பிரதமர் அலுவலகம்

இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சுகாதார சேவைப் பணியாளர்கள் மற்றும் கொவிட் தடுப்பூசி பயனாளிகளுடனான கலந்துரையாடலின் போது பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 06 SEP 2021 1:20PM by PIB Chennai

பிரதம சேவகர் என்ற முறையில் மட்டுமின்றி, ஒரு குடும்ப உறுப்பினர் என்ற முறையில், இமாச்சலப்பிரதேசம் இன்று எனக்கு பெருமிதம் தேடித் தந்துள்ளது.  சிறிய அளவிலான முன்னுரிமைகளுக்குக்கூட இமாச்சல பிரதேசம் போராடிக் கொண்டிருந்ததை நான் பார்த்திருக்கிறேன், ஆனால் தற்போது இமாச்சலப் பிரதேசம்  வளர்ச்சியின் கதையை எழுதிக் கொண்டிருப்பதை நான் பார்க்கிறேன்.   ஆண்டவனின் ஆசீர்வாதத்தாலும், இமாச்சல அரசின் விடாமுயற்சி மற்றும் இமாச்சல மக்களின் விழிப்புணர்வு காரணமாகவே இது சாத்தியமாகியுள்ளது.  என்னுடன் கலந்துரையாடும் வாய்ப்பு பெற்றவர்கள் மற்றும் ஒட்டுமொத்தக் குழுவினருக்கும் மீண்டும் ஒருமுறை எனது பாராட்டுக்களை உரித்தாக்குகிறேன்.   குழுவாக செயல்பட்டதன் விளைவாக, இமாச்சலப்பிரதேசம் மகத்தான சாதனைகளைப் படைத்துள்ளது.  உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்! !

இமாச்சலப் பிரதேச ஆளுநர் திரு.ராஜேந்திர அர்லேகர் அவர்களே, சுறுசுறுப்புமிக்க மிகவும் பிரபலமான முதலமைச்சர் திரு.ஜெய் ராம் தாக்கூர் அவர்களே, நமது நாடாளுமன்ற உறுப்பினர்களே, பாரதிய ஜனதா கட்சியின்  தேசியத் தலைவரும் இமாச்சலப்பிரதேசத்தின் அதிசய மனிதருமான திரு ஜெகத் பிரகாஷ் நட்டா அவர்களே, மத்திய அமைச்சர் திரு.அனுராக் தாக்கூர் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினரும், இமாச்சல பிஜேபி தலைவருமான திரு. சுரேஷ் காஷ்யப் அவர்களே, அமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, பஞ்சாயத்து பிரதிநிதிகளே, இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த எனதருமை சகோதர, சகோதரிகளே!

கடந்த 100 ஆண்டுகளில் இதுவரை கண்டிராத, இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதில் இமாச்சலப்பிரதேசம் முன்னோடியாக உருவெடுத்துள்ளது.  தகுதியுடைய மக்கள் அனைவருக்கும், குறைந்தது ஒரு தவணை கொரோனா தடுப்பூசியையாவது செலுத்திய முதல் மாநிலமாக இமாச்சல் உருவெடுத்துள்ளது.  இது மட்டுமின்றி, மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பேருக்கு மேல், இரண்டாவது டோஸ்ஸை செலுத்துவதிலும் இமாச்சல் சாதனை படைத்துள்ளது.  

நண்பர்களே,

இமாச்சல மக்களின் இந்த வெற்றி, நாட்டின் தன்னம்பிக்கையை அதிகரித்திருப்பதுடன், தற்சார்பு அடைவது எந்தளவுக்கு முக்கியம் என்பதையும் நினைவூட்டியுள்ளது.   தடுப்பூசி தயாரிப்பில் சுயசார்பு அடைந்ததன் காரணமாகவே, அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்துவதுடன், 130 கோடி இந்தியர்களின் நம்பிக்கையையும் பெற முடிந்துள்ளது.   ஒரே நாளில் 1.25 கோடி தடுப்பூசிகளைச் செலுத்தி இந்தியா வரலாறு படைத்துள்ளது.   இந்தியாவில், ஒரு நாளில் செலுத்தப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, பல நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விட அதிகமாகும்.  இந்தியர்களின் கடின உழைப்பு மற்றும் துணிச்சல் தான், இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்தை வெற்றியடையச் செய்துள்ளது.   75வது சுதந்திர தினத்தின்போது செங்கோட்டையிலிருந்து நான் ஆற்றிய உரையில் குறிப்பிட்ட ‘அனைவரின் முயற்சி‘ என்பதன் பிரதிபலிப்பே இதற்குக் காரணம்.  சிக்கிம் மற்றும் தாத்ரா நாகர் ஹவேலியும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்துவதில் 100%-ஐ எட்டியுள்ளன.   முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், இரண்டாவது தவணையை செலுத்துவதிலும் நாம் தற்போது கவனம் செலுத்த வேண்டும். 

சகோதர, சகோதரிகளே,

தடுப்பூசி இயக்கத்தை இமாச்சலப் பிரதேசம் வேகமாக மேற்கொண்டதற்கு, தன்னம்பிக்கையும் ஒரு அடிப்படை ஆகும்.  தனது திறமை மீதும், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இந்திய விஞ்ஞானிகளின் திறமை மீதும் இமாச்சலப் பிரதேசம் நம்பிக்கை கொண்டுள்ளது.   அனைத்து சுகாதாரப் பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற சகாக்களின் அபார உணர்வுகளின் விளைவாகத்தான் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.   மருத்துவர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள் அல்லது பிற உதவியாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையுடன் தொடர்புடையவர்களின் கடின உழைப்பும் இதற்குக் காரணம் ஆகும்.   இதிலும், நமது சகோதரிகளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது ஆகும்.   களத்தில் அவர்கள் எதிர்கொண்ட சவால்களின் விவரத்தை, சற்றுமுன் நமது சகாக்கள் தெரிவித்தனர்.  

நண்பர்களே,

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள லஹோல்-ஸ்பிட்டி போன்ற தொலைதூர மாவட்டம்கூட, முதல் டோஸ் தடுப்பூசியை 100% செலுத்துவதில் முன்னணியில் இருப்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.   அடல் சுரங்கப்பாதை அமைக்கப்படும் வரை, இந்தப் பகுதி, பல மாதங்களுக்கு நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கும்.    நம்பிக்கை, கல்வி மற்றும் அறிவியல் ஆகியவை வாழ்க்கையை எந்தளவிற்கு மாற்றும் என்பதை, இமாச்சல் மீண்டும் நிரூபித்துள்ளது.   உலகின் மாபெரும் மற்றும் விரைவான தடுப்பூசி இயக்கத்திற்கு, நாட்டின் கிராமப்புற சமுதாயம் அதிகாரமளித்துள்ளதற்கு இமாச்சலப்பிரதேசமே சான்றாகும்.  

நண்பர்களே,

பெருமளவிலான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய இமாச்சலப் பிரதேசத்தின் சுற்றுலாத் தொழிலும், விரைவான தடுப்பூசி இயக்கத்தால் பயனடைந்துள்ளது.  எனினும்,  முகக் கவசம் அணிவதையும், இரண்டு கஜ தூரம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.  கொரோனா பெருந்தொற்று காலத்தில், வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கு, பல இளைஞர்களுக்கு மிகவும் உகந்த இடமாக இமாச்சலப் பிரதேசம் மாறியுள்ளது.  

சகோதர, சகோதரிகளே,

கொரோனா காலத்திலும், வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை இணைப்பதில் ஆக்கப்பூர்வ விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்பதை இமாச்சலப் பிரதேசம் கண்கூடாகப் பார்த்துள்ளது.  தற்போது நாட்டின் மிகப்பெரிய முன்னுரிமையாக இருப்பது,  சாலை, ரயில், விமானம் அல்லது இணையதள இணைப்பு தான்.   8-10 வீடுகள் உள்ள குடியிருப்புகள்கூட தற்போது, பிரதமரின் கிராமப்புற சாலைத் திட்டத்தின்கீழ் இணைப்பு வசதியைப் பெற்றுள்ளன.   இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் அகலப்படுத்தப்பட்டு வருகின்றன.   இதுபோன்ற வலுவான இணைப்புகளால், சுற்றுலாத் தொழிலும்,  காய்கறி மற்றும் பழங்கள் சாகுபடி செய்யும் தோட்டக்காரர்கள் மற்றும் விவசாயிகளும் நேரடியாக பயன் அடைந்துள்ளனர்.  

சகோதர, சகோதரிகளே,

நவீன மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களால் இமாச்சலப்பிரதேசம் வெகு விரைவில் அதிகப் பயனடைய உள்ளது.   கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் பெரும் மாற்றங்கள் ஏற்படப் போகின்றன.   இதன் மூலம், தொலைதூரத்தில் உள்ள பள்ளிக்கூடங்கள் மற்றும் சுகாதார மையங்கள்கூட, காணொலி வாயிலாக, பெரிய பள்ளிக்கூடங்கள் மற்றும் பெரிய மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுடன் இணைக்கப்பட உள்ளன.  

சகோதர, சகோதரிகளே,

இமாச்சலப்பிரதேசம், தற்போது, அபார வளர்ச்சிப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.  ஆனால், இயற்கைச் சீற்றங்கள் தான் பெரும் சவாலாக உள்ளன.   எனவே, நிலச்சரிவு குறித்து முன்கூட்டியே எச்சரிக்கக் கூடிய ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கக் கூடிய அறிவியல் தீர்வுகாண வேண்டும்.  

நண்பர்களே,

கிராமங்களையும், சமுதாயத்தையும் இணைத்தால், எத்தகைய ஆக்கப்பூர்வ விளைவுகள் ஏற்படும் என்பதற்கு, ஜல் ஜீவன் இயக்கம், ஒரு சிறந்த உதாரணம் ஆகும்.   இமாச்சலப்பிரதேசத்தில், முன்பு சாத்தியமற்றது என்று கருதப்பட்ட  இடங்களுக்குக் கூட, தற்போது குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.   வன வளங்களுக்கும் அதே அணுகுமுறையைப் பின்பற்றலாம்.   அந்த வகையில்,  கிராமங்களில் உள்ள சுய உதவிக் குழுக்களில் இடம்பெற்றுள்ள சகோதாரிகளின் பங்களிப்பை வலுப்படுத்த வேண்டும்.   இமாச்சலப்பிரதேச  வனப்பகுதிகளில், ஏராளமான மூலிகைகள், காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைக்கின்றன.  கடினமாக உழைக்கும் நமது சகோதரிகளால், ஆக்கப்பூர்வ அறிவியல் முறைகள் மூலம், இவற்றை பன்மடங்காக அதிகரிக்க முடியும்.    நமது சகோதரிகளுக்காக, மின்னணு வணிகம் என்ற புதிய நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.  இந்த நடைமுறை மூலம், நமது சகோதரிகள் தங்களது விளைபொருட்களை உள்நாட்டிலும், உலகின் பிற நாடுகளிலும் விற்பனை செய்யலாம்.   இமாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்த சகோதரிகள் தற்போது, ஆப்பிள், ஆரஞ்சு, காளான், தக்காளி போன்றவற்றை, நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்புகின்றனர்.  மத்திய அரசு, ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வேளாண் கட்டமைப்பு நிதியம் ஒன்றை உருவாக்கியுள்ளது.   இமாச்சலப்பிரதேச விவசாயிகள் மற்றும் தோட்ட உரிமையாளர்கள் இந்த நிதியத்தை அதிகளவு பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். 

நன்பர்களே,

75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில், இமாச்சலப்பிரதேச விவசாயிகள் மற்றும் தோட்ட உரிமையாளர்களிடம் மேலும் ஒரு வேண்டுகோளை முன்வைக்க நான் விரும்புகிறேன்.   அடுத்த 25 ஆண்டுகளில், இமாச்சலப்பிரதேசத்தை இயற்கை விவசாய பூமியாக மாற்ற நாம் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.  நமது மண், இரசாயனங்களின் பிடியிலிருந்து படிப்படியாக விடுவிக்கப்பட வேண்டும்.   அதிகளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டாலும், எத்தகைய கவனக்குறைவுக்கும் இடமளித்துவிடாமல் இருக்க வேண்டும்.   தொடக்கத்திலிருந்து நான் கூறிவரும் மந்திரங்களை (தடுப்பூசி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றுதல்) மறந்துவிடக்கூடாது.  இமாச்சலப் பிரதேச மக்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.   நன்றி!

                                                               

*******

 



(Release ID: 1752864) Visitor Counter : 249