750 மில்லியன் இந்தியர்கள் திறனறி செல்பேசிகளைக் கொண்டிருக்கிறார்கள். தனிநபர் தரவு பயன்பாட்டில் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக நாங்கள் இருப்பதோடு, உலகில் மிகக் குறைந்த செலவில் தரவுகள் வழங்கும் நாடுகளில் ஒன்றாகவும் இருக்கிறோம். இரண்டு, நிர்வாகம், அனைவரையும் உட்படுத்துதல், அதிகாரமளித்தல், போக்குவரத்து தொடர்பை ஏற்படுத்துதல் பயன்கள் மற்றும் நலத்திட்டங்களை வழங்குதல் ஆகியவற்றிற்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை நாங்கள் கொண்டுவருகிறோம். அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவின் பொருளாதாரம், வங்கி நடைமுறை, டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்ற புரட்சி ஆகியவற்றை அனைவரும் அறிந்துள்ளனர். அண்மையில் ஆரோக்யசேது, கோவின் இணையதளங்களைப் பயன்படுத்தி மிகப்பரந்த நிலப்பரப்பைக் கொண்ட இந்தியா முழுவதும் 1.1 பில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் செலுத்த நாங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறோம். 100 கோடிக்கும் அதிகமான எங்களின் மக்கள் தொகைக்கு குறைந்த செலவில் அனைவருக்கும் சுகாதார கவனிப்பு என்பதற்காக தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கத்தையும் நாங்கள் தொடங்கியிருக்கிறோம். எங்களின் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை என்பது நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தாலும் கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு பயனளிப்பதாக இருக்கும். மூன்று, புதிய தொழில்களை தொடங்கும் சூழலை மிகப்பெரிதாகவும், அதி விரைவாகவும் வளர்க்கும் உலக நாடுகளில் இந்தியா மூன்றாவதாக உள்ளது. ஒவ்வொரு சில வாரங்களிலும் புதிய தொழில்கள் வந்துகொண்டே இருக்கின்றன. சுகாதாரம் மற்றும் கல்வி முதல் தேசப்பாதுகாப்பு வரை அனைத்துக்கும் தீர்வுகளை வழங்குவதாக இவை இருக்கின்றன.

நான்கு, இந்தியாவின் தொழில்துறை மற்றும் சேவைகள் துறை மட்டுமின்றி வேளாண்துறையும் கூட மிகப்பெரும் டிஜிட்டல் மாற்றத்திற்கு உட்பட்டுள்ளன. தூய எரிசக்தி மாற்றம் ஆதார வளங்களை பயன்பாட்டிற்குரியதாக மாற்றுவது, பல்லுயிர் பெருக்க பாதுகாப்பு ஆகியவற்றிற்கும் கூட நாங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம். ஐந்து,  எதிர்காலத்திற்கான இந்தியாவை உருவாக்க மிகப்பெரிய முயற்சி உள்ளது. 5ஜி, 6ஜி போன்று தொலைத்தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் உள்நாட்டுத் திறன்களை மேம்படுத்த நாங்கள் முதலீடு செய்திருக்கிறோம். செயற்கை நுண்ணறிவு மற்றும் கருவிகள் வழி கற்றல், குறிப்பாக மனிதத்தை மையப்படுத்திய நெறிமுறைகள் கொண்ட செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் முதன்மை நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது.  இணையதளம் அடிப்படையிலான தரவுகள் மையத்தில் இயங்கும் சர்வரின் கணினி வன்பொருள் மற்றும் இணையதளம் வழியாக பலவகை சேவைகள் வழங்கும் வலுவான திறன்களை நாங்கள் உருவாக்கிவருகிறோம். இது டிஜிட்டல் இறையாண்மைக்கும் முக்கியமானதாகும்.

குவாண்டம் கம்ப்யூட்டிங் முறையில் உலக தரத்திலான திறன்களை நாங்கள் உருவாக்கிவருகிறோம். இந்தியாவின் வின்வெளித்திட்டம் எங்கள் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பில் மிக முக்கிய பங்காக இருக்கிறது. இப்போது அது புதிய கண்டுபிடிப்பு மற்றும் தனியார் துறை முதலீட்டிற்கு திறந்துவிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் சைபர் பாதுகாப்பு தீர்வுகள் மற்றும் கார்ப்பரேட் சேவைகள் வழங்குவதில் இந்தியா ஏற்கெனவே முக்கிய மையமாக உள்ளது. சைபர் பாதுகாப்பிற்கான உலக குவிமையமாக இந்தியாவை மாற்ற எங்கள் தொழில்துறையில் பணிக்குழு ஒன்றை நாங்கள் அமைத்திருக்கிறோம். உங்கள் திறன்களின் பயன்பாட்டையும் உலக நம்பிக்கையையும் நாங்கள் பெற்றிருக்கிறோம். இப்போது கணினி வன்பொருள் தயாரிப்பில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். செமி கண்டெக்டர்களின் முக்கிய உற்பத்தியாளராக மாறுவதற்கு ஊக்கத்தொகைத் திட்டத்தை நாங்கள் தயாரித்துவருகிறோம். மின்னணு மற்றும் தொலைத்தகவல் தொடர்பு துறையில் எங்களின் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டங்கள் ஏற்கெனவே உள்நாட்டு மற்றும் உலகளாவிய நிறுவனங்களைக் கவர்ந்து இந்தியாவில் அவற்றுக்கான அடித்தளத்தை உருவாக்கியிருக்கிறது.

நண்பர்களே,

தொழில்நுட்பத்தில் இன்று மிகப்பெரிய பொருளாக இருப்பவை தரவுகளாகும். இந்தியாவில் தரவுகள் பாதுகாப்பு தனி நபர் உரிமை மற்றும் பந்தோபஸ்திற்கான வலுவான கட்டமைப்பை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். அதே சமயம் தரவுகளை மக்களுக்கு அதிகாரமளிக்கும் ஆதாரமாகவும் நாங்கள் பயன்படுத்துகிறோம். தனிநபர் உரிமைகளுக்கு வலுவான உத்தரவாதங்களுடன் ஜனநாயக ரீதியான கட்டமைப்பை ஏற்படுத்துவதில் இந்தியா ஒப்பில்லாத அனுபவத்தை பெற்றிருக்கிறது.

நண்பர்களே,

ஒரு நாடு அதன் மாண்புகளையும் தொலைநோக்கு பார்வையையும் இணைப்பதற்கு தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துகிறது, இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியங்கள் பழமையானவை; அதன் நவீன அமைப்புகள் வலுவானவை.  உலகம் ஒரு குடும்பம் என்பதில் நாங்கள் எப்போதும் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் திறன் உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்க உதவி செய்துள்ளது. ஒய்2கே பிரச்சனைக்கு தீர்வுகாண அது உதவிசெய்துள்ளது. அன்றாட வாழ்க்கையில் நாங்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் மற்றும் சேவைகள் உருவாக்கத்திற்கு இது பங்களிப்பு செய்திருக்கிறது. இன்று நாங்கள் ஒட்டுமொத்த உலகத்திற்கும் கட்டணம் ஏதுமின்றி கோவின் இணையத்தை வழங்கியிருக்கிறோம். அதனை அனைவரும் பயன்படுத்தும் மென்பெருளாக மாற்றியிருக்கிறோம். தொழில்நுட்ப பயன்பாடு, பொதுநலனுக்கான கொள்கை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமூக அதிகாரமளிப்பு, ஆகியவற்றைக் கொண்ட இந்தியாவின் விரிவான அனுபவம் வளரும் உலகத்திற்கு மாபெரும் உதவியாக இருக்கும். நாடுகளுக்கும் அவற்றின் மக்களுக்கும் அதிகாரமளிக்க இந்த நூற்றாண்டின் வாய்ப்புகளுக்கு அவர்களைத் தயார்படுத்த நாங்கள் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம். நமது ஜனநாயக சிந்தனைகளையும் மாண்புகளையும் பிரதிபலிக்கும் இந்த உலகத்தின் எதிர்காலத்தை கட்டமைப்பதற்கும் இது முக்கியமானதாகும். நமது சொந்த தேசத்தின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் போலவே இதுவும் முக்கியமானதாகும்.

நண்பர்களே,

எனவே, எதிர்கால தொழில்நுட்பத்திற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஒருங்கிணைந்து முதலீடு செய்வதற்கு; நம்பிக்கையான உற்பத்தி தளத்தையும், வழங்கல் தொடரையும் உருவாக்குவதற்கு; சைபர் பாதுகாப்பு, முக்கியமான தகவல் கட்டமைப்பு பாதுகாப்பு ஆகியவற்றில் நுண்ணறிவு மற்றும் செயல்பாட்டு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கு; மக்கள் கருத்துக்கள் திரிக்கப்படுவதை தடுப்பதற்கு; நமது ஜனநாயக மாண்புகளுக்கு ஏற்ப தொழில்நுட்ப மற்றும் நிர்வாக தரங்களையும் விதிகளையும் உருகாக்குவதற்கு;  தரவுகள் நிர்வாகத்திற்கும், எல்லை கடந்து செல்லும் தரவுகளுக்கான பாதுகாப்பிற்கும், தரங்களையும் விதிமுறைகளையும் உருவாக்குவது ஆகியவற்றிற்கு ஒருங்கிணைந்து செயல்படுவது, ஜனநாயகத்திற்கான அத்தியாவசிய செயலாகும். தேசிய உரிமைகளை அங்கீகரிக்கும் அதே சமயம் இது வர்த்தகம், முதலீடு மற்றும் விரிவான பொதுநலனை மேம்படுத்துவதாக இருக்கவேண்டும். கிரிப்டோ கரன்சி அல்லது பிட்காயினை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம். இது குறித்து அனைத்து ஜனநாயக நாடுகளும் ஒருங்கிணைந்து பணியாற்றுவதும் நமது இளைஞர்களை பாழாக்கும் தவறானவர்களின் கைகளில் சென்றுவிடாமல் உறுதிசெய்வதும் முக்கியமானதாகும்.

நண்கர்களே,

வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பின் தருணத்தில் நாம் இருக்கிறோம். நமது காலத்தின் மிகச்சிறந்த தொழில்நுட்ப சக்திகள் அனைத்தும் ஒத்துழைப்பின் அல்லது முரண்பாட்டின் நிர்பந்தம் அல்லது விருப்பத்தின் ஆதிக்கம் அல்லது வளர்ச்சியின் நெருக்குதல் அல்லது வாய்ப்பின் கருவிகளாக இருக்கக்கூடும். இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இந்திய பசிபிக் பிராந்தியத்தின் நமது கூட்டாளிகள், அதற்கும் அப்பாற்பட்டவர்கள் நமது காலத்தின் அழைப்பை செவிமடுப்பார்கள். நமது பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு முன்வர நாம் தயாராக இருக்கிறோம். இந்தக் காலத்திற்கான மற்றும் நமது நாடுகள், உலகத்தின் எதிர்காலத்திற்கு நமது பொறுப்பை நிறைவேற்றுவதற்கு நமது நட்புறவை உறுதிப்படுத்துவதற்கு  உதவ சிட்னி பேச்சுவார்த்தை மிகச்சிறந்த மேடையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

நன்றி.

***



(Release ID: 1772893) Visitor Counter : 184