உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

அந்தமான் நிக்கோபார் தீவின் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள்: மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா தொடங்கி வைத்தார்

Posted On: 16 OCT 2021 7:29PM by PIB Chennai

அந்தமான் நிக்கோபார் தீவில், சுபாஷ் சந்திரபோஷ் தேசிய கொடி ஏற்றிய, இடத்தில் ரூ.299 கோடி மதிப்பிலான 14 திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா இன்று தொடங்கி வைத்தார் மற்றும் ரூ.643 கோடி மதிப்பிலான 12 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.  அந்தமான், நிக்கோபார் தீவில் சுமார் ரூ.1,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

மேலும், ராணி லட்சுமிபாய் தீப், சாஹீத் தீப் சுற்றுச்சூழல் பூங்கா திட்டம், ஸ்வராஜ்தீப் நீர் விமானதளம் மற்றும் இதர வளர்ச்சி திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் ஆய்வு செய்தார்.

அந்தமான் நிக்கோபார் தீவுகளின்  துணைநிலை ஆளுநர் அட்மிரல்(ஓய்வு) டி.கே.ஜோஷி, மத்திய உள்துறை செயலாளர்  உட்பட பலர்  இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் திரு அமித்ஷா கூறியதாவது:

 

இங்கு இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது இயற்கையானது. ஏனென்றால், ஆங்கிலேயர்களிடமிருந்து நாட்டை விடுவிக்க பல ஆண்டுகளாக போராடி, 1947ம் ஆண்டு முழு சுயராஜ்ஜியத்தை  பெற்றோம். ஆனால் கடந்த 1943ம் ஆண்டிலேயே, ஆங்கிலேயர்களின் பிடியிலிருந்து இந்தியாவின் இந்த பகுதியை நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் இரண்டு ஆண்டுகளுக்கு விடுவித்தார்.

 

தேசபக்தர்களுக்கு, குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு, இந்த இடம் முக்கியமான இடமாக மாற வேண்டும். ஏனென்றால், இங்குதான், நேதாஜி முதல் முறையாக இரண்டு நாட்கள் தங்கி தேசியக் கொடியை ஏற்றினார். 

 

விடுதலையின் பொன்விழா ஆண்டை நாம் நாடு முழுவதும் கொண்டாடுகிறோம். இதன் மூலம் இளைஞர்கள் இடையே தேசபக்தி உணர்வை ஏற்படுத்த நாங்கள் விரும்புகிறோம். இதன் அடிப்படையில், திரு மோடி கனவு காணும் புதிய இந்தியாவை உருவாக்குவதில், அவர்கள் ஈடுபட வேண்டும்.  உலகளவில் இந்தியா சிறந்த நாடாக மாற வேண்டும். அதை நோக்கி இளம் தலைமுறையினர் முன்னோக்கி செல்ல வேண்டும்.

சுதந்திர இயக்கத்தின் இடம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவு. காலாபானி என அறியப்பட்ட இந்த தீவில் தண்டிக்கப்பட்டவர்களின் கஷ்டங்களை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 

வீர சாவர்க்கர் 10 ஆண்டுகள் வாழ்ந்த செல்லுலார் சிறையை இளம் தலைமுறையினர் பார்க்க வேண்டும். பாய் பிரமானந்த், சன்யால் போன்ற சுதந்திர போராட்ட வீரர்கள் இங்குதான் இருந்தனர். சுதந்திர இந்தியாவுக்காக அவர்கள் செய்த தியாகத்தையும், பட்ட கஷ்டங்களையும், அனுபவித்த கொடுமைகளையும் இளைஞர்கள் அறிய வேண்டும்.

விடுதலையின் பொன்விழா ஆண்டில், இந்த இடத்தை பார்த்தவுடனே, ஊக்குவிப்பு உணர்வு ஏற்படுகிறது. வீர சாவர்கர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரின் தகவல்கள் இங்கு இன்றும் காற்றில் கலந்துள்ளன. நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் அந்தமான் நிக்கோபார் தீவில், இந்த புனிதமான சுதந்திரப் போராட்ட இடத்தை ஒரு முறையாவது பார்வையிட வேண்டும். இங்குள்ள 3 தீவுகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, ஷாகீத், ஸ்வராஜ் மற்றும் சுபாஷ் என பெயரிட்டுள்ளார். அப்போதுதான், வரும் தலைமுறையினரை ஊக்குவிக்க முடியும். நேதாஜி, வீர சாவர்க்கர் மற்றும் பல அறியப்படாத தியாகிகளால், இளைஞர்கள் ஊக்குவிப்பை பெற முடியும்.

 

சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் சர்தார் படேல் ஆகிய இருவரும் சுதந்திர இயக்கத்தின் தலைவர்கள். இவர்களை நாடு மரியாதையுடன் நினைத்து பார்க்க வேண்டும். அதனால்தான், பிரதமர் திரு நரேந்திர மோடி, சுதந்திரத்தின் பொன் விழா ஆண்டில், சுபாஷ் சந்திர போஸ் தேசியக் கொடி ஏற்றிய இடத்தை மிகப் பெரிய சுற்றுலாத் தளமாக ஆக்கியுள்ளார். இந்த தீவை நாங்கள் மேம்படுத்தவுள்ளோம். இங்கு சுபாஷ் சந்திர போஸ்க்கு பிரம்மாண்ட நினைவிடம் கட்டப்படும்.

இன்று தொடங்கப்பட்ட பாலத்துக்கு, ‘ஆசாத் ஹிந்த் ஃபோஜ்என பெயரிட மோடி அரசு முடிவு செய்துள்ளது. இந்த பாலத்தை கடக்கும் ஒவ்வொருவரும், நேதாஜியின் 35,000 கி.மீ பயணத்துக்கு, அவரது தைரியத்துக்கு  புகழாரம் சூட்டுவர்.

 

இதய நோயாளிகளுக்கு புதிய மருத்துவமனை இங்கு தொடங்கப்பட்டுள்ளது. இங்கு ஆஞ்சியோ பிளாஸ்டிக் செய்யப்படும். பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்படும். இங்கு ஆயுஷ் மருத்துவமனை மற்றும் 49 சுகாதார மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா  கூறினார்.

 

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1764396

 

 (Release ID: 1764508) Visitor Counter : 409