பிரதமர் அலுவலகம்

பிரதமரின் விரைவு சக்தி எனும் பன்முனை தொடர்புக்கான தேசியப் பெருந்திட்ட தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் மொழியாக்கம்

Posted On: 13 OCT 2021 3:00PM by PIB Chennai

வணக்கம்!

மத்திய அமைச்சரவையில் எனது சகாக்களான திரு நிதின் கட்கரி அவர்களே, திரு பியூஷ் கோயல் அவர்களே,  திரு  ஹர்தீப் சிங் பூரி அவர்களே, திரு சர்பானந்த சோனோவால் அவர்களே, திரு ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, திரு ராஜ்குமார் சிங் அவர்களே, பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களே துணை  நிலை ஆளுநர்களே, மாநில அமைச்சர்களே, தொழில்துறை நண்பர்களே, மற்ற பிரமுகர்களே, எனதருமை சகோதரர்களே, சகோதரிகளே,

இன்று துர்காஷ்டமி.  சக்தியின் ஸ்வரூபம் நாடு முழுவதும்  வழிப்படப்படுகிறது. எனவே இது கன்யா பூஜையாகும். சக்தியை வழிபடும் இந்தப் புனிதமான விழாவில் நாட்டின் வளர்ச்சிக் கட்டத்தை வலுப்படுத்த புனிதமான பணி செய்யப்படுகிறது. 

தற்சார்பு என்ற தீர்மானத்தை நோக்கி இந்தியாவின் தன்னம்பிக்கையை பிரதமரின் விரைவு சக்தி தேசியப் பெருந்திட்டம் உந்திச் செலுத்தும். 21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு இந்த தேசியப் பெருந்திட்டம் ஆக்கத்தை அளிக்கும்.  இந்த தேசிய திட்டத்திலிருந்து அடுத்த தலைமுறைக்கான அடிப்படைக் கட்டமைப்பும், பன்முனைத் தொடர்பும் வேகம் பெறும்.  திட்டமிடலில் தொடங்கி செயல்படுத்துதல் வரை அடிப்படைக் கட்டமைப்புத் தொடர்பான அரசின் கொள்கைகளுக்கு இந்த தேசியப் பெருந்திட்டம்  உத்வேகமாக இருக்கும். அரசின் திட்டங்களைக் குறிப்பிட்ட கால வரம்பிற்குள் முடிப்பதற்குத் துல்லியமான தகவலையும்,  வழிகாட்டுதலையும்  விரைவு சக்தி தேசியத் திட்டம் வழங்கும்.

விரைவு சக்தி என்ற  மகத்தான  இந்த இயக்கத்தின் மையமாக இந்தியாவின் மக்கள், தொழில்துறை, வணிக உலகம், பொருள் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் உள்ளனர். 21-ஆம் நூற்றாண்டின் இந்தியாவைக் கட்டமைக்க இடையூறாக இருக்கும் அனைத்துத் தடைகளையும் அகற்றி, இந்தியாவின் தற்போதைய மற்றும் எதிர்காலத் தலைமுறைகளுக்கு புதிய சக்தியை இது அளிக்கும்.

நண்பர்களே,

பிரகதி மைதானத்தில் கட்டப்பட்டுள்ள சர்வதேச பொருட்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நான்கு பொருட்காட்சி அரங்கங்களும் இன்று திறந்து வைக்கப்பட்டன. தில்லியில் நவீன அடிப்படைக் கட்டமைப்பு தொடர்பாக இது ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.   இந்தக் கண்காட்சி மையங்கள் நமது சிறு, குறு மற்றும் நடுத்தர  தொழில் நிறுவனங்கள், கைவினைப் பொருட்கள், குடிசைத் தொழில்கள் ஆகியவற்றில் தயாரிக்கப்பட்ட பொருட்களைக் காட்சிப்படுத்தவும் அவற்றை உலகளாவிய சந்தைக்குக் கொண்டுசெல்லவும், நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கும்.  தில்லி மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும், எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

பழைய பாணியிலான  அரசு அணுகுமுறையை பின்தள்ளி, 21-ஆம் நூற்றாண்டில் இந்தியா முன்னேறி வருகிறது.  இன்றைய மந்திரம் ‘முன்னேற்றத்திற்கான மன உறுதி,     ‘முன்னேற்றத்திற்கானப் பணி‘ ‘முன்னேற்றத்திற்கான செல்வாதாரம்’ ‘முன்னேற்றத்திற்கான திட்டம்’ ‘முன்னேற்றத்திற்கான முன்னுரிமை’ என்பதாகும்.  குறிப்பிட்ட காலவரம்புக்குள் திட்டங்களை நிறைவு செய்யும் பணிக்கலாச்சாரத்தை  நாம் உருவாக்குவது மட்டுமின்றி, திட்டங்களைக் குறிப்பிட்டக் காலத்திற்கு முன்னதாகவே, முடிப்பதற்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அடிப்படைக் கட்டமைப்பு தொடர்பான  விரிவான திட்டமிடலில் பல பின்னடைவுகள் இருப்பதை நாம் கவனிக்கிறோம். சிறிய வேலைகள் நடக்கும்போது கூட ரயில்வேத் துறை அதன் சொந்தத் திட்டமிடுதலைச் செய்கிறது. அதே போல் சாலைப் போக்குவரத்துத் துறை அதற்கான திட்டத்தை செயல்படுத்துகிறது. தொலைத் தகவல்  தொடர்புத்துறை அதற்கான திட்டமிடலைக் கொண்டிருக்கிறது. எரிவாயு வலைப்பின்னல் பல்வேறு திட்டமிடல்களைச் செய்கிறது. இதே போல் பல்வேறு துறைகளும். பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துகிறது.

நமது தனியார் துறையினர் கூட எதிர்காலத்தில் இந்தப் பகுதியாக  சாலை எதுவும் செல்லுமா என்பதையோ, கால்வாய் கட்டப்பட உள்ளது என்பதையோ, மின்சக்தி நிலையங்கள் ஏதாவது அமையப்போகிறதா என்பதையோ, சரியாக அறிய முடியவதில்லை.  இதன் விளைவாக இவர்களாலும் சிறப்பாகத் திட்டமிட முடிவதில்லை.  இது போன்ற பிரச்சினைக்கெல்லாம் தீர்வாகப் பிரதமரின் விரைவு சக்தி தேசியப் பெருந்திட்டம் இருக்கும். பெருந்திட்டத்தின்படி நாம் பணிகளை மேற்கொண்டால் நமது ஆதார வளங்கள் நல்ல முறையில் பயன்படுத்தப்படும்.

பிரதமரின் விரைவு சக்தி தேசியப் பெருந்திட்டத்தின் கீழ் சாலைகளிலிருந்து ரயில்வேக்கள் வரை, விமானப் போக்குவரத்திலிருந்து விவசாயம் வரை, பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் என ஒவ்வொன்றும் இணைக்கப்பட்டிருக்கும்.  ஒவ்வொரு பெருந்திட்டத்திற்கான தொழில்நுட்ப அமைப்பு உருவாக்கப்படும். இதனால் ஒவ்வொரு துறையும் சரி்யான நேரத்தில், சரியான துல்லியமான தகவலைப் பெறமுடியும். பிரதமரின் விரைவு சக்தி தேசியப் பெருந்திட்டத்தில் இணையுமாறு அனைத்து மாநிலங்களையும் நான் வலியுறுத்துகிறேன்.  இதிலிருந்து மாநில மக்களும் ஏராளமான பயன்களைப் பெறமுடியும்.

நண்பர்களே,

பிரதமரின் விரைவு சக்தி பெரும் திட்டம் அரசின் நடைமுறைகள் மற்றும் அதன் பலதரப்பட்ட பங்கு தாரர்களை மட்டும் ஒன்றாக இணைக்க கோரவில்லை ஆனால் பல போக்குவரத்தையும் ஒன்றிணைக்க உதவுகிறது. உதாரணத்திற்கு அரசு திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு கட்டப்படும் வீடுகளில் சுற்று சுவர் மட்டுமல்ல கழிவறைகள், குடிநீர் குழாய் இணைப்பு மற்றும் எரி வாயு இணைப்பு ஆகியவை உள்ளன. இதே போன்ற தொலைநோக்குதான் கட்டமைப்புக்கான பெரும் திட்டத்திலும் உள்ளது. கடந்த காலங்களில் தொழிற்சாலைகளுக்கு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அறிவிக்கப்பட்டதையும் ஆனால் அங்கு மின்சாரம் குடிநீர் வசதிகள் அளிப்பதில் அக்கறை செலுத்தப்படாமல் இருந்ததையும் நாம் பார்த்துள்ளோம்.

நண்பர்களே,

சுரங்கப்பணிகள் நடைபெறும் பல இடங்களில் ரயில் இணைப்பு இல்லாமல் இருந்தது. துறைமுகங்களை நகரத்துடன் இணைக்க ரயில் மற்றும் சாலை வசதிகள் இல்லாமல் இருப்பதையும் நாம் பார்த்துள்ளோம். இந்த காரணங்களால் உற்பத்தி, ஏற்றுமதி, மற்றும் போக்குவரத்து செலவு இந்தியாவில் எப்போதும் அதிகமாக இருந்துள்ளது. தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதில் இது மிகப் பெரிய தடையாக இருந்துள்ளது. இந்தியாவில் சரக்கு போக்குவரத்து செலவு உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 13 சதவீதமாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. போக்குவரத்து செலவு அதிகமாக உள்ளதன் காரணமாக இந்திய ஏற்றுமதியின் போட்டித்தன்மை வெகுவாக பாதிக்கப்படுகிறது. இந்திய ஏற்றுமதியாளர்கள் கோடிக் கணக்கான பணத்தை சரக்கு போக்குவரத்திற்காக செலவழிக்கின்றனர். இதன் காரணமாக அவர்களின் தயாரிப்புகள் மற்ற நாடுகளின் தயாரிப்புகளை விட அதிகமாக உள்ளன. இதன் காரணமாக வேளாண் துறையிலும் நமது விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். அதனால் இப்போதைய தேவை நாட்டில் தடையற்ற போக்குவரத்தை ஏற்படுத்துவதுதான். ஆகையால் பிரதமரின் விரைவுசக்தி பெரும் திட்டம் மிக முக்கியமான நடவடிக்கை.

நண்பர்களே,

நாட்டின் முன்னேற்றத்திற்கு கட்டுமானம் தொடர்பான அரசின் அனைத்து துறைகளின் இடையே ஒருங்கிணைப்பு கட்டாயம். மற்றும் அவர்கள் தங்களின் ஒட்டுமொத்த சக்தியை பயன்படுத்த வேண்டும் கடந்த சில ஆண்டுகளாக இந்த அணுகுமுறை நாட்டுக்கு, இதற்கு முன் இல்லாத உத்வேகத்தை அளித்துள்ளது. கடந்த 70 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா இன்று அதி வேகமாக பணியாற்றுகிறது.

நண்பர்களே,

மாநிலங்களுக்கு இடையேயான இயற்கை எரிவாயு குழாய் திட்டம் கடந்த 1987-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.  அதன் பின்பு 2014ம் ஆண்டு வரை 27 ஆண்டுகளாக 15 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு இயற்கை எரிவாயு குழாய் அமைக்கப்பட்டது. தற்போது 16 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு எரிவாயு குழாய் அமைக்கும் பணி நாடு முழுவதும் நடைபெறுகிறது, இந்தப் பணி அடுத்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

2014ஆம் ஆண்டுக்கு முந்தைய ஐந்தாண்டுகளில் ஆயிரத்து தொள்ளாயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு மட்டுமே  ரயில்பாதைகள் இரட்டிப்பாக்கும் பணி நடைபெற்றன. கடந்த ஏழு ஆண்டுகளில் 9 ஆயிரம் கிலோமீட்டருக்கு அதிகமான தூரத்திற்கு ரயில் பாதைகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன.

2014ஆம் ஆண்டுக்கு முந்தைய ஐந்தாண்டுகளில் மூவாயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு மட்டுமே ரயில்பாதைகள் மின்மயமாக்கப்பட்டன. கடந்த ஏழு ஆண்டுகளில் 24 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிகமான ரயில்பாதைகள் மின்மயமாக்கப்பட்டன.    2014ஆம் ஆண்டுக்கு முன்பாக சுமார் 250 கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன.  இன்று மெட்ரோ ரயில் 700 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது மற்றும் ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய மெட்ரோ வழித்தடப் பணி நடைபெறுகிறது. 2014ஆம் ஆண்டுக்கு முந்தைய ஐந்தாண்டுகளில் 60 பஞ்சாயத்துக்களில் மட்டுமே கண்ணாடி இழை கேபிள் இணைப்புக் கொடுக்கப்பட்டிருந்தது. கடந்த ஏழாண்டுகளில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துக்களை கண்ணாடி இழை கேபிளுடன் இணைத்துள்ளோம். கடந்த 2014ம் ஆண்டில் ஐந்து நீர்வழிப் போக்குவரத்து மட்டுமே இருந்தன. இன்று இந்தியாவில் 15 நீர்வழிப் போக்குவரத்துகள் செயல்படுகின்றனகடந்த 2014ஆம் ஆண்டில் துறைமுகங்களில் கப்பல் வந்து செல்லும் நேரம் 41 மணி நேரத்திலிருந்து 27 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதை மேலும் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நண்பர்களே,

மின் உற்பத்தி முதல் பகிர்மானம் வரை ஒட்டுமொத்த நெட்வொர்க்கும் மாற்றப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே மின் தொகுப்பு என்ற வாக்குறுதியை நாடு உணர்ந்துள்ளது. இந்தியாவில் தற்போது 4.25 லட்சம் சுற்று கிலோமீட்டர் மின்பகிர்மான வழித்தடங்கள் உள்ளன. கடந்த 2014ம் ஆண்டில் இது 3 லட்சம் சுற்று கிலோமீட்டராக இருந்தது. கடந்த 2014-ம் ஆண்டில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரி சக்தியை நாம் குறைவாக பயன்படுத்தினோம் இன்று இதை அதிகம் பயன்படுத்தும் 5 நாடுகளில் ஒன்றாக உள்ளோம். 100 ஜிகா வாட்டிற்கு மேற்பட்ட புதுபிக்கத்தக்க எரி சக்தி இலக்கை இந்தியா அடைந்துள்ளது. இது கடந்த 2014-ம் ஆண்டு திறனை விட 3 மடங்கு அதிகம்.

நண்பர்களே,

இன்று நவீன விமானப் போக்குவரத்து துறைக்கான சூழல் வேகமாக உருவாக்கப்படுகிறது. புதிய விமான நிலையங்கள் கட்டப்படுவதுடன். விமான இணைப்பும் அதிகரிக்கப்படுகிறது. அதிகளவிலான விமான வழித்தடங்களை நாம் திறந்து விட்டுள்ளோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் 100-ற்கும் மேற்பட்ட விமான வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டு குறைக்கப்பட்டுள்ளன. பயணிகளின் விமானம் பறப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதிகள் அகற்றப்பட்டுள்ளன.

நண்பர்களே,

நாட்டில் உள்ள விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வருமானத்தை அதிகரிக்க பதப்படுத்தும் தொழில் தொடர்பான உள்கட்டமைப்புகளும் விரைவாக விரிவுப்படுத்தப்படுகின்றன. 2014ம் ஆண்டில் நாட்டில்  இரண்டு மிகப் பெரிய உணவுப் பூங்காக்கள் மட்டுமே இருந்தன. இன்று  19 மிகப் பெரிய உணவுப் பூங்காக்கள் செயல்படுகின்றனதற்போது இதை 40-க்கும் மேற்பட்டதாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே,

முதல்முறையாக பாதுகாப்புத் துறையிலும் விரிவான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழகம் மற்றும் உத்திரப் பிரதேசத்திலுள்ள இரண்டு பாதுகாப்பு தளவாட தொழில்வழித் தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப உற்பத்தியிலும் இன்று நாம் முன்னணி நாடுகளில் ஒன்றாக உள்ளோம். ஒரு காலத்தில நம்மிடம் 5 உற்பத்தி தொகுப்புகள் இருந்தன. இன்று 15 உற்பத்தி தொகுப்புகளை உருவாக்கியுள்ளோம் இதை இரட்டிப்பாக்க நாம் முயற்சித்து வருகிறோம்.

நண்பர்களே,

நமது இலக்குகள் அசாதாரணமானவை மற்றும் இதற்கு அசாதாரணமான முயற்சிகள் தேவை. இந்த இலக்குகளை அடைய பிரதமரின் அதிவிரைவு சக்தித் திட்டம் மிக உதவிகரமாக இருக்கும்அரசின் உதவிகளைப் பெறுவதில் ஜன்தன், ஆதார் , செல்போன் ஆகிய மூன்றும் புரட்சியை ஏற்படுத்தியது போல்  பிரதமரின் விரைவு சக்தி திட்டமும் உள்கட்டமைப்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும். அனைத்து மாநில அரசுகளும் இந்த முயற்சியில் பங்கெடுக்க நான் மீண்டும் அழைப்பு விடுக்கிறேன். இத்திட்டத்துடன் இணைந்திருக்கும் அனைவருக்கும் நான் விடுக்கும் வேண்டுகோள் இது. இந்த முக்கியமான திட்டத்தில் இணைந்ததற்காக அனைவருக்கும் நன்றி. பிரதமரின் விரைவு சக்தி திட்டத்தை தனியார் துறையினரும் ஆய்வு செய்வர் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். அனைவருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துகள்.

மிக்க நன்றி மற்றும் மனமார்ந்த வாழ்த்துகள்.

*****



(Release ID: 1764361) Visitor Counter : 435