நிதி அமைச்சகம்
ஆரம்ப சுகாதார மையங்களை வலுப்படுத்த தமிழகத்துக்கு ரூ.805.928 கோடி மானியம்: 19 மாநிலங்களின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மொத்தம் ரூ.8,453.92 கோடியை வழங்கியது மத்திய அரசு
Posted On:
13 NOV 2021 8:48AM by PIB Chennai
19 மாநிலங்களின் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.8,453.92 கோடியை சுகாதாரத்துறை மானியமாக, மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை வழங்கியுள்ளது. 15வது நிதி ஆணையப் பரிந்துரைப்படி இந்த மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. மாநில வாரியாக வழங்கப்பட்ட மானியங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
15வது நிதி ஆணையம், தனது அறிக்கையில், 2021-22ம் நிதியாண்டு முதல் 2025-26ம் நிதியாண்டு வரை உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.4,27,911 கோடி மானியம் வழங்க பரிந்துரை செய்துள்ளது. இதில் ரூ.70,051 கோடி சுகாதார மானியமும் அடங்கும். இந்தத் தொகையில் ரூ.43,928 கோடி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும், ரூ.26,123 கோடி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளில் ஆரம்ப சுகாதார நிலையங்களை வலுப்படுத்துவதற்காக இந்த மானியம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கீழ்கண்ட வசதிகளுக்கு நிதியுதவி அளிக்கப்படும்.
i. ஊரகப் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனைக் கூடங்கள் அமைக்க ரூ.16,377 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ii. ஊரகப் பகுதிகளில் வட்டார அளவில் பொது சுகாதார மையங்கள் அமைக்க ரூ.5,279 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
iii. ஊரகப் பகுதிகளில் சுகாதார மையங்கள் ஆரம்ப சுகாதார மையங்கள், ஒருங்கிணைந்த சுகாதார மையங்களில் கட்டிடங்கள் கட்டுவதற்கு ரூ.7,167 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
iv. ஊரகப் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் துணை சுகாதார மையங்கள் மருத்துவமனைகளாக மேம்படுத்த ரூ.15,105 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
v. நகர்ப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் பரிசோதனைக் கூடங்கள் அமைக்க ரூ.2,095 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
vi. நகர்ப்புறங்களில் சுகாதார மையங்கள் அமைக்க ரூ.24,028 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
2021-22ம் நிதியாண்டில் ரூ.13,192 கோடி மானியம் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்ககான ரூ.8,273 கோடியும், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான ரூ.4,919 கோடியும் அடங்கும்.
இதன்படி தமிழகத்துக்கு சுகாதாரத்துறை மானியமாக ரூ.805.928- கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. 19 மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.8,453.92 கோடியை மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை வழங்கியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1771352
*******
(Release ID: 1771450)
Visitor Counter : 315
Read this release in:
Malayalam
,
Marathi
,
Hindi
,
Punjabi
,
Telugu
,
Bengali
,
English
,
Urdu
,
Manipuri
,
Odia
,
Kannada