பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கஸ்தூரிபாய் காந்தி மார்க் மற்றும் ஆப்பிரிக்க அவென்யூவில் பாதுகாப்பு அலுவலக வளாகங்களை பிரதமர் திறந்து வைத்தார்

இந்திய சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டில் புதிய இந்தியாவின் தேவைகள் மற்றும் லட்சியங்களை நிறைவேற்றுவதற்கு நாட்டின் தலைநகரை மேம்படுத்துவதில் மேலும் ஒரு முக்கிய நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டுள்ளது: பிரதமர்

தலைநகரில் நவீன பாதுகாப்பு உறைவிடம் கட்டமைப்பதை நோக்கிய மிகப்பெரிய முயற்சி: பிரதமர்

எந்த ஒரு நாட்டின் தலைநகரமும் அந்நாட்டின் சிந்தனை, உறுதித் தன்மை, வலிமை மற்றும் கலாச்சாரத்தின் சின்னமாகத் திகழ்கிறது: பிரதமர்

இந்தியாதான் ஜனநாயகத்தின் அன்னை, குடிமக்களை மையமாகக்கொண்டு இந்தியாவின் தலைநகரம் செயல்பட வேண்டும்: பிரதமர்

எளிதான வாழ்க்கை முறை மற்றும் எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான அரசின் முயற்சியில் நவீன உள்கட்டமைப்புக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது: பிரதமர்

கொள்கைகளும், எண்ணங்களும் தெளிவாக இருக்கும்போது, மனோபலம் வலிமையாக உள்ளது, முயற்சிகள் நேர்மையாக இருப்பதுடன், அனைத்தும் சாத்தியமாகிறது: பிரதமர்

நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் திட்டங்கள் நிறைவடைவது, மாற்றம் கண்டுள்ள அணுகுமுறை மற்றும் எண்ணங்களின் வெளிப்பாடு: பிரதமர்

Posted On: 16 SEP 2021 12:56PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, புதுதில்லியில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி மார்க் மற்றும் ஆப்பிரிக்க அவென்யூவில் பாதுகாப்பு அலுவலக வளாகங்களை இன்று திறந்து வைத்தார். ஆப்பிரிக்க அவென்யூவில் உள்ள பாதுகாப்பு அலுவலகம் வளாகத்திற்கு நேரில் சென்ற அவர், ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், புதிய வளாகங்கள் இன்று திறக்கப்பட்டிருப்பதன் வாயிலாகஇந்திய சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டில் புதிய இந்தியாவின் தேவைகள் மற்றும் லட்சியங்களை நிறைவேற்றுவதற்காக நாட்டின் தலைநகரை மேம்படுத்துவதில் மேலும் ஒரு முக்கிய நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டுள்ளது என்று கூறினார். இரண்டாவது உலகப் போரின்போது குதிரை தொழுவம் மற்றும் ராணுவ குடியிருப்பின் தேவைகளைக் கருத்தில் கொண்டு அமைக்கப்பட்ட குடிசை பகுதிகளில் இராணுவம் சம்பந்தமான பணிகள்  நீண்டகாலம் மேற்கொள்ளப்பட்டு வந்ததாக அவர் வேதனை தெரிவித்தார். “நமது பாதுகாப்புப் படைகளின் பணிகளை வசதியானதாகவும், தரமானதாகவும் மாற்றும் முயற்சிகளுக்கு இந்தப் புதிய பாதுகாப்பு அலுவலக வளாகம் வலுசேர்க்கும்”, என்று அவர் தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான பணிகளை கஸ்தூரிபாய் காந்தி மார்க் மற்றும் ஆப்பிரிக்க அவென்யூவில் அமைக்கப்பட்டுள்ள இந்த நவீன அலுவலகங்கள் சீரிய முறையில் நீண்டகாலம் மேற்கொள்ளும் என்று பிரதமர் கூறினார். தலைநகரில் நவீன பாதுகாப்பு உறைவிடம் கட்டமைப்பதை நோக்கிய மிகப்பெரிய முயற்சி, இது. தற்சார்பு இந்தியாவின் சின்னமாக, இந்த வளாகங்களில் இந்திய கலைஞர்களின் கண்கவர் கலைப்பொருட்கள் இடம்பெற்றிருப்பதை அவர் பாராட்டினார். “தில்லியின் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அதே வேளையில், நமது கலாச்சாரத்தின் பன்முகத் தன்மையின் நவீன வடிவத்தையும் இந்த வளாகங்கள் பிரதிபலிக்கின்றன”, என்று அவர் தெரிவித்தார்.

தலைநகரைப் பற்றி நாம் பேசும்போது, அது வெறும் நகரம் மட்டுமல்ல என்று அவர் குறிப்பிட்டார். எந்த ஒரு நாட்டின் தலைநகரமும் அந்நாட்டின் சிந்தனை, உறுதித் தன்மை, வலிமை மற்றும் கலாச்சாரத்தின் சின்னமாகத் திகழ்கிறது. இந்தியாதான் ஜனநாயகத்தின் அன்னை. எனவே, குடிமக்களை மையமாகக்கொண்டு இந்தியாவின் தலைநகரம் செயல்பட வேண்டும்.

எளிதான வாழ்க்கை முறை மற்றும் எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான அரசின் முயற்சியில் நவீன உள்கட்டமைப்பின் பங்கை அவர் வலியுறுத்தினார். “இந்த சிந்தனையுடன் தான் மத்திய விஸ்டா திட்டப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன”, என்று பிரதமர் கூறினார். தேசிய தலைநகரின் லட்சியங்களுக்கு ஏற்ப புதிய கட்டமைப்புகளை உருவாக்கும் நடவடிக்கைகளை விளக்கிய பிரதமர், மக்கள் பிரதிநிதிகளின் இல்லங்கள், பாபா சாகேப் அம்பேத்கரின் நினைவுகளை பாதுகாக்கும் நடவடிக்கைகள், ஏராளமான கட்டிடங்கள், தியாகிகளின் நினைவிடங்கள் உட்பட பல்வேறு கட்டமைப்புகள் தலைநகரின் புகழை மேம்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

24 மாதங்களில் நிறைவடைய வேண்டிய பாதுகாப்பு அலுவலக வளாகப் பணிகள், 12 மாதங்களிலேயே நிறைவடைந்து சாதனை படைத்திருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். அதனுடன் கொரோனா உருவாக்கிய சூழலால் தொழிலாளர் உள்ளிட்ட பல்வேறு சவால்களும் எதிர் கொள்ளப்பட்டன. கொரோனா காலகட்டத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இந்தத் திட்டத்தால் வேலை வாய்ப்பைப் பெற்றனர். அரசு நிர்வாகத்தின் புதிய சிந்தனை மற்றும் அணுகுமுறையால் இது சாத்தியமானதாக பிரதமர் தெரிவித்தார். “கொள்கைகளும், எண்ணங்களும் தெளிவாக இருக்கும்போது, மனோபலம் வலிமையாக உள்ளது, முயற்சிகள் நேர்மையாக இருப்பதுடன், அனைத்தும் சாத்தியமாகிறது”, என்றார் அவர்.

இந்தப் பாதுகாப்பு அலுவலக வளாகங்கள், மாறிவரும் பணி கலாச்சாரம் மற்றும் அரசின் முன்னுரிமைகளின் வெளிப்பாடு என்று பிரதமர் கூறினார். பல்வேறு அரசுத் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை முறையாகப் பயன்படுத்துவது அதுபோன்ற ஒரு முன்னுரிமை என்று அவர் தெரிவித்தார். இதற்கு முன்பு இதுபோன்ற வளாகங்கள் ஐந்து மடங்கு அதிகமான நிலங்களில் கட்டப்பட்டதற்கு மாற்றாக இந்தப் பாதுகாப்பு அலுவலக வளாகங்கள் 13 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டிருப்பதாக பிரதமர் எடுத்துரைத்தார். அடுத்த 25 ஆண்டுகளில், இதுபோன்ற முயற்சிகள், அரசு அமைப்புமுறையின் செயல்திறனுக்கு ஆதரவளிக்கும் என்றும் அவர் கூறினார். பொதுவான மத்திய செயலகம், இணைக்கப்பட்ட கூட்ட அரங்கு, மெட்ரோ போன்ற போக்குவரத்தின் வாயிலாக சுமுகமான இணைப்பு உள்ளிட்டவை தேசிய தலைநகரை மக்களுக்கு உகந்ததாக மாற்றுவதற்கு உதவிகரமாக இருக்கும் என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

 

------(Release ID: 1755428) Visitor Counter : 179