பிரதமர் அலுவலகம்

எக்ஸ்போ 2020 துபாயில் உள்ள இந்திய அரங்கிற்கு பிரதமரின் செய்தி

”யுஏஇ மற்றும் துபாய் ஆகியவற்றுடன் நெடுங்காலத்திற்கு நமது நெருக்கமான மற்றும் வரலாற்று உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள எக்ஸ்போ உதவும்”
”ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறை ஏற்படும் பெருந்தொற்றுக்கு எதிராக மனித குலம் மீண்டெழுந்து நிற்கும் என்பதற்கு இந்த எக்ஸ்போ ஒரு சாட்சியமாக விளங்குகிறது”
”இந்தியா உங்களுக்கு அதிகபட்ச வளர்ச்சியை வழங்குகிறது, அளவிடக் கூடிய வளர்ச்சி, உறுதிப்பாட்டில் வளர்ச்சி, பலன்களில் வளர்ச்சி. இந்தியாவுக்கு வாருங்கள், எங்களுடைய வளர்ச்சிக் கதையின் ஒரு அங்கமாக இருங்கள்”
”எங்களின் பொருளாதார வளர்ச்சி என்பது தொழிற்சாலைகள் மற்றும் ஸ்டார்ட்-அப்களின் கூட்டுறவால் வலுப்படுத்தப்பட்டு உள்ளது”
”கடந்த 7ஆண்டுகளில் இந்திய அரசு பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்தப் போக்கைத் தொடர்வதற்கு நாங்கள் மேலும் பணியாற்றுவோம்”

Posted On: 01 OCT 2021 8:53PM by PIB Chennai

எக்ஸ்போ 2020 துபாயில் உள்ள இந்திய அரங்கிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அனுப்பி உள்ள செய்தியில் இந்த எக்ஸ்போவை வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று குறிப்பிட்டு உள்ளார். இது ”மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் நடைபெறும் முதல் எக்ஸ்போ ஆகும். யுஏஇ மற்றும் துபாய் ஆகியவற்றுடன் நமது நெருக்கமான மற்றும் வரலாற்று உறவுகளை நெடுங்காலத்திற்கு வலுப்படுத்திக் கொள்ள இந்த எக்ஸ்போ உதவும் என்று நான் நம்புகிறேன்” என பிரதமர் கூறி உள்ளார். யுஏஇ-ன் தலைவர் மற்றும் அபுதாபியின் ஆட்சியாளரான மாட்சிமை பொருந்திய ஷேக் காலிஃபா பின் சயீத் பின் அல் நகியான் மற்றும் யுஏஇ-ன் துணைத் தலைவர் மற்றும் துபாயின் ஆட்சியாளரான மாட்சிமை பொருந்திய ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தும் ஆகியோருக்கு பிரதமர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்து உள்ளார். நமது ராஜாங்க உறவில் வளர்ச்சி ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்த அபுதாபியின் பட்டத்து இளவரசரான மாட்சிமை பொருந்திய ஷேக் முகமது பின் சயீத் அல் நகியானுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்ததோடு இரு நாடுகளின் வளர்ச்சிக்கும் வளமைக்கும் நமது பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

எக்ஸ்போ 2020ன் முதன்மை மையக் கருத்தான, ”மனங்களை இணைத்தல், எதிர்காலத்தை உருவாக்குதல்” என்பதை பிரதமர் சுட்டிக்காட்டி உள்ளார். புதிய இந்தியாவை உருவாக்க நாம் முன்னேறி செல்கையில் அதற்காக எடுக்கப்பட்டு வரும் இந்திய முயற்சிகளிலும் இந்த மையக் கருத்தின் ஆன்மாவானது வெளிப்படுகிறது. ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறை ஏற்படும் பெருந்தொற்றுக்கு எதிராக மனித குலம் மீண்டெழுந்து நிற்கும் என்பதற்கு இந்த எக்ஸ்போ ஒரு சாட்சியமாக விளங்குகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இந்திய அரங்கின் மையக் கருத்தான ”வெளிப்படைத்தன்மை, வாய்ப்பு மற்றும் வளர்ச்சி என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர் இன்று உலகிலேயே மிகவும் வெளிப்படையான நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது என்பதை வலியுறுத்தினார். கற்றல், கண்ணோட்டம், புத்தாக்கம், முதலீடு ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மை இருக்கிறது.  அளவிடக் கூடிய வளர்ச்சி, உறுதிப்பாட்டில் வளர்ச்சி, பலன்களில் வளர்ச்சி என இந்தியா உங்களுக்கு அதிகபட்ச வளர்ச்சியை வழங்குகிறது.   இந்தியாவுக்கு வாருங்கள், எங்களுடைய வளர்ச்சிக் கதையின் ஒரு அங்கமாக இருங்கள்” என்று முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மேலும் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவின் துடிப்பு மற்றும் பன்முகத்தன்மை குறித்து பேசும் போது ”இந்தியா திறமையின் ஆற்றல் மையமாக விளங்குகிறது, தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் பல முன்னேற்றங்களை உருவாக்கி உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். எங்களின் பொருளாதார வளர்ச்சி என்பது தொழிற்சாலைகள் மற்றும் ஸ்டார்ட்-அப்களின் கூட்டுறவால் வலுப்படுத்தப்பட்டு உள்ளது. இத்தகைய பன்முக துறைகள் குறித்த இந்தியாவின் மிகச் சிறந்த சாதனைகளை இந்திய அரங்கு உலகிற்கு எடுத்துக்காட்டும். இந்திய அரசு பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு சீர்திருத்தங்களை கடந்த 7 ஆண்டுகளில் மேற்கொண்டுள்ளது.  இந்தப் போக்கைத் தொடர்வதற்கு நாங்கள் மேலும் பணியாற்றுவோம் என்று பிரதமர் தெரிவித்தார்.

 

*********



(Release ID: 1760574) Visitor Counter : 158