பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லி எய்ம்ஸ் ஜஜ்ஜார் வளாகத்தில் உள்ள தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் இன்போசிஸ் அறக்கட்டளையின் ஓய்வு இல்ல தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 21 OCT 2021 1:57PM by PIB Chennai

அரியானா முதலமைச்சர் திரு மனோகர் லால் கட்டார் அவர்களே, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா அவர்களே, மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பவார் அவர்களே, அரியான சுகாதாரத்துறை அமைச்சர் திரு அனில் விஜ் அவர்களே, இன்போசிஸ் அறக்கட்டளை தலைவர் திருமதி சுதா மூர்த்தி அவர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, சகோதர, சகோதரிகளே, அனைவருக்கும் வணக்கம்!

அக்டோபர் 21, 2021 என்னும் இந்த நாள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சற்று முன்பு இந்தியா 100 கோடி தடுப்பூசி டோஸ்கள் என்னும் இலக்கை தாண்டியுள்ளது. 100 ஆண்டுகளில் கண்டிராத பெருந்தொற்றுக்கு எதிராக 100 கோடி டோஸ் என்னும் வலுவான பாதுகாப்பு கவசத்தை நாடு பெற்றுள்ளது. இந்தியாவின் இந்தச் சாதனை, ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் சொந்தமானதாகும். நாட்டின் அனைத்து தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள்தடுப்பூசிகளைக் கொண்டு செல்வதில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், தடுப்பூசி செலுத்துவதில் ஈடுபட்டுள்ள சுகாதார நிபுணர்கள் ஆகியோருக்கு எனது உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிறிது நேரத்திற்கு முன்பு, நான் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையின் தடுப்பூசி மையத்துக்கு சென்றிருந்தேன். கூடிய விரைவில் கொரோனாவை முறியடிக்க வேண்டும் என்ற கடமை உணர்வும், உற்சாகமும் அங்கு காணப்பட்டது. ஒவ்வொரு இந்தியரையும் நான் வாழ்த்துகிறேன். 100 கோடி தடுப்பூசி என்னும் இந்த வெற்றியை நான் அனைத்து இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்.

நண்பர்களே, புற்றுநோய் சிகிச்சைக்காக இங்கு வந்திருக்கும் நோயாளிகளுக்கு சிறந்த வசதிகள் இப்போது கிடைக்கின்றன. தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓய்வு இல்லம், நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் மனதுக்கு ஆறுதல் அளிக்கும். புற்றுநோய் போன்ற நோய்களுக்காக, நோயாளிகளும், அவர்களது உறவினர்களும், மருத்துவர்களைப் பார்க்கவும், பரிசோதனைகள், ரேடியோ தெரபி, கீமோதெரபி ஆகியவற்றுக்காக திரும்பத் திரும்ப வரவேண்டியதிருக்கும். இத்தகைய சூழலில் அவர்கள் எங்கே தங்குவார்கள்? இது ஒரு பிரச்சினையாக இருக்கும். தேசிய புற்றுநோய் நிறுவனத்துக்கு வரும் நோயாளிகளின் இந்தப் பிரச்சினை இப்போது வெகுவாக குறைந்துள்ளது. இது குறிப்பாக அரியானா, தில்லி மற்றும் புறநகர் பகுதிகள், உத்தரகாண்ட் மக்களுக்கு பேருதவியாக இருக்கும்.

நண்பர்களே, செங்கோட்டையில் நான் சப்கா பிரயாஸ் (அனைவரது முயற்சி) பற்றி குறிப்பிட்டேன். எந்த துறையாக இருந்தாலும், கூட்டு சக்தி இருந்தால், ஒவ்வொருவரது முயற்சிகள் தென்பட்டால், மாற்றத்தின் வேகம் அதிகரிக்கும். இந்த 10 அடுக்கு ஓய்வு இல்லம், இந்தக் கொரோனா காலத்திலும், ஒவ்வொருவரது கூட்டு முயற்சியால், கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக, இந்த ஓய்வு இல்லம் உருவாவதில், நாட்டின் அரசாங்கம் மற்றும் கார்பரேட் உலக ஒத்துழைப்பு குறிப்பிடத்தக்கதாகும். இன்போசிஸ் அறக்கட்டளை ஓய்வு இல்ல கட்டிடத்தைக் கட்டுவதில் ஈடுபட்டிருந்த போது, எய்ம்ஸ் ஜஜ்ஜார் நிலத்தின் விலை, மின்சாரம், தண்ணீர் செலவை ஏற்றுக் கொண்டது. எய்ம்ஸ் நிர்வாகம், சுதா மூர்த்தி குழுவின் இந்த சேவைக்காக நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சுதாவின் ஆளுமை அடக்கமும், எளிமையும் கொண்டது. ஏழைகளின் மீது கருணை கொண்டவர். மனிதர்களுக்கு செய்யும் சேவை, மகேசனுக்கு செய்யும் சேவை என்ற அவரது தத்துவமும், அவரது நடவடிக்கைகளும் அனைவரையும் ஈர்க்கக்கூடியவை. இந்த ஓய்வு இல்லம் அமைவதில் அவர் காட்டிய ஒத்துழைப்புக்கு நான் அவரைப் பாராட்டுகிறேன்

நண்பர்களே, நாட்டின் சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதில், கார்பரேட் பிரிவும், தனியார் துறையும், சமூக அமைப்புகளும் தொடர்ந்து பங்களித்து வருகின்றன. ஆயுஷ்மான் பாரத் பிஎம்ஜேஏஒய் இதற்கு பெரிய உதாரணமாகும். இத்திட்டத்தின் கீழ், 2.25 கோடிக்கும் அதிகமான நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் அளிக்கப்பட்டுள்ளன. ஆயுஷ்மான் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மருத்துவமனைகளில், சுமார் 10,000 மருத்துவமனைகள் தனியாருக்கு சொந்தமானதாகும்.

நண்பர்களே, பொதுத்துறை மற்றும் தனியார் துறை இடையிலான கூட்டுறவு, மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவக் கல்வியை  விரிவுபடுத்துவதில் பெரும் பங்காற்றி வருகின்றன. இன்று, நாட்டில் மாவட்டத்துக்கு குறைந்தது ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கும் திட்டத்தில் தனியார் துறையின் பங்கு முக்கியமானதாகும். மருத்துவக் கல்வி நிர்வாகத்தில் எடுக்கப்பட்டுள்ள பெரிய சீர்திருத்தங்கள், இந்தக் கூட்டுறவுக்கு ஊக்கமளிக்கும். தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்பட்ட பின்னர், இந்தியாவில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் திறப்பது மிகவும் எளிதாகி இருக்கிறது.

நண்பர்களே, ஆற்றில் தண்ணீர் குறையாததைப் போல, நன்கொடையால் பணம் குறையாது என நாட்டில் பழமொழி உள்ளது. எனவே, நீங்கள் அதிகமாக சேவை செய்யும் போது, அதிகமாக நன்கொடை வழங்கும் போது, உங்களது செல்வமும் பெருகும். ஒரு வகையில், நாம் அளிக்கும் கொடை, நாம் செய்யும் சேவை நமது முன்னேற்றத்துக்கு மட்டுமே வழிவகுக்கும். இந்த ஓய்வு இல்லம் நம்பிக்கை இல்லமாக உருவெடுக்கும் என நான் நம்பிகிறேன். இந்த ஓய்வு இல்லம், நம்பிக்கை இல்லமாக திகழும். இதுபோன்ற ஓய்வு இல்லங்களைக் கட்ட இது மற்றவர்களுக்கு ஊக்குவிப்பாக அமையும். அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனைகளிலும், தற்போது கட்டப்பட்டு வரும் மருத்துவமனைகளிலும், இரவு நேர தங்குமிடங்கள் அமைக்க மத்திய அரசு தனது பங்கிற்கு முயற்சிகளை எடுத்து வருகிறது.

நண்பர்களே, நோயாளிக்கும், அவரது உறவினர்களுக்கும் சற்று நிம்மதி கிடைத்தால், நோய்க்கு எதிராகப் போராடும் தைரியமும் அதிகரிக்கும். இந்த வசதியை அளிப்பதும் ஒருவகை சேவைதான். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், நோயாளி இலவச சிகிச்சை பெறும்போது, இது அவருக்கு அளிக்கப்படும் சேவையாகும். இந்த சேவையின் காரணமாக, நமது அரசு சுமார் 400 புற்றுநோய் மருந்துகளின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. மக்கள் மருந்தகங்கள் மூலம் ஏழைகளுக்கு மிகக் குறைந்த விலையில், மருந்துகள் வழங்கப்படுகின்றன. ஆண்டு முழுவதும் மருந்துகள் வாங்கும் நடுத்தர பிரிவு மக்கள் ஆண்டுக்கு ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை சேமிக்க முடியும். மருத்துவமனைகளில், அனைத்து தேவையான வசதிகளும் கிடைக்கச் செய்வதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இன்போசிஸ் அறக்கட்டளை போன்ற பல நிறுவனங்கள் சேவை உணர்வுடன், ஏழைகளுக்கு உதவி, அவர்களது வாழ்க்கையை எளிதாக்கி வருவது குறித்து நான் மனநிறைவு கொள்கிறேன்.

நண்பர்களே, இந்தியா வலுவான சுகாதார அமைப்புகளை உருவாக்குவதில் வேகமாக முன்னேறி வருகிறது. கிராமங்கள் தோறும், மேலும் அதிக சுகாதார மையங்கள், நலவாழ்வு மையங்களை உருவாக்கும் பணிகள், சுகாதாரத் துறையில் மனிதவள மேம்பாட்டை -சஞ்சீவனிமூலம் தொலை மருத்துவத்தை ஏற்டுத்துதல், புதிய மருத்துவ நிறுவனங்களை அமைத்தல் ஆகியவை  நடைபெற்று வருகின்றன. இந்த குறிக்கோள் நிச்சயம் பெரிதுதான். ஆனால், அரசும், சமுதாயமும் இணைந்து முழு ஆற்றலுடன் பணியாற்றினால், இந்த இலக்கை நாம் வெகு விரைவாக அடைய முடியும். சமுதாயத்துக்காக நாம் என்னும் புதுமையான முன்முயற்சி சில காலத்திற்கு முன்பு மேற்கொள்ளப்பட்டதை அறிவீர்கள். ஆயிரக்கணக்கான நிறுவனங்கள், லட்சக்கணக்கானோர் அதில் சேருவதன் மூலம் சமுதாயத்திற்கு பங்களித்தனர். மேலும் அதிக மக்களை இதில் தொடர்புபடுத்த தொடர்ந்து முயற்சி மேற்கொள்வதுடன், இதுகுறித்த விழிப்புணர்வை வருங்காலத்தில் ஏற்படுத்த வேண்டும். வளமான, ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும். சமுதாயத்தின் கூட்டு முயற்சி மற்றும் அனைவரும் ஒருங்கிணைந்த ஆற்றலை வெளிப்படுத்துவதன் மூலமே இதனை சாத்தியமாக்க முடியும். மீண்டும் ஒரு முறை சுதா அவர்களுக்கும், இன்போசிஸ் அறக்கட்டளைக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் அரியானா மக்களிடம் பேசும் போது, சிலவற்றை அவர்களுக்கு கூற விரும்புகிறேன். அரியானாவிலிருந்து பலவற்றைக் கற்கும் வாய்ப்பை நான் பெற்றதை பாக்கியமாகக் கருதுகிறேன். எனது வாழ்க்கையின் நீண்ட காலத்தை நான் அரியானாவில் கழிக்கும் வாய்ப்பை நான் பெற்றேன். நான் பல அரசாங்கங்களை உன்னிப்பாக கவனித்து வந்திருக்கிறேன். ஆனால், அரியானாவில் நீண்ட காலத்திற்கு பின்னர், மனோகர் லால் கட்டார் தலைமையில் மிகவும் நேர்மையான அரசாங்கத்தை அரியானா பெற்றுள்ளது. இதனால், அரியானாவுக்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது. ஊடகங்கள் இதுபோன்ற ஆக்கபூர்வமான, நேர்மறையான விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவதில்லை என்பதை நான் அறிவேன்.ஆனால், அரியானாவில் அரசாங்கங்களின் திறமை மதிப்பிடப்படும் போது, கடந்த 50 ஆண்டுகளில் மிகச்சிறந்த அரசாக இப்போதைய அரசு திகழும். நான் மனோகர் லாலை பல ஆண்டுகளாக அறிவேன். ஆனால், முதலமைச்சர் என்ற வகையில், அவரது திறமையைஇப்போதுதான் பார்க்கிறேன். புதுமையான திட்டங்களை உற்சாகத்துடன் அவர் தொடர்ந்து மேற்கொள்வதை பார்க்கும் போது, இதுபோன்ற திட்டங்களை மத்திய அரசிலும் செயல்படுத்தலாம் என்ற ஏற்படுவதுண்டு. இத்தகைய சில முயற்சிகளை நாங்களும் எடுத்துள்ளோம். ஆகவே, மனோகர்லால் தலைமையின் கீழ் அரியானாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி மக்களுக்கு பெரும் சேவை ஆற்றி வருகிறது. நீண்ட காலத் திட்டமிடுதலுக்கு அமைக்கப்பட்டுள்ள அடித்தளம், மாநிலத்துக்கு ஒளிமயமான எதிர்காலத்தை நீண்டகாலத்திற்கு கொண்டு வரும். நான் மனோகர் லால் அவர்களை மீண்டும் ஒரு முறை வெளிப்படையாக பாராட்டுகிறேன். அவரது குழுவுக்கு வாழ்த்துக்கள். உங்கள் அனைவருக்கும் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

****


(Release ID: 1765987) Visitor Counter : 211